ஓணகாந்தன்தளி - (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)

திருமுறைத்தலங்கள்

ஓணகாந்தன்தளி.

(காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)

தொண்டை நாட்டுத் தலம்.

காஞ்சிபுரத்திலுள்ள பாடல்பெற்ற திருக்கோயில்கள் ஐந்தினள் இதுவும் ஒன்று. காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் சென்று, (சர்வதீர்த்தம் தாண்டி) பஞ்சுப்பேட்டை துணைமின் நிலையத்திற்குச் செல்ல (Electric Sub - Station) வலப்புறமாகப் பிரியும் சிறிய பாதையில் திரும்பி இக்கோயிலை அடையலாம். கோயில் உள்ள பகுதீ பஞ்சப்பேட்டை எனப்படும். பஞ்சுப்பேட்டை துணை மின் நிலையத்திற்கு எதிரில் கோயில் உள்ளது. சாலையோரத்திலேயே கோயிலம் இம் மின் நிலையமும் உள்ளன.

வாணாசுரனடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட தலம். இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். கோயில் செம்மையாக உள்ளது. சிறிய கோயில். விசேஷேமான சந்நிதிகள் வேறெதுவுமில்லை. கோயில்வரை வாகனங்கள் செல்லும்.

இறைவன் - ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்

சுந்தரர் பாடல் பெற்றது.

இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' என்று தொடங்கும் பதிகம் பாடிப் பொன் பெற்றார் என்பது வரலாறு. இப்பதிகத்துள் சுந்தரர் குறித்துள்ளதற்கேற்ப இக்கோயிலில் 'வயிறுதாரிப் பிள்ளையார்' சந்நிதி உள்ளது. இப்பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும் போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும், அஃதறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக ஒருசெய்தி இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகின்றது.

"நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல்பூசனை செய்யலுற்றார்

கையிலொன்றும் காணமில்லைக் கழலடிதொழுது உய்யினல்லால்

ஐவர் கொண்டிங்காட்ட ஆடி ஆழ்குழிப்பட்டழுந்து வேற்கு

உய்யுமாறு அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளியுளீரே."

"கூடிக்கூடத் தொண்டர் தங்கள் கொண்டபாணி குறைபடாமே

ஆடிப்பாடி அழுது நெக்கங்கு அன்புடையவர்க்கின்பம் ஓரீர்

தேடித்தேடி திரிந்தெய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர்

ஓடிப் போகீர் பற்றுந்தாரீர் ஓணகாந்தன் தளியுளீரே."

"வாரிருங்குழல் நெடுங்கண் மலைமகள் மதுவிம்மு கொன்றைத்

தாரிருந்தட மார்பு நீங்காத் தையலாள் உலகுய்ய வைத்த

காரிரும் பொழிற் கச்சிமூதூர்க் காமக்கோட்டம் உண்டாக நீர்போய்

ஊரிடும் பிச்சை கொள்வதென்னே ஓணகாந்தன் தளியுளீரே."

(சுந்தரர்)

பூந்தண்டளி விரித்துப் புக்கிசைக்குஞ் சீர் ஓண

காந்தன்தளி யருட்ப்ரகாசமே."

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. ஓணகாந்தன் திருக்கோயில்

பஞ்சுப்பேட்டை - (பெரிய) காஞ்சிபுரம் - 631 502

காஞ்சிபுரம் மாவட்டம்


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கச்சி மேற்றளி - திருமேற்றளீஸ்வரர் கோயில்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  கச்சி அனேகதங்காவதம் - காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்
Next