திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்
திருவலிதாயம் - சென்னை (பாடி)
தற்போது சென்னைக்கு அருகில் உள்ள 'பாடி' என்னும் இடமே 'திருவலிதாயம்' என்னும் தலம் ஆகும்.
சென்னை ஆவடிச்சாலையில் 'பாடி' உள்ளது. இப்பகுதி தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதியாகும். 'டி.வி.எஸ், லூகாஸ்' நிறுத்தத்தில் இறங்கி, எதிரில் போகும் பாதையில் உள்ளே சென்றால் ஊர் நடுவே கோயில் உள்ளது. கோயில் புதுப்பொலிவுடன் திகழ்கின்றது. கஜப்பிரஷ்ட விமான அமைப்புடைய அழகான கோயில்.
பரத்வாஜர், இராமர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், வலியன் (கருங்குருவி) முதலானோர் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இத்தலத்தில் பௌர்ணமி விசேஷமாகச் சொல்லப்படுகின்றது. இராமலிங்க சுவாமிகளின் அருட்பாவிலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. பரத்வாஜ முனிவர், வலியனாக (கருங்குருவியாக) சாபம் பெற்றார். இச்சாபம் நீங்க இத்தலத்து வந்து தீர்த்தம் உண்டாக்கி, இறைவனைப் பூசித்துச் சாபம் நீங்கப் பெற்றார் என்பது தலவரலாறு. பிரம்மாவுக்குக் கமலை, வல்லி என இரு பென்கள் தோன்றினார் என்றும் அவர்களை விநாயகர் மணந்துகொண்டார் என்றும் வரலாறு ஒன்று சொல்லப்படுகின்றது.
இறைவன் - வல்லீஸ்வரர், வலிதாயநாதர்
இறைவி - ஜகதம்பாள், தாயம்மை
தலமரம் - பாதிரி
தீர்த்தம் - பரத்வாஜ தீர்த்தம்
சம்பந்தர் பாடல் பெற்றது. அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடலும் உள்ளது.
மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம். நுழைந்ததும் நேரே
கொடிக்கம்பம் சந்நிதியும் தெரிகின்றது. விசாலமான உள் இடம். வெளிப்பிரகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. ராஜகோபுரத்துள் நுழைந்ததும் வலப்பால் மூலையில் (வெளிப்பிராகார மூலையில்) நவக்கிரக சந்நிதி உள்ளது. நவக்கிரக சந்நிதிக்கு எதிரில் தீர்த்தக்கிணறு உள்ளது. இக்கிணற்று நீர் இளநீரைப்போன்று அருமையான சுவையுடையதாக விளங்குகிறது. உள் வாயிலைக்கடந்ததும் இடப்பால் அருணகிரி நாதரின் திருமேனியும் அவர் இத்தலத்துப் பாடியுள்ள திருப்புகழும் காணப்படுகின்றன.
பிராகரத்தில் விநாயகர் சந்நிதியிடத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. அதற்குப் பக்கத்தில்தான் விநாயகர் சந்நிதி உள்ளது. அதுபோலவே சுப்பிரமணியர் சந்நிதியும் உரிய இடத்தில் இல்லாமல் சற்று முன்பாகவே அதாவது கருவறையின் நேர் பின்புறத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. சந்நிதியில் சுப்பிரமணியருக்கு முன்னால் சிவலிங்கத் திருமேனி உள்ளது.
பக்கத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி உள்ளது. அறுபத்துமூவர் முழுவதுமில்லை. சில திருமேனிகளே உள்ளன. பரத்வாஜர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. அடுத்து நால்வர் பிரதிஷ்டை, பைரவர், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. நடராசப் பெருமானுக்குப் பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டும் தெற்கு நோக்கிய தரிசனம். கோஷ்ட மூர்த்தமாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவரிடத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை முதலியோர் காட்சியளிக்கின்றனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.
துவாரபாலகர்களை வணங்கி உள் சென்றால் கம்பீரமாக மூலவர் காட்சி தருகின்றார். கிழக்கு நோக்கிய சந்நிதி. சதுரபீட ஆவுடையார். கருவறையின் உள் இடம் விசாலமாகவுள்ளது. பழைய அம்பாள் பின்னமாகிவிட்டதால் புதிய அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனினும் பழைய அம்பாளை வெளியேற்றி மூலையில் வைக்ப்பட்டுள்ளது.
அம்பாள் சந்நிதி - நின்றநிலை - அழகான தோற்றம். ஒரே இடத்தில் நின்று சுவாமியையும் அம்பாளையும் ஒரு சேரத் தரிசிக்கும் நிலையில் இருசந்நிதிகளும் அமைந்துள்ளன. சித்திரைப் பௌர்ணமியில் பத்து நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது.
"கடலின் நஞ்சம் அமுதுண்டு இமையோர் தொழு தேத்த நடமாடி
அடல்இலங்கை அரையன் வலிசெற்று அருள் அம்மான் அமர்கோயில்
மடல்இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலிதாயம்
உடல்இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ளத் துயர் போமே"
(சம்பந்தர்)
"- ஊற்றுமெய்
அன்புமிகுந்தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில்
இன்பமிகுஞான இலக்கணமே."
(அருட்பா)
"சிந்தை நின்றசிவாநந்தச் செல்வமே
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தையே வலிதாயத்தலைவநீ
கந்தைசுற்றுங் கணக்கது என்கொலோ"
(பழம்பாடல்)
அஞ்சல் முகவரி -
அ.மி. வல்லீஸ்வர சுவாமி திருக்கோயில்
பாடி, சென்னை - 600 050.