திருமுறைத்தலங்கள்
சோழ நாட்டு (வடகரை) த் தலம்
கோயில்
திருப்பல்லவனீச்சுரம் ( காவிரிப்பூம்பட்டினம்) - பூம்புகார்
இன்று காவிரிப்பூம்பட்டினம் - பூம்புகார் என்று வழங்குகிறது. பல்லவமன்னன் வழிபாடு செய்த தலம். பட்டினத்தார், இயற்பகை நாயனார் ஆகியோரின் அவதாரப் பதி. சிலப்பதிகாரக் காப்பியம் தொடங்குவது இத்தலத்தில்தான்.
சீர்காழி, சிதம்பரம், திருச்சாய்க்காடு, மயிலாடுதுறை முதலிய பல ஊர்கிளிலிருந்து பூம்புகாருக்குப் பேருந்து வசதிகள் உள்ளன. பூம்புகாருக்குள் நுழையும்போது, எல்லையில் உள்ள 'கண்ணகி வளைவை'த் தாண்டியதும் சாலை
ஓரத்திலேயே கோயில் உள்ளது.
இறைவன் - பல்லவனேஸ்வரர்
இறைவி - சௌந்தரநாயகி
தலமரம் - மல்லிகை, புன்னை, தற்போதில்லை.
தீர்த்தம் - காவிரி.
கோயிலுக்கு எதிரில் அகத்தியர் உண்டாக்கிய ஜான்னவி தீர்த்தம் - திருக்குளம் உள்ளது.
சம்பந்தர் பாடல் பெற்றது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கோபுரவாயிலைக் கடக்கும் போது இடப்பால் அதிகார நந்தி சந்நிதியுள்ளது. வாயிலைக் கடந்து வந்தால் வெளிச்சுற்றில் சூரியன், நான்கு சிவலிங்கத் திருமேனிகள், கைகூப்பிநின்ற நிலையில் பட்டினத்தார் சந்நிதி ஆகியவை உள்ளன.
விநாயகரையடுத்துள்ள சுப்பிரமணியர் சந்நிதியில் பெருமான் உருவம் பெரியதாகவுள்ளது. அடுத்து கஜலட்சுமி சந்நிதியும், ஒரே சந்நிதிக்குள் சனிபகவான் பைரவர், சந்திரன் ஆகிய திருமேனிகள் வைக்கப்பட்டும் உள்ளன.
வெளி மண்டபத்தில் தலப்பதிகக் கல்வெட்டு உள்ளது. வலப்பால் அம்பாள் சந்நிதி, நேரே மூலவர் தரிசனம். பெரிய, பருத்த சிவலிங்க பாணத்துடன் கூடிய கம்பீரமான காட்சியைத் தந்தவாறு பல்லவனேஸ்வரர் திகழ்கின்றார். உள்மண்டபத்தில் வலப்பால் தில்லையமைப்பில் அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது.
5-4-1995-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாடொறும் நான்குகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. பெருவிழழ நடைபெறவில்லை. ஆடி மாதத்தில் பட்டினத்தார் திருவிழா பன்னிரு நாள்குளுக்கு நகரத்தார்களால் சிறப்பாக நடத்தப்பெறுகின்றது.
இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்களே உள்ளன. ஒன்று கருவறையின் மேற்குச் சுவரிலும் இன்னொன்று கோயில் முற்றத்திலும் காணப்படுகிறது. மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தர பாண்டியனது 17-ஆம் ஆட்சியாண்டில் இராஜாதி ராஜ வளநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்துக் கோயிலுக்கு நிலம் வழங்கியதை முதற் கல்வெட்டு கூறுகிறது. சாலி வாகனசகம். கலி 4775 சகம் 1670 (A.H 1757) ஜய வருடம் ராரவுத்த மிண்ட நாயனார் முதலியோர் திருச்சாய்க்காட்டுச்சீனம், காவிரிப்பூம்பட்டினம் மாகாணம் பல்லவனீச்சரக் கோயிலுக்குத் திருப்பணிக்கும் வழிபாட்டிற்கும் நிலம் வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது அடுத்த கல்வெட்டு.
"எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்கநின்ற கண்ணுதல் நண்ணும் இடம்
மண்ணார் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச் சுரமே."
(சம்பந்தர்)
-வாய்க்கமையச்
சொல்லவ னீச்சரங்கு தோயவும்பராம் பெருமைப்
பல்லவனீச்சரத்தெம் பாவனமே.
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. பல்லவனேஸ்வரர் திருக்கோயில்
(பல்லவனீச்சுரம்) - காவிரிப்பூம்பட்டினம்
பூம்புகார் அஞ்சல், சீர்காழி வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம் - 609 105.