திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்
திருமுண்டீச்சரம்
கிராமம்
பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள தலம். மக்கள் இவ்வூரைக் 'கிராமம்' என்று அழைக்கின்றனர்.
(1) திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சென்று, திருவெண்ணெய்நல்லூரைத் தாண்டி 2 A.e. சென்றால் இத்தலத்தையடையலாம்.
(2) விழுப்புரத்திலிருந்து நகரப் பேருந்தும் செல்கறிது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. கோயிலருகே இறங்கலாம்.
இறைவனின் காவலர்களாகிய 'திண்டி' 'முண்டி' வழிபட்ட தலம். பிரமன், இந்திரன் முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். துவாரபரயுகத்தில் சொக்கலிங்க
மன்னன் என்பவன் வேட்டைக்கு வந்த போது குளத்தில் ஒரு அதிசயமான தாமரை மலரைக் கண்டான். ஆள் அனுப்பி, பறித்து வருமாறு கட்டளையிட்டான். அவனும் சென்று பறிக்கையில் அம்மலர் அவன் கைக்கு அகப்படாமல் சுற்றி வரலாயிற்று. அதுகண்ட மன்னன், அதன்மீது அம்பெய்த குளம் முழுவதும் செந்நிறமாயிற்று. கண்ட மன்னன் மயங்கி அதனருகே சென்று பார்த்தபோது அம்மலரில் இலிங்கமிருப்பதைக் கண்டான், அதை எடுத்து அக்குளங்கரையில் ஆலயம் எடுப்பித்துப் பிரதிஷ்டை செய்தான் என்று வரலாறு சொல்லப்படுகிறது. மன்னன் அம்பு எய்திய காரணத்தால் இன்றும் சுவாமிமீது அம்பு பட்ட தழும்புள்ளது. இதனால் சுவாமிக்கு 'முடீஸ்வரர்' என்றும் பெயர் வந்தது. இப்பெயரே கல்வெட்டில் "மௌலி கிராமம்" என்று குறிக்கப்பெறுகின்றது. நாளடைவில் மக்கள் 'மௌலி' என்பதை விட்டுவிடடு 'கிராமம்' என்றே அழைக்கலாயினர். அவ்வழக்கே தொடர்ந்து வந்து, இன்றும் இவ்வூர் 'கிராமம்' என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது 'முடீச்சுரம்' என்ற பெயர் 'முண்டீச்சுரம்' என்றாயிற்று என்பதும் எண்ணத்தக்கது.
இக்கோயில் A.H. 943 -ல் கேரள மன்னனான வெள்ளாங்குமரன் என்பவனால் (முதற்பராந்தகன் காலத்தில்) கருங்கல்லால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப்பை, (பொக்கணம்) தந்தார் ஆதலின் இவ்விறைவன் கல்வெட்டில் 'பொக்கணம் கொடுத்த நாயனார்' என்றும், மற்றும் ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் குறிக்கப்பெறுகின்றார். (ஆற்றின் கரையிலுள்ள கோயில் - ஆற்றூததளி) .
இறைவன் - சிவலோகநாதர், முடீஸ்வரர், முண்டீசர்.
இறைவி - சௌந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வநாயகி,செல்வாம்பிகை.
தீர்த்தம் - முண்டக தீர்த்தம் (அ) பிரம தீர்த்தம்.
தலமரம் - வன்னி (இப்போது இல்லை)
அப்பர் பாடியது.
ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் கிழக்கு நோக்கியது. நேரே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கொடிமரமில்லை. துவார வாயிலில் விநாயகரும் முருகனும் இடம் மாறியுள்ளனர். (முருகனின் இடக் கீழ்க்கை நாராச முத்திரையுடன் - அகமர்ஷணநீரைக் கீழேவிடும் அமைப்பில் - இருப்பது கவனிக்கத் தக்கது) .
மண்டபத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. பக்கவாயில் வழியாக உள்நுழைந்தால் வலப்பால் நால்வர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்து சென்று மூலவரைத் தரிசிக்கலாம், திருநீற்றுப் பட்டையும், அக்கமணி மாலையும் தாங்கி, தெய்விகப் பொலிவுடன் சிவலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. நடராச சபை உள்ளது.
உட்சுற்று முழுவதும் தளவரிசையுள்ளது. விசாலமான இடப்பரப்பு, வரசித்தி விநாயகர், சண்முகர் சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. தட்சிணாமூர்த்தி கல்லாலமரமின்றி மலைமீது நந்தியை வாகனமாகக் கொண்டு காட்சி தருகிறார்.
சுவாமிக்கு வலப்பால் அம்பாள் சந்நிதி. தனிக்கோயிலாகவுள்ளது. நின்ற திருக்கோலம். முன்மண்டபத்தில் இடப்பால் நவக்கிரக சந்நிதி உள்ளது. சப்தமாதாக்கள், ஐயனார், துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. சுவாமி, அம்பாள் விமானங்கள் மிகப்பழமையானவை.
இக்கோயில் தேவகோட்டை ராம.அரு.அரு.ராம.அருணாசலம் செட்டியார் அவர்களின் பொருளதவியால் 30-08-1950-ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
நாடொறும் இருவேளை பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. பெருவிழாக்கள் ஏதும் நடைபெறவில்லை.
பழமையான கல்வெட்டுக்களில் திருமுடீச்சரம் என்றே பெயருள்ளது. முடியூர் நாடு என்னும் தனிப் பெயர் கொண்ட நாட்டுக்குத் தலைநகராக இருந்தது.
மதுரை கோப்பரகேசரி வர்மனின் 24ஆவது கல்வெட்டில் முடியூர் நாட்டு முடியூர் என்றுள்ளது. சௌந்தர பாண்டியன் காலக் கல்வெட்டில் முடியூர் நாட்டுக் கிராமம் என்றுள்ளது. எனவே முடியூர் என்பது முடீச்சரம் என்றாகி, அது மருவி முண்டீச்சரம் ஆகியுள்ளது என்பார் திரு.வை.சுந்தரேச வாண்டையார்.
"கானவன்காண் கானவனாய்ப் பொருதான்றான்காண்
கனலாட வல்லான்காண் கையிலேந்தும்
மானவன்காண் மறைநான்கும் ஆயினான்காண்
வல்வேறு ஒன்றது ஏறவல்லான்றான்காண்
ஊனவன்காண் உலகத்துக்கு உயிரானானகர்ண்
உரையவன்காண் உணர்வு அவன்காண் உணர்ந்தார்க்கு என்றும்
தேனவன்காண் திருமுண்டீச் சரத்துமேய
சிவலோகன்காண் அவன்என் சிந்தையானே."
(அப்பர்)
-"சீர்ப்பொலியப்
பண்டீச் சுரனிப் பதியே விழைந்த தெனும்
முண்டீச் சுரத்தின் முழுமுதலே."
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. சிவலோகநாதர் திருக்கோயில்
கிராமம் - அஞ்சுல் - 607 203.
(வழி) உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்ப்பேட்டை வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.