திருவண்ணாமலை

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருவண்ணாமலை

மிகவும் பிரசித்தி பெற்ற தலம். கார்த்திகை தீபப் பெருவிழா இத்தலத்தில் நடைபெறுவது நாடு முழுவதும் அறிந்தவொன்றாகும். சென்னை, வேலூர், கடலூர், சிதம்பரம், சேலம், திருச்சி, விழுப்புரம் முதலிய பலவிடங்களிலிருந்தும் பேருந்துகள் நிரம்பவுள்ளன.

அண்ணாமலையார் உண்ணாமுலையாளுடன் எழுந்தருளி அன்பர்கட்கு அருள்புரிகின்ற அற்புதப் பதி. உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் - அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது. பஞ்சபூதத் தலங்களுள் நெருப்புக்குரிய தலம். நினைக்க முத்தியருளும் நெடும் பதி. "உன்னினர் தங்கெட்கெல்லாம் ஒல்லையின் முத்தி நல்கி" என்பது கந்தபுராணத் தொடர். அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.

ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். ரமணர் ஆசிரமம் உள்ளது. இத்திருக்கோயிலின் கிழக்கு கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் - திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம் - பேய்க் கோபுரம். வடக்குக்கோபுரம் - அம் மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது. யாத்ரிகர்களுக்குரிய சத்திரங்கள், திருக்கோயில் விடுதிகள் முதலியவை உள்ளன. இங்கு மலையே இறைவனின் சொரூபம். எனவே மலைவலம் இங்குச் சிறப்புடையது. வல்லாள மன்னனுக்கு மகனாக வந்தவதரித்த இறைவன் அருள் செய்த பதி இதுவே.

இறைவன் - அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்.

இறைவி - அபீதகுஜாலாம்பாள், உண்ணாமுலை.

தலமரம் - மகிழம்.

தீர்த்தம் - பிரமதீர்த்தம்.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

கோயிலுக்கு முன்னால் நீண்ட மண்டபம் உள்ளது. ராஜகோபுரம் (கீழ்க்கோபுரம்) பதினோரு நிலைகளையுடையது. கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாகவுள்ளன. உட்சென்றால் நேரே கம்பத்திளையனார் சந்நிதியும் ஞானப்பால் மண்டபமும் உள்ளன. 'அதலசேடனாராட' என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி.

சிவகங்கைத் தீர்த்தம் - கரையில் சர்வசித்தி விநாயகர் தரிசனம். படிகளேறிக் கல்யாண சுந்தரரைத் தொழுது மீண்டும் வந்து பெரிய நந்திதேவரை வணங்கிப் படிகளேறிச் செல்கிறோம். வல்லாள மகாராசன் கோபுரம் - கோபுரத்திளையனார் சந்நிதி. வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் தரிசனம். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது. சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது. பக்கத்தில் அருணகிரிநாதரின் 'திருவெழுகூற்றிருக்கை' வண்ணத்தில் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது.

கோபுரம் கடந்து உட்சென்றால் வலப்பால் சக்தி விலாச சபா கல்யாண மண்டபம் உள்ளது. இடப்பால் கால பைரவர் சந்நிதி. எதிரில் பிரமதீர்த்தம். வலப்பால் புரவி மண்டபம் - ஆனைதிறை கொண்ட விநாயகர் - நளேஸ்வரர் - இடப்புறம் திரும்பி விக்னேஸ்வரர் வித்யாதரேஸ்வரர் - பிரம்மலிங்கம் இவைகளைத் தரிசித்துவிட்டுத் திரும்பிப் படிகளேறும் போது பைரவரையும் சனீஸ்வரரையும் தொழுது சென்றால் வலப்பால் ஏகாம்பரேஸ்வரர், பின்புறத்தில் சப்தகன்னியர் ஐயப்பன், ரேணுகாம்பாள் சந்நிதிகள் - இடப்பால் வெளிச்சுற்றில் மகிழ மரமுள்ளது. மலைப்பாதை வாயிலைத் தொழுதவாறே வந்தால் அம்பாள் சந்நிதி.

முன்மண்டபத்தில் சித்ரகுப்தர் காட்சி. அம்பாள் சந்நிதி. சம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் பாடல்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. அம்பாள் மூலத் திருமேனி - சிறிய மூர்த்தம். நேர் எதிரில் காளஹஸ்தீசுவரலிங்க தரிசனம்.

