திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்
(வட) திருமுல்லைவாயில் - திருமுல்லைவாயில்
தொண்டைநாட்டுத் தலம். சென்னைக்கு அருகில் உள்ளது.
சோழநாட்டில் - தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லை வாயில் உள்ளதால் இது வடதிருமுல்லைவாயில் எனப்படுகிறது. (1) சென்னை - ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் உள்ளது.
(2) பூந்தமல்லியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயில் அடையலாம். சாலையில் இறங்கி ஊருள் 1 A.e. சென்று கோயிலை அடையலாம்.
தொண்டைமான் கட்டிய திருக்கோயில். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இத்தலம் முல்லைவனம் என்னும் பெயருடையது. இத்தலம் பற்றிய வரலாறு.
இத்தலம், கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், விளங்கி கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்ந்தது. தொண்டைமான் காஞ்சியிலிருந்து ஆண்டு வந்தான் அவன் திக்விஜயம் மேற் கொண்டான். புழல்கோட்டையிலிருந்து கொண்டு, ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள், எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர் (இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு) பேறு பெற்றவர்கள். அத்திருக்கோயிலே ஓணகாந்தன்தளி ஆகும்) இவர்களைக்காணத் தொண்டைமான் வந்தான். வரும் வழியில் 'கோழம்பேடு' என்னும் கிராமத்தில் தங்கி இரவு உறங்கும்போது வெங்கல மணியோசை கேட்டது. அங்குச் சிவத்தலம் இருக்க வேண்டும் என்றறிந்து, மன்னன் மறுநாள் காலை யானைமீதேறிவந்தான். அவன் வருவதைக்கண்ட அசுரர்களின் குறு நில மன்னன் ஒருவன் தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிர்க்கலானான். தனியே வந்த தொண்டைமான், போர் செய்வதற்குச் சேனைகளைக்கொண்டு வரத்திரும்பினான். அவ்வாறு திரும்பிஇம் முல்லைப்புதர் வழியாக வரும்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக் கொள்ள, மன்னன் யானைமீதீருந்தவாறே தன் உடைவாளால் வெட்ட, ரத்தம் வெளிப்பட்டது. திகைத்த மன்னன் கீழிறங்கிப்பார்க்க அங்குச் சிவலிங்கத் திருமேனி இருப்பதைக்கண்டான். தன் பிழைக்கு வருந்தி, அவ்வாளால் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றான், அப்போது இறைவன் காட்சி தந்து, "மன்னனே வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை. நான் மாசு இல்லா மணியே வருந்தற்க, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வெற்றிபெற்று வருவாயாக" என்று அருள் புரிந்தார். (இதனால்தான் இத்தலத்தில் நந்தி கிழக்கு நோக்கியுள்ளது) . தொண்டைமான் (நந்தியெம்பெருமானுடன்) வருவதையறிந்து, ஓணன், காந்தன் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்தூண்களே இன்றும் சுவாமி சந்நிதியின் முன்னால் எடுத்து வந்த எருக்கத்தூண்களே இன்றும் சுவாமி சந்நிதியின் முன்னால் உள்ளன. வெங்கலக்கதவும், பவழத்தூண்களும் திருவொற்றியுரில் வைக்கப்பட்டதாகவும் அவை காலப்போக்கில் வெள்ளத்தின் வாய்ப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது."
இறைவன் - நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்
இறைவி - லதாமத்யாம்பாள், கொடையிடைநாயகி, கொடியிடையம்மை
தலமரம் - முல்லை. (வெளிச்சுற்றில் நந்தியின் பக்கத்தில் உள்ளது)
தீர்த்தம் - கல்யாண தீர்த்தம்
சுந்தரர் பாடல் பெற்றபதி.
நந்தி கிழக்கு நோக்கியுள்ளது. (மேற்குறித்த வரலாறு காரணமாக)
ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம் தெற்கு நோக்கியது. பக்கத்தில் தீர்த்தக்குளம் உள்ளது. குளக்கரையிலிருந்து பார்த்தால் புழலேரி தெரிகின்றது. ராஜகோபுரத்திற்கு எதிரில் சந்நிதி வீதியில் பதினாறுகால் மண்டபமும் பக்கத்தில் வசந்த மண்டபமும் உள்ளன. ராஜகோபுரத்தில் துவார பாலகர்கள் உள்ளனர். நுழையும்போது எதிரில் பிரசன்ன விநாயகர் தரிசனம். அவருக்குப் பின்னால் மதில்மீது தல வரலாற்றுச் சிற்பம் - யானைமீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது சிவலிங்கம் - தன் கழுத்தை அரிவது - காட்சி தருவது - சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.
