திருக்கூடலையாற்றூர்

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருக்கூடலையாற்றூர்

1. சேத்தியாதோப்பு - கும்பகோணம் பாதையில் 'குமாரகுடி' வந்து, ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து 2 A.e சென்று, 'காவாலகுடி' சாலையில் திரும்பி, 2 A.e. சென்று 'காவாலகுடி'யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம். கோயில்வரை பேருந்து செல்லும்.

2. சிதம்பரம் - காவால்குடி நகரப் பேருந்து உள்ளது. மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் கூடலையாற்றுழர் என்று பெயர் பெற்றது. வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிய, அங்கிருந்த கற்களைக் கொண்டு வந்து, இவ்வூரில் கோயிலைக் கட்டி சுவாமி அம்பாளை எழுந்தருளச் செய்துள்ளனர். இக்கோயில் நுழறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதென்பர்.

சுந்தரர் திருமுதுகூனறம் சென்றபோது, இத்தலத்தை வணங்காமற் செல்ல, இறைவன் அந்தணராக வந்து, முன்செல்ல, சுந்தரர் அவரைத் திருமுதுகூனறத்திற்கு வழி யாதெனக் கேட்க, 'கூடலையாற்றுருக்கு வழி இஃது' என்று கூறி மறைய, திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார் என்பது வரலாறு.


இறைவன் - நர்த்தனவல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாதர்

இறைவி - பராசக்தி, ஞானசக்தி (இரு அம்பாள் சந்நிதிகள்) (புரிகுழல்நாயகி)

தலமரம் - கல்லால மரம் - தற்போது இல்லை.

தீர்த்தம் - (வெள்ளாறும் மணிமுத்தாறும் கூடும் இடம்) சங்கமத் தீர்த்தம்.

பிரமனுக்கு நர்த்தனம் செய்து காடடியவராதலின் இறைவன் நர்த்தனவல்லபேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

சுந்தரர் பாடல் பெற்றது.

பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கிழக்கு நோக்கிய சந்நிதி. கொடிமரம் பலிபீடம் இல்லை. நந்தி உள்ளது. வெளிச்சுற்றில் பக்கவாயில் உள்ளது. நடராச சபை உள்ளது.

அமுத விநாயகர், விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். இத்தேவி மிகவும் சக்திவாய்ந்த அம்மை என்று மக்கள் போற்றி வழிபடுகின்றனர்.

மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகளேறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. துவார கணபதியை வணங்கி உட்சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். கம்பீரமான சிவலிங்கத் திருமேனி. சுவாமிக்கு வலப்பால் பராசக்தி அம்பாள் சந்நிதி உள்ளது. இதுவும் நின்ற திருக்கோலமே. நடராச சபையில் சிவகாமி மூர்த்தமும் உள்ளது.

இங்குள்ள உற்சவ மூர்த்தங்களுள் சிறப்பானது - சித்ரகுப்தர் ஒரு கையில் எழுத்தாணியுடன் மறுகையில் ஏடும் கொண்டு காட்சி தருவது. இம்மூர்த்தம் பிற்காலத்தில் பிரார்த்தனையாக ஒருவரால் செய்து வைக்கப்பட்டதாகும்.

இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. மூலவரைத் தரிசித்து விட்டு வரும்போது வலப்பால் சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது. இரு அம்பாள் சந்நிதிகளில் - பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறும் ஞானசக்தி அம்பாள் சந்நிதயில் குங்குமும் தரப்படுகிறது. மதிலின் வெளிப்புறத்தில் அகத்தியர் சிற்பம் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், அஷ்டபுஜ துர்க்கை முதலியவைகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது.

இக்கோயில் நல்ல நிலையில் உள்ளது. இதன் பரம்பைர அறங்காவலர் தேவகோட்டை அருணாசலம் செட்டியார் அவர்களாவார். நாடொறும் மூன்றுகால பூஜைகள்.

மாசி மாதத்தில் பெருவிழா பதின்மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. மாதாந்திர உற்சவங்களும் நடைபெறுகின்றன.

"வடிவுடை மழுவேந்தி மதகரியுரி போர்த்துப்

பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்

கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்

அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே."

(சுந்தரர்)

"-நீங்காது

நீடலையாற்றூர் நிழல்மணிக் குன்றோங்குதிருக்

கூடலை யாற்றூர்க் குணநிதியே"

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. நர்த்தனவல்லபேஸ்வரர் -

நெறிகாட்டுநாதர் திருக்கோயில்

திருக்கூடலையாற்றூர்

காவாலகுடு அஞ்சல் - 608 702

காட்டுமன்னார்கோயில் வட்டம் - கடலூர் மாவட்டம்.


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is பெண்ணாகடம் (பெண்ணாடம்)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரபட்டணம்)
Next