சிதம்பரம்

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

சிதம்பரம்

'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.

நடராசப்பெருமான் ஆலயத்தால் பிரசித்திபெற்ற இத்தலத்திற்கு தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும் - சென்னை, கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், தஞ்சை, முதலிய பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை - திருச்சி மெயின்லைன் இருப்புக் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். தில்லைமரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை. ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.) வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) மிகுதீயான பற்றினால் பூசித்த ஊராதலின் பெருமபற்றப்புலியூர் என்றும், சித் + அம்பரம் (அறிவு - வெட்டவெளி) =சிதம்பரம் ஞானாகாசம் என்றும், பூலோக கயிலாயம், புண்டரீகபுரம் சிதாகாசத்தலம் எனவும் இதற்குப் பலபெயர்களுண்டு. தில்லைவாழூ அந்தணர்கள் இருந்து பெருமானைப் பூசித்துக் காத்துவரும் அற்புதத்தலம். ஜைமினி. 'வேத பாதஸ்தவம்' அருளிச் செய்ததும், சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர் திருவாசகமும் திருக்கோவையாரும் பாடி முத்தி பெற்றதும், வியாக்ரபாதர் பதஞ்சலி உபமன்யு வியாசர், சுகர் திருநீலக்கண்டர், திருநாளைப்போவார் கூற்றுவநாயனார், கணம்புல்ல நாயனார், சந்தானாசாரியர்கள் முத்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி.

தில்லைவாழ் அந்தணர்களாகிய தீட்ஷீதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான இலிங்கத்தில் ஒடுங்குவதால் இம் மூர்த்திக்கு இப்பெயர் உண்டாயிற்று. எனவே தில்லைத்தலத்தில் வசிப்போர், வந்துகண்டு செல்வோர், அர்த்தசாம வழிபாட்டைக் காண வேண்டியது அவசியமாகும்.

இறைவன் - விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா 'உந்தி'யாகவும், திருவண்ணாமலை 'மணிபூரக'மாகவும், திருக்காளத்தி 'கழுத்தாகவும்', காசி 'புருவமத்தி'யாகவும், சிதம்பரம் 'இருதயஸ்தான'மாகவும் சொல்லப்படும். இக்கோயிலில் உள்ள பேரம்பலத்திற்கு 'மேரு' என்றம் பெயருண்டு. "பெருமதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம்மேரு வருமுறை வலங்கொண்டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் சென்றார்" என்பது சேக்கிழார் வாக்கு (தடு. புரா) வடக்கிலொரு 'மேரு' இருப்பதால் இதைத் 'தட்சிணமேரு' என்று கூறுவர்.

'மேருவிடங்கன்' என்பது 'சேந்தனார்' தொடர். பஞ்சபூதத் தலங்களுள் இஃது ஆகாயத்தலம். பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை. பதஞ்சலி வியாக்ரபாதர்களுக்குப் பெருமான் கனகசபையில் நடனக்காட்சியை அருளிய தலம். தரிசிக்க முத்தி தரும்பதி. மூவர் பாடல் பெற்ற தலம்.

இராசஇராசன் வேண்டுதலின் பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப்பிள்ளையாரின் துணைகொண்டு திருமுறைப் பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட தெய்விகத்தலம். பெரியபுராணமென்னும் திருத்தொண்டர்புராணம் சேக்கிழார் பெருமானால் அரங்கேற்றச் செய்யப்பட்ட அருமையான தலம். வைணவத்திலும் 'திருச்சித்திரகூடம்' என்று புகழ்ந்தோதப்படும் திருப்பதி. நாற்புறமும் கோபுரங்கள். தெற்குக் கோபுரவாயிலே பிரதான வாயிலாகும்.

இறைவன் - நடராசர், அம்பலக்கூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர் (கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்.)

இறைவி - சிவகாமி, சிவகாமசுந்தரி.

தலமரம் - தில்லை, ஆல் (திருமூலட்டானப் பிராகாரத்தில் 'ஆல்' கருங்கல் வடிவில் செய்து வைக்கப்பட்டுள்ளது.)

தீர்த்தம் - சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம், (திருப்புலீச்சரம்) பிரமதீர்த்தம், அனந்த தீர்த்தம் முதலியன.

(சிவகங்கையே பிரதானதீர்த்தம். இளமையாக்கினார் கோயிலின் எதிரில் வியாக்ரபாததீர்த்தம் உள்ளது.)