வலம் முடித்து, துவார விநாயகரை - வெள்ளிக் கவசமிட்ட அழகிய கோலத்தில் வணங்கி, பழனியாண்டவரைப் பார்த்து, கவசமிட்ட கொடிமரம் பணிந்து, சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தால் விளக்குகளின் பிரகாசம் கண்களைப் பறிக்கிறது.

வலப்பால் உற்சவ மூர்த்த மண்டபம். உள்ளே வலமாக வரும்போது சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள், நால்வர் (மூல உற்சவ மூர்த்தங்கள்) அறுபத்துமூவர் மூல மூர்த்தங்கள். சப்த கன்னியர், கௌதமர், துர்வாசர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், வேணுகோபால சுவாமி, கஜலட்சுமி, ஆறுமுகர், பிட்சாடனர், அறுபத்துமூவர் உற்சவர்கள், நடராச சபை, முதலிய சந்நிதிகளை ஆனந்தமாகத் தரிசிக்கலாம்.

விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலானோர் வழிபட்ட லிங்கங்களும், ஜ்வரஹரேசரும், காலசம்ஹாரர், பைரவரும் தொழுதவாறே சென்றால் சுவாமி சந்நிதி. சந்நிதிக்கு இருபுறமுமூ அழகாக விளக்கு வரிசைகள்.

மூலவர் - அருணாசலப் பெருமான், தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க அருமையாகக் காட்சி தருகிறார்.

'அண்ணாமலைக்கு ஹரோஹர' வாய்விட்டுச் சொல்லிக் கையாரக் கூப்பி உள்ளம் கனியத் தொழுகின்றோம்.

கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம் - தரிசிக்கத்தக்கது.

கார்த்திகை தீபம், ஆடிப்பூரம் உத்தராயண தக்ஷிணாயன புண்ணிய காலங்கள், சித்திரை வசந்த விழா, கந்த சஷ்டி, பாவை விழா, பங்குனி உத்திரம் முதலிய விழாக்கள் சிறப்புடையன. இவை தவிர மாதாந்திர உற்சவங்கள் அனைத்தும் முறையாக நடைபெறுகின்றன. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிராகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினையுடையது. நாடொறும் ஆறுகால வழிபாடுகள்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, தலவிசேஷமாகிய லிங்கோற்பவர் பிரபையுடன், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சியளிக்கின்றனர். தலபுராணம் - அருணாசல புராணம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார். அருணைக் கலம்பகமும் அவர் அருளியதே. குருநமசிவாயர் பாடியுள்ளது 'அண்ணாமலை வெண்பா' வாகும்.

குருநமசிவாயர் குகைநமசிவாயர் அருணகிரியார் விருபாட்ச தேவர், ஈசான்ய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில் வாழ்ந்த அருளாளர்கள், இவர்களுள் பெரும் யோகியாகத் திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில்வந்த நாகலிங்க தேசிகர் என்பவர் இராமேஸ்வரத்திற்கு யாத்திரையாகச் சென்றபோது, இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோயில்களின் நிர்வாகத்தை தாம் மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர் ஆதீனத்தையும் ஏற்படுத்தினார். அதுவே 'குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்' என்று வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாதீனத்தின் குருமகா சந்நிதானமாக இன்று எழுந்தருளியருப்பவரே தவத்திரு, 'பொன்னம்பல அடிகளார்' ஆவார்கள்.

நூறற்ககும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ், சம்ஸ்கிருதம், கன்னடமொழிகளில் உள்ளன. (கல்வெட்டுகளின் விவரத்தை ஆலயத்தலவரலாற்று நாலில் விரிவாகக் காணலாம்.) திருக்கோயில் சார்பில் தங்கும் விடுதிகள் உள்ளன.

இத்திருக்கோயிலின் சிறப்பைப் பற்றிப் பாடியோரும் நூல்களும்

1. நமசிவாய சுவாமிகள் - சார பிரபந்தம்.

2. திருச்சிற்றம்பல நாவலர் - அண்ணாமலையார் சதகம்.

3. (காஞ்சிபுரம்) பல்லாவரம் சோணாசல பாரதியார் - அண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, திருவருணை கலிவெண்பா, சோணாசல சதகம்.

4. வடலூர் இராமலிங்கசுவாமிகள் - திரவண்ணாமலை திருவருட் பதிகம்.

5. புரசை அஷ்டாவதானம் முதலியார் - அருணாசல பதிகம்.

6. காஞ்சிபுரம் சபாபதி முதலியார் - அருணாசல பதிகம்.

