திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்
திருத்தினைநகர் ( தீர்த்தனகிரி)
மக்கள் வழக்கில் தீர்த்தனகிரி என்று வழங்குகிறது.
தனிப் பேருந்தில் செல்வோர் கடலூர் - சிதம்பரம் மெயின் பாதையில், சிதம்பரத்திற்கு 45 - ஆவது கி.மீ.ல் ஆலப்பாக்கம் - புதுச்சத்திரம் இவற்றிற்கு இடையில் மேட்டுப்பாளையம் என்னும் இடத்தில் தீர்த்தனகிரி என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் போய், தானூரையடைந்து, தெருக்கோடியில் இடப்புறமாகச் செல்லும் சாலையில் சென்று, மேலும் இடப்புறமாகப் பிரிந்து செல்லும சாலையில் சென்று இவ்வூரையடையலாம்.
பெரியான் என்னும் பள்ளன் தன்நிலத்தை உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, அவன் தன் தொழிலை நிறுத்திவிட்டு உணவு கொண்டுவரத் தன் வீடு சென்றான். அவன் திரும்பி வருவதற்குள் இறைவன் அந்நிலத்தில் தினை விளைந்திருக்குமாறு செய்தார். வந்த பெரியான் கண்டு திகைக்க இறைவன் அவனுக்குக் காட்சி தந்தார். அதிசயமாகத் தினை விளைந்ததால் இத்தலம் 'தினைநகர்' என்று பெயர் பெற்றது.
இறைவன் - சிவக்கொழுந்தீசர், சிவாங்கரேஸ்வரர், திருந்தீஸ்வரர்.
இறைவி - நீலாயதாட்சி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்.
தலமரம் - கொன்றை.
தீர்த்தம் - ஜாம்பவ தீர்த்தம்.
வீரசேன மன்னனுக்கு இத்தீர்த்தத்தில் மூழ்கி, வெண்குஷ்டம் தீர்ந்தமையால் அவனே இக்கோயிலைக் கட்டினான் என்பது வரலாறு. சுந்தரர் பாடல் பெற்ற தலம்.
இராசகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கவசமிட்ட கொடி மரம். நந்தி பலிபீடங்கள் உள. வலப்பால் அம்பாள் சந்நிதி. பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சுப்பிரமணியர், வீரசேன மன்னன் சந்நிதிகளும், தலமரமாகிய கொன்றையும், பைரவர், சூரியன் திருமேனிகளும் உள்ளன.
வலம் முடித்து, பக்கவாயில் வழியாக நேரே உட்சென்றால் நடராச சபை. அழகான சிரித்த முகம். நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு, சங்கை வாயில் வைத்து ஊதுவதுபோலவும் பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பதுபோலவும், சிறிய மூர்த்தங்கள் உள்ளன. மூலவர் தரிசனம் இடப்பால், சுயம்புத் திருமேனி. பாணம் சற்று கூர்மையாகவுள்ளது. சதுரபீட ஆவுடையார் - இருபுறமும் வழித்தெடுத்தாற்போலவுள்ளது. நவக்கிரக சந்நிதி உள்ளது.
கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர் - பிரமர், விஷ்ணு பக்கங்களில் நின்று தரிசிக்கும் அமைப்பில், பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. கோயிற் சுவரில் தலவரலாற்றுச் சிற்பங்கள் உள. கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள சத்திரம் வேத பாராயண சத்திரம் -உற்சவ காலத்தில் வேதபாராயணம் செய்யும் கட்டளைக்காக ஏற்படுத்தப்பட்டது. இப்போது நடைபெறவில்லை.
நாடொறும் நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன. மாதாந்திரக் கட்டளைகள் உள்ளன. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திருப்பணித் திட்டத்தின்கீழ் இக்கோயில் சுவாமி, அம்பாள் விநாயகர், முருகன் விமானங்கள் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஊர் மக்கள் ஆதரவால் பிற திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.
அண்மையிலுள்ள திருமுறைத்தலம் திருச்சோழபுரம்.
"நீறுதாங்கிய திருநுதலானை
நெற்றிக் கண்ணனை நிரைவளைமடந்தை
கூறுதாங்கிய கொள்கையினானைக்
குற்றமில்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறுதாங்கிய அழகனை அமரர்க்கு
அரியசோதியை வரிவரால் உகளும்
சேறுதாங்கிய திருத்தனை நகருள்
சிவக்கொழுந்தினைச் சென்றடைமனனே."
(சுந்தரர்)
-"நம்புவிடை
ஆங்குந்தினை யூர்ந்தருளாய் என்றன்பர்தொழு
தோங்குந் தினையூர் உமாபதியே."
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அ.மி. சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
தீர்த்தனகிரி - அஞ்சல் - 608 801.
கடலூர் வட்டம் - கடலூர் மாவட்டம்