திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்
திருச்சோபுரம் (தியாகவல்லி)
மக்கள் வழக்கில் 'தியாகவல்லி' என்று வழங்குகிறது. கடலூர் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் புகை வண்டி நிலையம், என்று கைகாட்டி உள்ள பாதையில் (இடப்பால்) திரும்பிச் (மங்கள புரீஸ்வரர் - தியாகவல்லி என்று பெயர்ப்பலகை சாலையில் உள்ளது) சென்று, 'ரயில்வே' கேட்டைத் தாண்டி நேரே மேலும், சென்று உப்பங்கழியின் மேல்கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக அக்கரையை அடைந்து சவுக்குத் தோப்பைத் தாண்டிச் சென்றால் கோயிலை அடையலாம். ஒரு சில வீடுகள் இப்பகுதியில் உள்ளன. கோயிலுக்குச் செல்லும் வழி நொய்ம்மணலாக இருப்பதால் இக்கோயிலுக்கு காலையில் 10 மணிக்குள்ளும் மாலை 4 மணிக்குப் பின்னரும் செல்லுவது நல்லது. கோயில் உள்ள பகுதி 'திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி 'தியாகல்லி' என்றும் சொல்லப்படுகிறது. அகத்தியர் வழிபட்ட தலம். இங்குள்ள மூர்த்தி அகத்தியர் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது.
திருமுறைப் பெயர் 'சோபுரம்' என்பது. சோழபுரம்' என்பது மருவி 'சோபுரம்' என்றாயிற்று என்றும், திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல்மனைவியான தியாகவல்லி அம்மையார் இங்குத் திருப்பணி செய்த காரணத்தால் 'தியாகவல்லி' என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
இறைவன் - மங்களபுரீஸ்வரர், திருச்சோபுரநாதர்.
இறைவி - தியாகவல்லியம்மை, சத்யதாட்சி, வேல்நெடுங்கண்ணி.
தலமரம் - கொன்றை
தீர்த்தம்- கோயிலுள் உள்ள கிணறும், கோயிலுக்குப் பின்னளால் உள்ள குளமுமே. கோயிலுக்குப் பின்னால் அண்மையில் கடல் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். மணற்பாங்கான பகுதியில் கோயில் அமைந்துள்ளது. விசாலமான இடப் பரப்பு. மேற்கு பார்த்த கோயில். கவசமிட்ட கொடிமரத்தைக் கடந்து முகப்பு வாயில், கோயிற்கட்டிடம் நன்றாகவுள்ளது. உள்ளே வலமாக வரும்போது சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவன சக்கரவர்த்தி அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள், பைரவர் சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. விநாயகரைத் தொடர்ந்து அறுபத்துமூவர் மூலத்திருவுருவங்களின் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் உள்ளன. கருவறை முன் மண்டபம் கடந்து செல்லும்போது நேரே மூலவர் தரிசனம். இடப்பால் அம்பாள் சந்நிதி. ஒரு சேர இரு சந்நிதிகளையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கக் கூடிய அமைப்பு.
மூலவர் அகத்தியர் பிரதிஷ்டை - சதுர ஆவுடையார், துவார பாலகர்கள் உள்ளனர். மூலவர் திருமேனி - பாணம் சுற்றளவு சற்று குறைவாக நீட்டுவாக்கில் உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலம்.
நடராச சபை உள்ளது - எதிரில் வாயில். கோஷ்ட மூர்த்தத்தில் லிங்கோற்பவருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர்.
இக்கோயில் மிகப் பழங்காலத்தில் கட்டடப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. இப்பகுதி ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்தது. இங்கு வந்த 'மதுரை இராமலிங்க சிவயோகி' என்பவர் இம்மேட்டைக் கண்டு, மணலில் புதைந்திருந்த கோயிலின் விமானக்கலசம் மட்டும் மேலே தெரிய, அவர் உடனே அப்போது கடலூரிலிருந்த சேஷாசல நாயுடு, இராமாநுஜலுநாயடு, ஆயிரங்காத்த முதலியார், நஞ்சலிங்க செட்டியார் ஆகியோரை அணுகி, செய்தி சொல்லி, அவர்களின் ஆதரவோடு, மணல்மேட்டைத் தோண்டிக் கோயிலைக் கண்டு பிடித்துக், கட்டுவித்தார் என்றொரு செய்தி அப்பகுதி மக்களால் சொல்லப்படுகின்றது. இது தொடர்பாக, இன்னும் அம்பாள் கோயில் தெற்குப் பகுதியில் மண்மேடிட்டுப் புதைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். இதனால் இக்கோயிலுக்குத் 'தம்பிரான் கண்ட கோயில்' என்ற பெயரும் மக்களால் வழங்கப்படுகிறது.
"கடலுக்கு மேற்கில், தொண்டமாநத்தத்திற்கு கிழக்கில்
பெண்ணையாற்றுக்குத் தெற்கில் வெள்ளாற்றுக்கு வடக்கில்
உள்ள நிலங்கள் இக்கோயிலுக்குரிய பட்டா நிலங்களாக
இருந்தனவென்றும், அவைகளை அரசு எடுத்துக்கொண்டு
அதற்குரியதாக ஆண்டுதோறும் கோயிலுக்கு ரூ. 600 / -
(ரூபாய் ஆறுநூறு மட்டும்) தருவதாகவும் தெரிகிறது".
கோயில் குருக்கள் குடும்பத்தினரின் நன்முயற்சியால்தான் இக்கோயில்
செம்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
கோயிலின் வெளிச் சுற்றில் கொன்றை மரம் - தலமரம் தழைத்து விளங்குகின்றது. இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள ஆலப்பாக்கத்தில் இருந்து 'காகபுஜண்டரிஷி' இறைவனை வழிபட்டதாகச் சொல்கின்றனர்.
பிற்காலத்தில், தொண்டை மாநத்தத்தைச் சேர்ந்த மு.துரைசாமி ரெட்டியார் என்பவர் கோயிலில் ஆராதனைக்காக, வீடுகளை விட்டு அதன் வருமானத்தில் ஆராதனை நடத்துமாறு உயில் சாசனம் எழுதி அதை 26-8-1912-ல் ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்துள்ள கல்வெட்டு ஒன்று கோயிலில் உள்ளது.
பங்குனி உத்திரப் பெருவிழா 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
"நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேன்மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரணம் என்னை கொலாம்
ஊற்றமிக்க காலன் தன்னையல்க உதைத்தருளித்
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுர (ம்) மேயவனே."
(சம்பந்தர்)
(சுந்தரரின் 'திருவிடையாறு' தலப்பதிகத்தில் - ஊர்த்தொகையில் இத்தலம் குறிக்கப்படுகிறது.) அப்பாடல்-
"சுற்றுமூர் சுழியல் திருச்சோபுரம் தொண்டர்
ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப்
பெற்றமேறி பெண்பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர்
எற்றுமூர் எய்த மானிடையாறிடை மருதே."
-"தீங்குறுமொன்
னார்புரத்தை வெண்ணகைத்தீ யாலழித்தா யென்றுதொழ
சேர்புரத்தின் வாழ் ஞானதீவகமே."
அஞ்சல் முகவரி -
அ.மி. மங்களபுரீஸ்வரர் திருக்கோயில்
திருச்சோபுரம் - தியாகவல்லி அஞ்சல் - 608 801
கடலூர் வட்டம் - கடலூர் மாவட்டம்.