7. யாழ்ப்பாணம், நல்லூர் தியாகராஜப்பிள்ளை - அண்ணமலையார் வண்ணம்.

இவையன்றி, உண்ணாமுலையம்மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம்,

அருணாசலேஸ்வரர் அக்ஷரமாலை, அண்ணாமலை பஞ்சரத்னம், அருணாசல நவமணி மாலை, அருணாசல அஷ்டகம், அருணைக் கலம்பகம், திருவருணை வெண்பா முதலிய நூல்களும் உள்ளன.

வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.


"உண்ணாமுலை உமையாளடும் உடனாகிய ஒருவன்

பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார் வினைவழுவா வண்ணம் அறுமே."

(சம்பந்தர்)

"ஓதிமா மலர்கள் தூவி உடையவள் பங்கா மிக்க

சோதியே துளங்கும் எண்தோள் சுடர் மழுப்படையினானே

ஆதியே அமரர்கோவேஅணி அணா மலையுளானே

நீதியால் நின்னையல்லால் நினையுமா நினைவிலேனே."

(அப்பர்)

விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை

மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்

தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்

பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில்

கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட

அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்

(திருவாசகம்)

"அஞ்செழுத்தாய் வேதமாய் ஆகமமாய் நின்றமலை

விஞ்செழுத்தாய் ஒன்றாய் விளங்குமலை - நெஞ்சகத்தே

வைத்தமலை நாயேனைத் தன்அடியார் கூட்டத்தில்

வைத்தமலை அண்ணாமலை".

"உண்ணாமுலையாள் ஒருபாக மானமலை

கண்ணார் அமுதாய காட்சிமலை - விண்ணோர்

துதிக்குமலை அன்பர் தொழுதேத்தி நாளும்

மதிக்குமலை அண்ணாமலை."

"கண்டங்கரியமலை கண்மூன்றுடையமலை

அண்டரெலாம் போற்றுதற்கு அரியமலை - தொண்டருக்குத்

தோற்றுமலை நாளும் தொழுவோர் எழுபிறப்பை

மாற்றுமலை அண்ணாமலை."

(அண்ணாமலைவெண்பா - குருநமசிவாயர்)

தருப்பொலியும் அமரா பதிக்கர சானவன்

சபையில் நடராச ரங்கைத்

தமருகத் தெழுசத்த சூத்திர வியாகரண

சாகரம் தான் விரித்தோன்

பொருப்புயர் பரங்கிரியின் மறுகினன் மெய்க்கவிசொல்

பொய்யா மொழிப் புலவராய்

பொன்போ லெனும் கவியுன் முன்பாட உன்பாடல்

பூவுலகிலே கொண்டுமேற்

கருப்பவம் அகற்றவரும் அருணகிரி நாதராய்க்

கந்தரின் அருள் பெற்றறபின்

கற்பகக் கனிரசக் கடலமுத வாரிதேன்

கடலென மகிழ்ந்து பாடும்

திருப்புகழ் முழக்குமணி ஈராறு செவியனே

சிறுபறை முழக்கியருளே

தென்னருணை வளர்கோபு ரத்துவாழ் முருகனே

சிறுபறை முழக்கி யருளே.

(க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்)

மருளே ரிடைய பவப்பிணிக்கு

மருந்தே வருக வாழ்வளிக்கும்

மணியே வருக மனம் விளக்கும்

மதியே வருக குறையாத

பொருளே வருக மாற்றறியாப்

பொன்னே வருக பொன்னாய

பூணே வருக வேதாந்தப்

பொலிவே வருக சித்தாந்தத்

தெருளே வருக சிவஞானத்

தேனே வருக திருவாளர்

தேடி வைத்த பேரின்பத்

திரளே வருக சன்மார்க்க

அருளே வருக திருவருணை

அருந்தாமுலையாய் வருகவே

அலகில் விளையாட் டயருமெங்கள்

அம்மே வருக வருகவே.

-உண்ணாமுலையம்மை

பிள்ளைத்தமிழ்

"-யாம் ஏத்தும்

உண்ணாமுலையாம் உமையோடு மேவு திரு

அண்ணாமலை வாழ் அருட்சுடரே."

(அருட்பா)

அஞ்சல் முகவரி-

அருள்மிகு. அருணாசலேஸ்வரர் திருக்கோயில்

திருவண்ணாமலை - அஞ்சல்

திருவண்ணாமலை மாவட்டம். 606 601.



 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருஆமாத்தூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  சிதம்பரம்
Next