திருமுறைத்தலங்கள்
திருக்கச்சி மேற்றளி
திருமேற்றளீஸ்வரர் கோயில்
பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்.
தொண்டை நாட்டுத் தலம். காஞ்சிபுரத்தில் உள்ள திருமுறைத் தலங்கள் ஐந்தினள் இதுவும் ஒன்று. காஞ்சியில் 'பிள்ளையார் பாளையம்' என்னும் பகுதியில் இக்கோயில் உள்ளது. இதன் பெயரால் அவ்வீதி திருமேற்றளித்தெரு என்று வழங்கப்படுகிறது.
திருமால் தவமிருந்து, சிவ சொரூபம் பெற்ற வரலாற்றுச் சிறப்புடையது.
இறைவன் - திருமேற்றளீஸ்வரர், திருமேற்றளிநாதர்
இறைவி - திருமேற்றளிநாயகி
அப்பர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற பதி.
இத்தெருவில் கீழ்க்கோடியில் திருஞானசம்பந்தரின் ஆலயம் உள்ளது. மிகச் சிறிய கோயில். ஞானசம்பந்தர் சந்நிதி மட்டுமே உள்ளது. மூலத்திருமேனி திருமேற்றளிக் கோபுரத்தை நோக்கியவாறு கைகளைக் குவித்து வணங்கும் நிலையில் நின்ற கோலத்தில் உள்ளது. உற்சவத் திருமேனி, வலக்கை சுட்டிய விரலுடன் இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்திய நிலையில் பக்கத்தில் உள்ளது.
இத்தெருவின் நடுவில் இடப்பால் 'உற்றுக்கேட்ட முத்தீசர்' ஆலயம் உள்ளது. ஞானசம்பந்தர் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாகவும் - கேட்டதாகவும் வரலாறு. வீதியின் மேற்கோடியில் திருமேற்றளிக் கோயில் உள்ளது.
இப்பகுதியில் நூற்றெட்டு ருத்ரர்கள் பூசித்ததாகச் செய்தியன்று சொல்லப்படுகிறது. அதற்கேற்ப ஆனந்த ருத்ரேசம், மகா ருத்ரேசம் முதலிய பெயர்களில் இப்பகுதியில் கோயில்கள் உள்ளன.
திருமால் சிவ சாரூப நிலையைப் பெற வேண்டி இறைவனை வழிபட்ட திருத்தலம். இறைவன் காட்சி தந்து நின்றபோது திருமால் சிவசாரூப நிலையை வேண்ட, ஞானசம்பந்தர் இங்கு வருகைதந்து பதிகம் பாடும் போது அது கிடைக்கும் என்றும், அதுவரை இங்கிருந்து தவஞ்செய்யுமாறும் இறைவன் வரமளித்தார். அதன்படியே ஞானசம்பந்தர் வந்து பாடியபோது திருமால் சிவசாரூபம் பெற்றார் என்பது தலவரலாறு.
இறைவன் - மேற்றளிநாதர். சந்நிதி மேற்கு நோக்கியது. தற்போது இச்சந்நிதி பிரசித்தமாக மக்களுக்குத் தெரியவில்லை. உள்ளே உள்ள (கர்ப்பக்கிருகத்துள்) சந்நிதி 'ஓத உருகீசர்' என்று வழங்கப்படுகின்றது. ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு உருகியவர் (திருமால்) இவர் எனப்படுகிறது. இதற்கு அடையாளமாகச் சிவலிங்கத் திருமேனியின் முன்பு இருதிருவடிகள் உள்ளன. இச்சந்நிதி கிழக்கு நோக்கியது.
ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. துவார கணபதி ஒருபுறமும் மறுபுறம் முருகப் பெருமானும் உள்ளனர். உள்ளே நுழைந்தால் விசாலமான இடம். முன்னே சென்றார் நந்தி, பலிபீடம் உள்ளன. வலப்பால் நவக்கிரக சந்நிதி உள்ளது. அடுத்துத் தனிக்கோயிலாக விளங்குவது மேறற்ளிநாதர் சந்நிதியாகும் - மேற்கு நோக்கிய சந்நிதி. கோஷ்டமூர்த்தங்களாக ஒருபுறத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி ஆகிய திருவுருவங்களே உள்ளன. மறுபுறத்தில் எவையுமில்லை. மிகச்சிறிய சந்நிதி. இடப்பால் அம்பாள் (மூலத் திருவுருவம்) சந்நிதி உள்ளது. நின்ற கோலம். காஞ்சி மண்டலம் முழுமைக்கும் அம்பாள் காமாட்சியேதாலின் இம்மூர்த்தம்பிற்காலப்பிரதிஷ்டையாகும். அம்பாள் சந்நிதிக்குப் பக்கத்தில் உள்ளது சிறிய (இடம்) மண்டபம் - இங்குத்தான் அ.மி. கச்சபேசர் திருக்கோயில் பெருவிழாவின் போது 5ஆம் நாளில் அம்பாளை எழுந்தருளச் செய்து, அபிஷேக ஆராதனகைள் செய்யப்பட்டு, வீதியுலா நிகழும், அம்பாள் சந்நிதியின் முன்பு சிமெண்டு பலகையாலான மண்டபம் போடப்பட்டுள்ளது. தலப்பதிகமும் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. அடுத்து இடப்புறம் நால்வர் சந்நிதி. இது சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டுள்ள பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது. வாயிலைக்கடந்து உள்நுழைந்து பிராகார வலமாக வரும் போது விநாயகர் சந்நிதி, காசிவிசுவநாதர், பைரவர் சந்நிதிகள் முதலியன உள்ளன. வலம் முடித்துப் பக்கவாயில் வழியாக உள்நுழைந்தால் எதிரில் நடராசசபை உள்ளது. இங்கு நடராச வடிவம் சுவரில் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. இங்கிருந்த திருமேனி, இவ்வினத்தாருக்குரிய கோயிலான அ.மி. கச்சபேசர் திருக்கோயிலில் கொண்டுபோய் வைக்கப்பட்டுள்ளதாகச் செவி வழிச்செய்தி சொல்லப்படுகிறத.
இவ்விடத்தில் சந்திரசேகர், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுளள்ன. இடப்பால் திரும்பி உள் சென்றால் ஓதுஒருகீசர் சந்நிதி - பெரிய சிவலிங்கத் திருமேனி, ஆவுடையாருக்கு எதிரில் கீழே இரு திருவடிகள் உள்ளன - கிழக்கு நோக்கிய சந்நிதி.
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.
கோயிலுக்குப் பக்கத்தில் வெட்ட வெளியில் ஜேஷ்டாதேவியின் திருவுருவம் உள்ளது. பாதுகாப்புச் சுவர் மட்டுமே தாழ உள்ளது. இவ்வுருவத்தின் மேற்புறம் காகம், ஆடு முதலிய உருவங்களும் உள் ஒருகை பூதமொன்றின்மீது வைத்தும் உள்ளன. நின்ற நிலை உருவம்.
சம்புவராயர், விஜயநகர மன்னர்கள், பல்லவ அரசர்கள் காலக் கல்வெட்டுக்களில் இப்பகுதிகளில் வாழ்ந்த செங்குந்தர்களிடம் தறி ஒன்றுக்கு ஐந்தரை பணம் வசூலித்தது, இங்குள்ள ஒரு தெருவுக்கு 'ஏகம்பன் தெரு' என்று பெயரிட்டது முதலிய செய்திகள் காணப்படுகின்றன.
"செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாக்கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றைசூடிக்
கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே"
(அப்பர்)
"நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற
சிந்தாய் எந்தைபிரான் திருமேற்றளி உறையும்
எந்தாய் உன்னையல்லால் இனி ஏத்தமாட்டேனே"
(சுந்தரர்)
- ஆகுந்தென்
"காற்றளிவண் பூ மணத்தைக் காட்டும் பொழிற்கச்சி
மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே"
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அ.மி. திருமேற்றளீசுவரர் திருக்கோயில்,
திருமேற்றளித்தெரு
பிள்ளையார்பாளையம் - காஞ்சிபுரம் - 631 501
காஞ்சிபுரம் மாவட்டம்.