திருமுறைத்தலங்கள்
மலை (சேர) நாட்டுத் தலம்.
திருஅஞ்சைக்களம்
ஸ்ரீவாஞ்சிகுளம்
சென்னை - கொச்சி இருப்புப்பாதையில் 'இரிஞாலக்குடா' நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 A.e. தொலைவில் உள்ள இத்தலத்தினை அடையலாம், திருச்சூரிலிருந்து 32 A.e. தொலைவில் உள்ளது. மலை நாட்டில் உள்ள ஒரே திருமுறைத்தலம். மக்கள் வழக்கில் ஸ்ரீ வாஞ்சி குளம் என்று வழங்கப்படுகிறது. பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம். தனிப்பேருந்தில் செல்வோர் கோயில்வரை செல்லலாம், சேரமான் பெருமாள் ஆண்ட ஊர் - கொடுங்கோளூர்,பக்கத்தில் 1 1/2 கி.மீ.ல் உள்ளது. கோயில் அமைந்துள்ள வீதியின் முனையில் மகாதேவர் கோயில் என்று, வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது.
கேரள பாணியில் அமைந்த கோயில்.
இறைவன் - அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்.
இறைவி - உமையம்மை.
தீர்த்தம் - சிவகங்கை.
தலமரம் - சரக் கொன்றை.
சுந்தரர் பாடல் பெற்ற தலம்.
கோயில் பெருவாயில் மேற்கு நோக்கியது - சுவாமி சந்நிதி கிழக்கு. அம்மை சந்நிதி தனியே இல்லை. சுவாமிக்குப் பக்கத்திலேயே உள்ளது. துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன. உள்ளே குளம் உள்ளது. கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடிவெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுண்டாம்.
மூலவர் மிகச்சிறிய சிவலிங்கம். கோஷ்டமூர்த்த அமைப்பு இல்லை. விமானத்தில் யோக நரசிம்மர் உருவம் உள்ளது. உக்கிரரூபம். இங்குள்ள நடராஜர், சேரமான் பெருமாள் பூசித்தது. பஞ்சலோகச்சிலை. இதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்றெழுதப்பட்டுள்ளது.
கோயிலுக்குச் செல்லும் போது, வீதியில் நடுவில் உள்ள பெரிய மேடையை "யானைவந்த மேடை" என்று வழங்குகிறார்கள். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றது வரலாறு.
கிழக்கு ராஜகோபுர முன்புறத்தில் நுழையும்போது, பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்களும் உள்ளன. (யானை வந்து ஏற்றிச் சென்றதாக ஐதீகம்)
சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று, ஆண்டுதோறும் கோவை, சேக்கிழார் திருக்கூட்டத்தார் இத்தலத்திற்க வந்து சுந்தரர், சேரமானுக்கு அபிஷேகம் செய்து இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். பாதுகாப்பு கருதி, கொடுங்கோளூர் பகவதி. அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள சுந்தரர், சேரமான் சிலைகளுக்கு அங்கேயே உள்ள திருமண்டபத்தில் அபிஷேகம் செய்து அலங்கரித்து யானை குதிரை வாகனங்களில் வைத்து, அஞ்சைக் களத்திற்கு விழாப்பொலிவுடன் எடுத்துச் செல்லப்பட்டு, இத்திருவிழா சிரத்தையுடன் நன்கு செய்யப்படுகிறது. திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் சேரமான் பெருமாள் பெயரில் ரூ 5000/- தேவாரப் பரிசு அறக்கட்டளையும், விழாவில் மகேஸ்வர பூஜைக்கு ரூ 7000/- அறக் கட்டளையும் ஏற்படுத்தியுள்ளார்கள். கேரள வழிபட்டு முறையில் இத்திருக்கோயிலில் (தந்திரமுறையில்) வழிபாடுகள் நடந்தாலும், இந்த ஒரு நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை நடைபெறுகின்றது. ஏகாதசருத்ரம் சங்காபிஷேகம், ம்ருத்யுஞ்சஹோமம் முதலியவைகள் இக்கோயிலில் நடத்தப் பெறுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள மரவேலைப்பாடுகள் காணத்தக்கவை.
"சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே
சிறியார் பெரியார் மனத்தேறலுற்றால்
முந்தித் தொழுவார் இறவார் பிறவார்
முனிகள் முனியே அமரர்க்கமரா
சந்தித்தடமால் வரைபோற்றிரைக (ள்)
தணியாதிடறுங் கடலங்கரைமேல்
அந்தித் தலைச் செக்கர் வானே யத்தியா (ல்)
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே" (சுந்தரர்)
(வெள்ளையானையின் மீதேறிக் கயிலை சென்றபோது சுந்தரர் பாடியருளியது வருமாறு.)
'தானெனைமுன் படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ள மத்தயானை யருள்புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலையுத்தமனே'.
'மந்திரமொன்றறியோன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களாற்றுரிசே செயுங் தொண்டனெனை
அந்தரமால் விசும்பில் அழகானை அருள்புரிந்த
துந்தரமோ நெஞ்சமே நொடித்தான் மலையுத்தமனே'.
'மண்ணுலகிற் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேனின்றுகண் டொழிந்தேன்
விண்ணுலகத்தவர்கள் விரும்பிய வெள்ளையானையின்மேல்
என் உடல் காட்டுவித்தான் நொடித்தான் மலையுத்தமனே'.
'இந்திரன் மால் பிரமன் எழிலார் மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை யருள்புரிந்து
மந்திரமாமுனிவர் இவனாரென எம் பெருமான்
நந்தமரூரன் என்றார் நொடித்தான்மலை உத்தமனே'.
'ஊழி தொறூழி முற்றுயர் பொன்னொடித்தான் மலையைச்
சூழிசையின கரும்பின் சுவை நாவலவூரன் சொன்ன
ஏழிசையின் தமிழால் இசைந்தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சையப்பர்க் (கு) அறிவிப்பதே.' (சுந்தரர்)
(நொடித்தான் மலை - திருக்கயிலை)
"நஞ்சை களத்துவைத்தநாத எனத் தொண்டர் தொழ
அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே.' (அருட்பா)
அஞ்சல் முகவரி -
ஸ்ரீ மஹாதேவ சுவாமி திருக்கோயில்
ஸ்ரீ வாஞ்சிகுளம் - அஞ்சல்
(வழி) கொடுங்களூர் - 680 664.
கேரளா - திருச்சூர் மாவட்டம்.