திருமுறைத்தலங்கள்
சோழ நாட்டு (வடகரை) த் தலம்
கோயில்
ருச்சாயக்காடு ( சாயாவனம்)
சோச்செங்கட்சோழன் கட்டிய மாடக் கோயில். சாய் - கோரை. பசுமை + சாய் = பைஞ்சாய். (பைஞ்சாய் என்னும்) கோரை மிகுந்திருந்த தலமததலின் சாய்க்காடு என்று பெயர் பெற்றதென்பர். காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறுதலங்களுள் இதுவும் ஒன்று. (ஏனையவை திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, ஸ்ரீ வாஞ்சியம்) இயற்பகை நாயனார் தம் மனைவியை இத் தலத்தெல்லை வரை அழைத்து வந்து இறைவனுடன் வழியனுப்பி வைத்தார் என்பது வரலாறு.
சீர்காழி - பூம்புகார்ச் சாலையில் இத்தலம் உள்ளது. திருவெண்காட்டிலிருந்து 3 A.e. தொலைவு. மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. சாலையில் சாய்க்காடுடையார் திருக்கோயில் என்று பெயர்ப் பலகையுள்ளது. உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இயற்பகை நாயனார் ஆகியோர் வழிபட்டதும் பேறு பெற்றதுமான தலம்.
இறைவன் - சாயாவனேஸ்வரர், இரத்தினச் சாயவனேஸ்வரர்
இறைவி - கோஷாம்பாள், குயிலினும் நன்மொழியம்மை
தலமரம் - பைஞ்சாய்
தீர்த்தம் - காவிரி, ஐராவததீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது) .
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. இத்தலம் மிகப் பழைமையான சிறப்புடையது - பூம்புகார் எல்லைக்குள் இருப்பது. 'நெடுங்கதிர்க்கழனித்தண் சாயக்கானம் (அகநானூறு 220)
'செந்நெலஞ்செறுவின் அன்னந்துஞ்சும்
பூக்கெழு படப்பைச் சாய்க்காட்டன்ன'
(அகநானூறு 73)
இத்திருக்கோயிலுக்கு அண்மையில்தான் பூம்புகார்க்காவல் தெய்வமான சம்பாபதி அம்மன் கோயில் உள்ளது. இக் கோயில், ஓடுகள் வேயப்பட்டு முன்னால் இருபூதங்கள் இருக்க, கோயில் குளத்திற்குத் தெற்கில் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடி மரமில்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக்கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிராகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்கை நாயனார் துணைவியாருடன் உள்ள சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள நால்வர் சந்நிதியில் 'மூவர்மதலிகளே' உளர். விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சந்நிதி முதலிய சந்நிதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து, படிகளேறி, வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன.
இங்குத் தனியே வைக்கப்பட்டுள்ள வில்லேந்திய வேலவர் பஞ்சலோகத் திருமேனி மிகச்சிறப்புடையதும், தொழுது நிறைவு பெறத்தக்கதுமாகும். நான்கு
கரங்களுடன் வில்லையேந்திக் கம்பீரமாக வேலவரும் உயர்ந்தமயிலும் திகழ்ந்து காண்போர் கண்களுக்குப் பெரு விருந்தாகின்றன. இவை நெடுங்காலம் முன்பு கடலில் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.
சுவாமி சந்நிதி வாயிலில் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன. வாயிலில் மேற்புறம் இயற்பகை நாயனாருக்கு இறைவன் அருள்செய்த காட்சி சித்திரமாக எழுதப்பட்டுள்ளது? கண்டுதொழுது உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம். சதுர ஆவுடையாரில் குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத்திருமேனி. உள் பிராகாரத்தில் வலம் வர வசதியுள்ளது. மூலவருக்கு வலப்பால் நடராச சபை உள்ளது. திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் திருமுறை விண்ணப்பத்திற்கான கட்டளை இக்கோயில் 1964 -ல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கல்வெட்டொன்று பதிக்கப்பட்டுள்ளது.
சித்திரைப் பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாள்களுக்கு நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு, சித்திரை வைகாசி மாதங்களில் இயற்பகைநாயனார் பெயரில் தண்ணீர்ப் பந்தல் வைகாசியில் குமரகுருபர் குருபூஜை. மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு ஐந்துநாள் விழா அதில் நான்காம் நள்ளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீகம் முதலிய சிறப்புக் கட்டளைகளும் விழாக்களும் நடைபெறுகின்றன.
நாடொறும் நான்குகால வழிபாடுகள் நடைபெறும். இத்திருக்கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளதலம் பல்லவனீச்சுரம். கவிராஜநாயகம் பிள்ளை என்பவரால் பாடப்பட்டுள்ள தலபுராணம் அச்சிடப்படவில்லை என்று தெரிகிறது.
'போய்க்காடே மணந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமான.'
(முதுமரம் - ஆலமரம் என்று மக்கள் வழக்கில் உள்ளது.)
(சம்பந்தர்)
'தோடுலா மலர்கள்தூவித் தொமுதெழு மார்க்கண்டேயன்
வீடுநாள் அணுகிற்றென்று மெய்கொள்வான் வந்தகாலன்
பாடுதான் செல்லு மஞ்சிப் பாதமே சரணமென்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே
(அப்பர்)
'அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அற்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழு c சார்ந்து.'
(ஐயடிகள்
காடவர்கோன்)
சீர்பூத்த வெண்ணிலவைத் திரைபூத்த
வரநதியைச் செந்தே னூற்று
மார்பூத்த மலரதனைக் கடுக்கைதனைச்
செஞ்சடிலத் தணியுங் கோவைக்
கார்பூத்த மேனியனும் மறைபூத்த
நாவினனும் காணா தோங்கும்
ஏர்பூத்த சின்மயச்சா யாவனத்தெம்
மிறையவனை இறைஞ்சல் செய்வாம். -சாயாவனப் புராணம் - தலபுராணம்
வில்லேந்திய வேலவர் துதி
'வினைசேரா சேர்ந்தனவும் மெல்ல விலகும்
நினைவுகள் தூயதாம் நெஞ்சில் - இனையன
எல்லாம் அருள்வான் எழில்மிகு சாய்க்காட்டு
வில்லேந்தி என்றே விளம்பு.'
-'வலிக்காலில்
பாய்க்காடு கின்ற வொரு பச்சைமுகில் பரவுஞ்
சாய்க்காடு மேவுந் தடங்கடலே.'
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. சாயாவனேஸ்வரர் திருக்கோயில்
சாயாவனம் - காவிரிப்பூம்பட்டினம் அஞ்சல் 609 105
சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.
மயிலாடுதுறை R.M.S.