திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரபட்டணம்)

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்திரபட்டணம்)

மக்கள் வழக்கில் ராஜேந்திரப் பட்டணம் என்று வழங்குகிறது. வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பூசித்த தலங்கள் 'புலியூர்' என்ற பெயருடன் விளங்குகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று. ஏனையவை - (1) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம் - தென்புலியூர்) (2) திருப்பாதிரிப்புலியூர் (வடபுலியூர்) (3) ஓமாம்புலியூர் (4) பெரும்புலியூர்.

1. விருத்தாசலம் - ஜயங்கொண்டம் பேருந்துச் சாலையில் உள்ள தலம்.

2. சென்னை - தஞ்சை நெடுஞ்சாலையில் சேத்தியா தோப்பை அடுத்து, ஸ்ரீ முஷ்ணம் - விருத்தாச்சலம் பாதையில் சென்று ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்துள்ள இத்தலத்தையடையலாம்.

வெள்ளெருக்கைத் தலமரமாகக் கொண்டுள்ள தலமாதலின் எருக்கத்தம்புலியூர் என்று பெயர் பெற்றது. உருத்திரசன்மர் சிவனை வழிபட்டு ஊமை நீங்கப்பெற்ற பெருமையுடைய தலம். உருத்திர சன்மர் உருவம் கோயிலில் உள்ளது. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரப்பதி. சிறிய ஊர். குளக்கரையில் கோயில் உள்ளது.

இறைவன் - நீலகண்டேஸ்வரர், சுவேதார்க்கவனேஸ்வரர்.

இறைவி - அபீதகுஜநாயகி, நீலமலர்க்கண்ணி, நீலோற்பலாம்பாள்

தலமரம் - வெள்ளெருக்கு

தீர்த்தம் - நீலோற்பலதீர்த்தம்.

சம்பந்தர் பாடல் பெற்றது. ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. வலப்பால் சிறிய விநாயகர் சந்நிதி. கோபுரத்திற்கும் கொடிமரத்திற்குமூ இடையில் நந்தி மண்டபம் உள்ளது. வெளிச்சுற்றில் இடப்புறமாக நவக்கிரகமும் நால்வரும் உள்ளனர். திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் கூடியுள்ளது. மகா கணபதி, விசுவநாதர் விசாலாட்சி, முருகர், இலக்குமி ஆகிய சந்நிதிகளை வணங்கி உட்செல்லுகிறோம்.

கோஷ்டமூர்த்தங்களாக விநாயர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்திக்கு மேலே சிறிய கோயில் அமைப்பில் சட்டைநாதர் தரிசனம் தருகிறார். மேலே படிக்கட்டு வசதியுள்ளது. சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. துவாரபாலகர்களை வணங்கியபின் உட்சென்று மூலவரைத் தரிசிக்கிறோம். மூலவர் அழகிய திருமேனி. சுவாமிக்கு வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நீலோற்பலாம்பாளை மன நிறைவுடன் தரிசித்து வெளி வருகிறோம். நாடொறும் நான்கு கால பூசைகள். தல புராணம் இருப்பதாகத் தெரியவில்லை.

"விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ

பெண்ஆண் அலியாகும் பித்தா பிறைசூடி

எண்ணார் எருக்கத்தம் புலியூர்உறைகின்ற

அண்ணாஎன வல்லார்க்கு அடையா வினைதானே"

(சம்பந்தர்)

"-நாடியவான்

அம்புலியூர் சோலை அணி வயல்கள் ஓங்கு எருக்கத்

தம்புலியூர் வேத சமரசமே"

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்

ராஜேந்திரப்பட்டணம் - அஞ்சல்

விருத்தாச்சலம் வட்டம் - கடலூர் வட்டம் - 608 703.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கூடலையாற்றூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)
Next