இக்கோயிலுள் 1. சிற்றம்பலம் 2. பொன்னம்பலம் 3. பேரம்பலம் 4. நிருத்தசபை 5. இராசசபை என ஐந்து பெருமன்றங்கள் உள்ளன.

1. சிற்றம்பலம் - நடராசப் பெருமான் திருநடம்புரிந்தருளும் இடம். "தூய செம்பொன்னினால் எழுதிவேய்ந்த சிற்றம்பலம்" என்பார் அப்பர். இவ்வம்பலம் 'தப்ரசபா' எனப்படும். முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதற்பராநத்கசோழன் இச்சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் 'லெய்டன்' நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. இவனுக்கு முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோயிற்புராணம் தெரிவிக்கின்றது. இச்சிற்றம்பலம் உள்ள இடம் உயர்ந்த அமைப்புடையது, பக்கவாயில் வழியாக மேலே செல்ல வேண்டும். இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் - உள்ளன. இப்படிகளின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூலுக்குத் 'திருக்களிற்றுப்படியார்' என்ற பெயர் ஏற்பட்டது. நடராசப்பெருமானின் வலப்பால் 'ரஹஸ்யம்' - அருள்ஞானப் பெருவெளி - உள்ளது.

2. பொன்னம்பலம் (கனகசபை) - நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். சிற்றம்பலத்திற்கு முன்னால் உள்ள பகுதி. இங்கு ஸ்படிகலிங்கத்திற்கு நாடொறும் ஆறுகால பூஜையும், இரண்டாங்காலத்தில் ரத்னசபாபதிக்கு அபிஷேக வழிபாடுகளும் நடைபெறுகின்றன, இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்தசோழன், கொங்குநாட்டிலிருந்து கொண்டுவந்த உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் 'இடங்கிழி' நாயனார் வரலாற்றில் கூறுகின்றார். தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது.

3. பேரம்பலம் - இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்கிரமசோழன் காலத்தில் இச்சபையைச் செம்பினால் வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால் அறியலாம். பின்பு, இப்பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்க சோழன் ஆவான். இங்குத்தான் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர். இம்மணவில்கூத்தன் செம்பொற்காளமும் செய்து தந்தான், நூற்றுக்கால் மண்டபம் அமைத்தான், நந்தவனம் அமைத்தான், ஓராயிரம் கறவைப் பசுக்களைக் கோயிலுக்கு வழங்கினான், திருப்பதிகங்கள் ஓத மண்டபம் அமைத்தான். திருமுறைகளைச் செப்பேடு செய்வித்தான் என்னும் பல அரிய செய்திகளும் கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன.

4.நிருத்த சபை - நடராசப் பெருமானின் கொடிமரத்துக்கு (துவஜஸ்தம்பத்திற்கு) த் தென்பால் உள்ளது. ஊர்த்துவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே. அப்பெருமானின் திருமேனி இங்கே உள்ளது.

5. இராச சபை - இஃது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு முன்னர்ச் சொல்லிய பஞ்சாக்கரப்படியில் அபிஷேகமும் இம்மண்டபத்தில் முடிசூட்டு விழாவும் நடைபெற்று வந்தன. இம்முடிசூட்டினைத் தில்லைவாழ் அந்தணர்களே செய்து வந்தனர்.

இத்தலத்தில் நிகழ்ந்த அரிய செயல்களுள் சில -

1) மாணிக்கவாசகர் புத்தரை வாதில்வென்று ஊமைப்பெண்ணைப் பேசவித்தது.

2) திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது.

3) உமாபதிசிவம் 'கொடிக்கவி' பாடிக் கொடியேற வைத்தது.

4) திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச்செய்தது.

5) திருமுறைகளை வெளிப்படுத்தியது.

6) சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத் தந்தது முதலிய பலவாகும்.

தேவாரப் பதிகங்ள், திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, கோயில் நான்மனி மாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, சிவகாமி இரட்டை மணிமாலை, தில்லைக் கலம்பகம், கோயிற் புராணம் முதலிய நூல்களாலும், ஏனைய அளவற்ற நூல்களில் ஆங்காங்கு வரும் பகுதிகளாலும் இத்தலத்தன் பெருமையை அறியலாம்.

திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியிட்டுள்ள 'சிதம்பரவிலாசம்' நூல் இக்கோயிலமைப்பைப் பற்றிக்கூறுகின்றது.

இக்கோயிலுக்கு, மிகச்சிறப்பான திருப்பணிகளைச் செய்த விக்கிரம சோழன் காலம் வரையில் வழங்கப்பட்ட நிவந்தங்கள் சண்டேஸ்வரர் பெயரால் நடைபெற்று வநதன. அமன்னனின் காலத்திற்கு பிறகு குறிப்பிட்ட குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. அக்குழுவில் தில்லை வாழ் அந்தணர்கள் சிலரும் வழிபாடு செய்யும் உரிமை கருதிச் சேர்க்கப்பட்டனர். சோழ மன்னர்களின் ஆட்சிக்குப் பிறகு இக்கோயில் தில்லைவாழ் அந்தணர்க்கு உரியதாயிற்று. இவ்வாறு, கல்வெட்டுத் துறையின் ஆண்டறிக்கை கூறுகின்றது.

'மணவில்' என்ற ஊரின் தலைவனும், முதற்குலோத்துங்க சோழன் விக்கிரமசோழன் ஆகியோரின் படைத்தலைவனுமாகிய பொன்னம்பலக்கூத்தன் என்பவன். தில்லையில் நூற்றுக்கால் மண்டபத்தைத் தன் மன்னன் பெயரால் விக்கிரம சோழன் மண்டபம் செய்வித்தான், தேவாரம் ஓதுவதற்கு மண்டபம் கட்டினான், தேவாரப் பதிகங்களைத் தன் அமைச்சனான காளிங்கராயனைக் கொண்டு செப்பேட்டில் எழுதுவித்தான், ஞானசம்பந்தப் பெருமான் கோயிலைப் பொன்னால் வேய்ந்தான், நடராசப் பெருமான் மாசிக்கடலாட்டின் போது எழுந்தருளியிருக்க. 'கிள்ளை' என்னும் ஊரில் மண்டபம் அமைத்தான். பேருந்துச் சாலையோரத்தில் அமைந்துள்ள கீழ்வாசல் கோபுரம் ஏழு நிலைகளுடன் விளங்குகிறது. வாயிலைக் கடந்த உட்சென்றால் உள்கோபுரமும் ஏழுநிலைகளுடன் காட்சியளிக்கிறது. வலப்பால் தில்லைமரம் வளரும் மேடையுள்ளது. நாற்புற வாயில்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. வாயிலைக் கடந்ததும் வலப்பால் ஆயிரக்கால் மண்டபம் உள்ளது.

அடுத்துள்ளது சிவகங்கைத் தீர்த்தம். கரையில் தென், கீழ்புறச் சுவர்களில் திருவாசகப் பாடல்கள் முழுவதும் கல்வெட்டுக்களாகப் பதிக்கப்பட்டுள்ளன. குளத்தின் மேற்கரையில் 'பாண்டி நாயகம்' என்கிற முருகன் சந்நிதி உள்ளது. சிவகாம சுந்தரி சந்நிதி தனிக் கோயிலாகப் பொலிவுற உள்ளது. உள் பிராகாரத்தில் சபாநாயகர் (தருமை) கட்டளை அறை, நிருத்தசபையில் வலக்காலை மேலே தூக்கியுள்ள ஊர்த்துவ தாண்டவர், சரபமூர்த்தி முதலிய சந்நிதிகள் உள்ளன. வெளிப்பக்கத்தில் பிட்சாடனர் சுதை சிற்பம் உள்ளது.

நடராச சந்நிதிக்கான தங்கத்தகடு வேய்ந்த கொடிமரம் உள்ளது. பிராகாரத்தில் அம்பாள் சந்நிதி, கம்பத்திளையனார், தாயுமானவர், விநாயகர், சுப்பிரமணியர், படிகளேறிச் சென்றால் திருமுறை காட்டிய விநாயகர் (பொல்லாப் பிள்ளையார்) சுதை சிற்பம், முதலியனவுள்ளன, தொடர்ந்து பிராகாரத்தில் விசுவநாதர் லிங்கம், வைத்தியநாதர் தையல் நாயகி சந்நிதி, காலபைரவர், சண்டேசுவரர், விநாயகர் அறுபத்துமூவர் திருமேனிகள் உள்ளன. திருமூலட்டானம் சுவாமி சந்நிதி. பக்கத்தில் 'உமைய பார்வதி' தங்கக் கவசத்தில் பேரழகோடு காட்சி தருகின்றாள். அர்த்தசாம அழகர் புறப்பாட்டுச் சபையுள்ளது. உற்சவமூர்த்திகள் வைத்துள்ள மண்டபம், சனிபகவான் சந்நிதி உள்ளது.

