நொடித்தான்மலை

திருமுறைத்தலங்கள்

வடநாட்டுத் தலம்

நொடித்தான்மலை

திருக்கயிலாயம்

சிவபெருமான் அம்பிகையடு உடனாகி எழுந்தருளியுள்ள மலை திருக்கயிலாயம். இம்மலை இமயமலையின் வடக்கில் திபெத் நாட்டின் மேற்பால் அமைந்துள்ளது.

இங்கு இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியே சிவலிங்கமாகக் காட்சியளிக்கின்றது. இத்திருமலை எப்பக்கமிருந்து யாரொருவர் எவ்வண்ணமாக நோக்கினும் அவ்வவர்க்கு அவ்வண்ணமாகவே அக்கோயிலாகவே காட்சி தருகிறது என்பது இமயமலையின் கண் அமைந்துள்ள அதிசயமாகும். இதுகண்டு அனுபவித்தோர் வாக்கும் ஆகும். இம்லையின் சிகரம் தென்திசை நோக்கியதாக உள்ளது.

29 மைல் சுற்றளவு உடையதாய் விளங்கும் இம்மலையில் சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற சித்திர வேலைப்பாடுடைய மேடைகளும் காட்சியளிக்கின்றன. இந்தியாவில் கன்னியாகுமரி முதல் இமயம் வரையில் எத்தனை வகையான கோபுரங்கள் உள்ளனவோ அத்தனை மாதிரிக் கோபுரங்களும் இக்கயிலை மலையில் காணக்கிடைக்கின்றன.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர் பெருமக்களும் பாடியுள்ளனர்.

ஞானசம்பந்தர் திருக்காளத்தியைத் (தென் கயிலாயம்) தரிசித்த பின்பு அங்கிருந்தே கயிலாயம் நோக்கி மனத்தாற்கண்டு பாடிப் பரவினார். அப்பர்

பெருமான், கயிலாயத்தையும், அங்கு ஆளுநாயகன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் காணுமது காதலித்து நெடிய யாத்திரையை மேற்கொண்டு சென்றார். இந்த யாத்திரையின் பயனாகவே அவர் ஐயாற்றில் கயிலைத் தரிசனம் பெற்றார். அப்பர் பெருமான் பாடியுள்ள திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் 'போற்றித் திருத்தாண்டகங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

இறைவனருளால் அஞ்சைக்களத்திலிருந்து வெள்ளையானையேறி சுந்தரர் கயிலைக்குச் சென்றபோது, திருவருட் கருணையை நினைந்து, "தானெனை முன்படைத்தான்" என்று தொடங்கும் பதிகம் பாடியவாறே போற்றிச் சென்றார். இத்திருப்பதிகம் வருணனால் இவ்வுலகில் திருஞ்சைக் களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது. சேரமான் பெருமாள் நாயனாரும், காரைக்காலம்மையாரும் கூடக் கயிலாயம் சென்ற வரலாற்றை நாமறிவோம்.

கயிலாய யாத்திரைக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. இன்று திருக்கயிலாயம் உள்ள இமயமலைப் பகுதி சீன அரசின் கட்டுப்பாட்டுள் இருந்து வருகின்றது. ஆண்டு தோறும் கயிலாய தரிசனத்திற்குச் செல்ல விண்ணப்பித்துக் கொள்ளும் அன்பர்களைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசு அனுப்பி வைக்கின்றது. சீன அரசும் இவர்களுக்கு வசதிகளைச் செய்து தருகின்றது.


"பொடி கொள் உருவர் புலியின் அதனர் புரிநூல் திகழ்மார்பில்

கடிகொள் கொன்றை கலந்த நீற்றர் கறைசேர் கண்டத்தர்

இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல்

கடிய விடைமேல் கொடியன்றுடையார் கயிலை மலையாரே."


"ஏதமில பூதமொடு கோதை துணை

யாதிமுதல் வேத விகிர்தன்

கீதமொடு நீதிபல வோதி மற

வாது பயினாதனகர்தான்

தாதுபொதி போதுவிட வூதுசிறை

மீதுதுளி கூதல்நலியக்

காதன்மிகு சோதிகிளர் மாதுபயில்

கோது கயிலாயமலையே." (சம்பந்தர்)


"வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி

மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

ஓவாத சத்தத் தொலியே போற்றி

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி

ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி

காற்றாகி யெங்கும் கலந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (அப்பர்)


"தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே

நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து

வானெனை வந்தெதிர் கொள்ள மத்தயானை அருள்புரிந்து

ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே"


"உருவுபல கொண்டு உணர்வரிதாய் நிற்கும்

ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய

பூக்கையிற் கொண்டு எப்பொழுதும் புத்தெளிர் வந்திறைஞ்ச

மாக்கயிலை என்னும் மலை" (நக்கீரர்)


புமியதனிற் ப்ரவுதான - புகலியில் வித்தகர்போல

அமிர்தகவித் தொடைபாட - அடிமைதனக் கருள்வாயே

சமரி லெதிர்த்தசுர்மாள - தனியயில் விட்டெறிவோனே

நமசிவாயப் பொருளானே - ரசதகிரிப் பெருமாளே. (திருப்புகழ்)


-"எண்ணிறைந்த

சான்றோர் வணங்கு நொடித்தான் மலையில் வாழ்கின்ற

தேன்தோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த

இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும்

வந்திறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுநல்

தாய்க்குங் கிடையாத தண்ணருள் கொண்டன்பருளம்

வாய்க்கும் கயிலை மலையானே." (அருட்பா)

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கேதாரம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கோணமலை
Next