திருமுறைத்தலங்கள்
வடநாட்டுத் தலம்
திருக்கேதாரம்
ஹரித்வாரிலிருந்து 250 A.e. தொலைவு. ஆறுமாதகாலம் (தேவ பூஜை) கோயில் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும். எவரும் செல்ல முடியாது. ஜோதிர்லிங்கத்தலம். ஆறுமாத காலம் (மனிதபூஜை) கோயில் திறந்து பூஜை நடைபெறுகின்றது. கோயில் அக்டோபர் மாதம் மூடப்பட்டுப் பனிக்காலம் கழிந்த பின்னர் மே மாதம் திறக்கப்படுகிறது. பிருங்கி முனிவரின் பொருட்டு உமையம்மை இறைவனை வழிபட்டு இடப்பாகம் பெற்ற தலம். புதுடில்லியிலிருந்தும் ஹரித்துவாரிலிருந்தும் பேருந்தில் சென்று கௌரி குண்டம் அடைந்து அங்கிருந்து நடந்தும் குதிரைமேலும் டோலியிலும் 14 A.e. மலையேறிச் செல்ல வேண்டும்.
கடினமான பாதை - மலைச்சூழல். ஏற்ற பருவகாலம் அறிந்து செல்ல வேண்டும்.
இறைவன் - கேதாரேஸ்வரர்.
இறைவி - கேதாரகௌரி.
சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது.
இருவரும் தென்கயிலாயமான திருக்காளத்தியிலிருந்தே இமயமலைச் சாரலில் உள்ள இத்தலத்தைப் பாடித் தொழுதனர்.
"தொண்டர் அஞ்சகளிறும் அடக்கிச் சுரும்பார் மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டுபாட மயில் ஆல மான்கன்றுதுள்ள வரிக்
கெண்டைபாயச் சுனைநீலம் மொட்டு அலருங்கேதாரமே." (சம்பந்தர்)
"வாள்ஓடிய தடங்கண்ணியர் வலையில் அழுந்தாதே
நாள்ஓடிய நமனார் தமர் நணுகாமுனம் நணுகி
ஆளாய் உய்ம்மின் அடிகட்கு இடம் அதுவோ எனில் இதுவே
நீளோடு அரவு அசைந்தான் இடம் கேதாரம் எனீரே." (சுந்தரர்)
-"சிங்காது
தண்ணிறைந்து நின்றவர்தாஞ்சார் திருகேதாரத்திற்
பண்ணிறைந்த கீதப் பனுவலே." (அருட்பா)
கோயிலின் பின்புறம் வெள்ளிப்பனி மலையாகக் காணக்கிடக்கும் காட்சி அற்புதமானது. பக்கத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் கோயிலம் உள்ளது - தரிசிக்கவேண்டும். திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சாமித் தம்பிரான் மற்றுமுள்ள பெருமக்கள் பலருடைய முயற்சிகளாலும் ஆதரவாலும், திருஞானசம்பந்தர் பதிகக்கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.