சிற்றம்பலத்து நட்டமாடும் சிவக்கொழுந்தைத் தரிசிக்கும்போது மனம் லயிப்புற்றால் 'என்று வந்தாய்' எனும் குறிப்பு நமக்கும் கிடைக்கும், அம்பலக் கூத்தர் இருப்பது சிற்றம்பலம் - சிற்சபை. முன் மண்டபம் பேரம்பலம். நடராசப் பெருமானக்குப் பக்கத்தில் 'சிதம்பர ரகசியம்' உள்ளது. இந்த ரகசியம் உள்ள இடத்தில் வில்வதளங்கள் தொங்குகின்றன.

நடராசப் பெருமானை நின்ற தரிசிக்கும் போது இடப்பால் கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியுள்ளது. 'திருச்சித்ரகூடம்' எனப்படும் இச்சந்நிதியில் பெருமாள் கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார். உள்ளே வலமாக வரும்போது வேணு கோபாலர் சந்நிதி யதிராசர், யோக நரசிம்மர், கூரத்தாழ்வார், ஆசார்யர்களின் உற்சவ மூர்த்தங்கள் ஆஞ்சநேயர் திருமேனிகள் முதலியவை உள்ளன.

தில்லையாடியின் திருவடி - ஆட எடுத்திட்ட பாதம் - குஞ்சிதபாதம் நம் குறைகளைப் போக்கி நிறைவையும் நல்வாழ்வையும் தருமே. ஆனித் திருமஞ்சனமும் மார்கழித் திருவாதிரையும் இத்திருக்கோயிலில் நடைபெறும் மிகச் சிறப்பான விழாக்களாகும். மகுடாகமப்படி பூசைகள் நடைபெறுகின்றன.

'செல்வநெடு மாடம் சென்று சேணோங்கிச்

செல்வமதி தோயச் செல்வ முயர்கின்ற

செல்வர் வாழ் தில்லைச் சிற்றம் பலமேய

செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே.'

(சம்பந்தர்)

'பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ

எத்தினாற் பத்தி செய்கேன் என்னை c இகழவேண்டா

முத்தனே முதல்வாதில்லை அம்பலத்தா டுகின்ற

அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே

(அப்பர்)

'மடித்தாடும் அடிமைக் கணன்றியே

மனனே c வாழு நாளுந்

தடித்தாட்டித் தருமனார் தமர் செக்கி

லிடும் போது தடுத்தாட்

கடுத்தாடு கரதலத்தில் தமருகமும்

எரியகலும் கரிய பாம்பும்

பித்தாடிப் புலியூர்ச் சிற்றம் பலத்தெம்

பெருமானைப் பெற்றா மன்றே'

(சுந்தரர்)

"ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்

கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற

நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே

தில்லைச்சிற் றம்பலமே சேர்."

(ஐயடிகள் காடவர்கோன்)

இருவினையின் மதி மயங்கித் -திரியாதே

எழுநரகிலுழலு நெஞ்சுற் -றலையாதே

பரமகுரு அருள் நினைந்திட் -டுணர்வாலே

பரவு தரிசனையை யென்றெற் -கருள்வாயே

தெரி தமிழை யுதவு சங்கப் -புலவோனே

சிவனருளு முருக செம் பொற் -கழலோனே

கருணை நெறி புரியுமன்பர்க் -கெளியோனே

கனக சபை மருவு கந்தப் -பெருமாளே.

(திருப்புகழ்)

"சொற் பேறு மெய்ஞ்ஞானச் சுயஞ் ஜோதியாந் தில்லைச்

சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந்

தாயின் உலகனைத்துந் தாங்குந்திருப்புலியூர்க்

கோயிலமர்ந்த குணக் குன்றமே."

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. நடராசப் பெருமான் (சபாநாயகர்) தேவஸ்தானம்.

சிதம்பரம் - அஞ்சல் - 608 001.

சிதம்பரம் வட்டம் - கடலூர் மாவட்டம்.




 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவண்ணாமலை
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவேட்களம்
Next