வலமாக வரும்போது கல்யாண மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினள் அம்பாள் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. விசாலமான வெளிப்பிராகாரம், வில்வமரம் உளது. பைரவர் சந்நிதி உளது.
செப்புக் கவசமிட்ட கொடி மரம். நந்தி (தொண்டைமானுக்குதவும் நிலையில்) கிழக்கு நோக்கி உள்ளது. உள் நுழைந்தால் இடப்பால் சூரியன் திருவுருவம். மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியது, அற்புதமான சுயம்பு மூர்த்தி, உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார், மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. எப்போதும் சந்தனம் சார்த்தப்பட்டிருக்கும், ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான், வருடத்திற்கொருமுறை - சித்திரை சதயத்தில் சந்தனக் காப்பு களையப்பட்டு மீண்டும் சார்த்தப்படுகின்றது. அது அடுத்த சித்திரை சதயம் வரை அப்படியே சுவாமி மீதிருக்கும். சுவாமிக்கு, வெந்நீர் அபிஷேகம். அபிஷேகக் காலங்களில் மேன்மேலும் சந்தனம் சார்த்தப்படும். ஆனால் களைவதில்லை, களைந்து சார்த்துவது மேற்குறித்த ஒருநாளில் மட்டுமே. இதனால் சுவாமிமீது எப்போதும் சந்தனக்காப்பு இருந்து கொண்டேயிருக்கும்.
மூலவர் முன்னால் இரு எருக்கந்தூண்கள் உள்ளன. பூண்கள் இடப்பட்டுள்ளன. சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது.
சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூபதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் (பிற்காலப் பிரதிஷ்டையான) ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது.
உள்சுற்றில் வீரபத்திரர், நால்வர், விநாயகர், நாகலிங்கம், மகாலட்சுமி முதலிய சந்நிதிகள் உள. அறுபத்துமூவர் உருவங்களுள் ஒருசிலவே வைக்கப்பட்டுள்ளன. பைரவரும் அருணகிரியும் காட்சி தருகின்றனர்.
கோஷ்ட மூர்த்தங்களாக, க்ஷிப்ர கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவரிடத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா துர்ககை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.
நடராச சபைக்குப் பக்கத்தில், தொண்டைமானுக்குக் காட்சி தந்த ரிஷப நாயகர் உள்ளார். தொண்டைமானுக்கு அவசரத்தில் காட்சி தந்ததால் அம்பாள் சந்நிதி வலப்புறமாக உள்ளதாம். கிழக்கு நோக்கியது.
அம்பாள் சந்நிதியை வலம் வரலாம். பள்ளியறை உள்ளது. முகப்பில் துவார பாலகியரும் உளர்.
வைகாசி விசாகத்தில் பத்து நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது. இத்தலத்தில்தான் சிறப்புமிக்க வைஷ்ணவி ஆலயமும், பிரார்த்தனைக் கோயிலாகிய 'பச்சையம்மன் கோயிலும்' உள்ளன. இக்கோயில் தொடர்பாகச் சொல்லப்படும் செவிவழிச் செய்தியன்று வருமாறு -
(1) சென்னை பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை.
(2) சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை.
(3) இத்தலத்துக் கொடியிடை அம்மை - ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டவை என்றும், வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும் மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகின்றது. இன்றும் பலர் இவ்வழக்கத்தைக் கைக்கொண்டு தரிசித்து வருகின்றனர்.
இராமலிங்க வள்ளலாரின் இருட்பாவிலும், அருணகிரிநாதரின் திருப்புகழிலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. சுந்தரர், இத்தலத்துப் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் "அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே" என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பாடுந்திறம் நெஞ்சை நெகிழ வைக்கவல்லன. அற்புதமான நெஞ்சுருக்கும் பதிகம்.
"திருவுமெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்கள் என்றெண்ணி
ஒருவரை மதியாது றாமைகள் செய்து
மூடியு முறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ் திருமுல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர்களையாய்
பாசுபதர் பரஞ்சுடரே"
(சுந்தரர்)
-"துன்பமற
எல்லைவாயற்குண் மட்டுமேகில் வினையேகுமெனும்
முல்லை வாயிற்குள் வைத்த முத்தி வித்தே."
அஞ்சல் முகவரி -
அ.மி. மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
திருமுல்லைவாயில் - அஞ்சல்
காஞ்சிபுரம் மாவட்டம் - 609