திருமுறைத்தலங்கள்
சோழ நாட்டு (வடகரை) த் தலம்
கோயில்
திருக்குரக்குக்கா ( திருக்குரக்காவல்)
மக்கள் வழக்கில் 'திருக்குரக்காவல்' என்று வழங்குகிறது.
1) வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 'இளந்தோப்பு' வந்து, ஊர்த் தொடக்கத்திலேயே உள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் (திருக்குரக்காவல்) சாலையில் 3 A.e. உள்ளே சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். குருக்கள் வீடு பக்கத்திலேயே உள்ளது.
2) மயிலாடுதுறையிலிருந்து பஸ்ஸில் வருவோர் - 'பட்டவர்த்தி' செல்லும் நகரப் பேருந்தில் ஏறி, 'மதகடி நிறுத்தத்தில்' இறங்கி, மதகைத் தாண்டி இளந்தோப்பு வந்து, ஊர்த் தொடக்கத்திலேயே உள்ள மருத்துவ மனையின் ஓரமாகச் செல்லும் திருக்குருக்காவல் சாலையில் 3 A.e உள்ளே சென்று ஊரையும் கோயிலையும் அடையலாம். இவ்வுட் பாதைக்கு பஸ் வசதியில்லை. நடந்து செல்ல வேண்டும் (அ) இளந் தோப்பிலிருந்து சைக்கிளில் சென்று திரும்பலாம். பழவாற்றின் கரையில் உள்ள தலம். இதன் மறுகரையில் 'கருப்பறியலூர்' உள்ளது. அநுமன் வழிபட்ட பதி.
இறைவன் - குந்தளேஸ்வரர்.
இறைவி - குந்தளாம்பிகை.
தீர்த்தம் - கணபதிநதி.
அப்பர் பாடல் பெற்றது.
ராஜகோபுரமில்லை. முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரமில்லை. பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாய ஆறுமுகர் (மயில்வாகனராய்) , சந்நிதிகள் உள்ளன.
முன்மண்டபத்தில் வலப்பால் பைரவர், சூரியன், அநுமன் மூர்த்தங்கள் உள்ளன. அப்பர் மூலத்திருமேனி அழகாகவுள்ளது. சுவாமி சந்நிதி நேரே உள்ளது. வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதி. வலப்பால் அம்பாள் சந்நிதி. தெற்கு நோக்கியது. சிறிய அழகான திருமேனி. சுவாமி, அம்பாள் விமானங்கள் ஏகதள உருண்டையமைப்பில் உள்ளன. நாடொறும் இருவேளை பூஜைகளே பெருவிழாக்கள் எவையுமில்லை. அமாவாசை நாளில் அம்பாளுக்கு ஒமம் நடைபெறுகிறது.
"ஆல நீழல் அமர்ந்த அழகனார்
காலனை யுதை கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்
பாலருக் கருள் செய்வர் பரிவொடே." (அப்பர்)
-மிக்கதிரு
மாவளருஞ் செந்தாமரை வளருஞ்செய் குரக்குக்
கா வளரும் இன்பக்கன சுகமே (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. குந்தளேஸ்வரர் திருக்கோயில்
திருக்குரக்காவல் - இளந்தோப்பு அஞ்சல் - 609 201
மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.