திருமுறைத்தலங்கள்
சோழ நாட்டு (வடகரை) த் தலம்
கோயில்
திருவாழ்கொளிப்புத்தூர் ( திருவாளப்புத்தூர், வாளளிப்புத்தூர்)
தேவாரத்தில் இத்தலம் வாழ்கொளிப்புத்தூர் என்றும், தல புராணத்தில் வாளளிப்புற்றூர் என்றும், மக்கள் வழக்கில் திருவாளப்புத்தூர் என்றும் வழங்கப்பெறுகிறது.
1) வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில், இளந்தோப்பு தாண்டி, மேலும் சென்றால் சாலையில் உள்ள வாளளிப்புத்தூரை அடையலாம். ஊரில் இடப்புறமாகச் செல்லும் பாதையில் சென்று கோடியிலுள்ள கோயிலை அடையலாம்.
2) மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்தில் சென்று இவ்வூரையடையலாம்.
அர்ச்சுனன் தீர்த்தயாத்திரையில் இங்கு வந்தபோது நீர்வேட்கை மிகுந்தது. இறைவன் முதியவர் உருவில் வந்து ஒரு கதையைத் தந்து, வாகை மரம் ஒன்றினடியில் அதையூன்றி, வெளிப்படும் நீரைப்பருகுமாறு கூறினார். அருச்சுனன் தன் கையிலிருந்த வாளை அவரிடம் தந்து, தான் நீர்பருகிவிட்டு வரும்வரை பாதுகாத்துத் தருமாறு கூறிச் சென்றான். இறைவன் அவன் தந்த வாளை அம்மரப் புற்றில் ஒளித்து வைத்து மறைந்தார். நீர் பருகித் திரும்பிய அர்ச்சுனன், இறைவனிடம் முறையிட அவரும் அதை வெளிப்படுத்தித் தந்து அருள்புரிந்தார். என்பது தலவரலாறு. இதனால் இத்தலம் வாள்ஒளி புற்றூர் ஆயிற்று என்பர். திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட தலமாதலின் இதற்கு அரதனபுரம் என்றும் பெயர்.
இறைவன் - மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்.
இறைவி - பிரமகுந்தளாம்பாள், வண்டமர்பூங்குழலி.
தலமரம் - வாகை.
தீர்த்தம் - பிரம தீர்த்தம்.
அர்ச்சுனன், திருமால், வண்டு வழிபட்ட தலம்.
சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற தலம்.
கிழக்கு நோக்கிய ஆலயம். கோயிலின்முன் பிரமதீர்த்தம் தாமரைக் குளமாகக் காட்சி தருகிறது.
முகப்பு வாயிலைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் இடப்பால் வாகைமரம் உள்ளது. வேறு முக்கிய சந்நிதிகள் இல்லை. வெளவால் நெத்தி மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி. உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி, பைரவர், சந்திரன், சந்நிதிகள் உள்ளன. நால்வர் சந்நிதி உள்ளது. நடராச சபை தரிசிக்கத் தக்கது.
கோஷ்டமூர்த்தங்களுள் துர்க்கைச் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமாக வழிபடப் பெறுகின்றது. நேரே மூலவர் தரிசனம். சற்று உயர்ந்த பாணத்துடன் வடிய இலிங்கத் திருமேனி.
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இத்தலத்திற்குத் தலபுராணம் பாடியுள்ளார். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் இத்திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு 1-9-1985ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
நாடொறும் நான்குகால வழிபாடுகள் நடைபெறும் இக்கோயிலில் பெருவிழா நடைபெறுவில்லை. கார்த்திகைச் சோமவாரங்கள், நவராத்திரி, கார்த்திகைத் தீபம் முதலிய சிறப்பு உற்சவங்கள் மட்டுமே நடைபெறுகின்றன.
சுமார் 250 ஏக்கர் நிலமிருந்தும் கோயில் நித்திய வழிபாட்டிற்கும் வசதியின்றித் தவிக்கிறது. இரண்டாண்டுகளாகப் பணியாளர்களுக்கு ஊதியமில்லை. குருக்களின் முயற்சியால் வழிபாடு நடைபெறுகிறது. திருப்பணி செய்து காக்கப்படவேண்டிய கோயில். அறநிலையத் துறையின் பார்வை இதன் மீது என்றுபடுமோ?
"சாகை ஆயிரமுடையார் சாமமும் ஓதுவதுடையார்
ஈகையார் கடைநோக்கி இரப்பதும் பலபலவுடையார்
தோகைமாமயிலனைய துடியிடை பாகமும் உடையார்
வாகைநுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூர்உளாரே." (சம்பந்தர்)
'மெய்யனை மெய்யினின்றுணர்வானை மெய்யிலாதவர் தங்களுக்கெல்லாம்
பொய்யானைப் புரமூன்றெரித்தானைப் புனிதனைப் புலித்தோல் உடையானைச்
செய்யானை வெளியதிருநீற்றில் றிகழுமேனியன் மான்மறியேந்தும்
மை கொள்கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்தென்னினைக் கேனே."
(சுந்தரர்)
'சீர்பூத்த நறுங்கமல மேலவனும் மாலவனும் செம்பொனாய
ஊர்பூத்த சுதன்ம சபையானும் ஒளியீனும் முடிஉம்பராரும்
நார்பூத்த புவியாகும் குவியாரும் வந்திறைஞ்சி நாளும்நல்கி
ஏர்பூத்த வாளளி புற்றூரமர் மாணிக்க லிங்கம் இருதாள்போற்றி.'
(தலபுராணம்)
-தாவுமயல்
தாழ்கொள் இருமனத்துக் காரிருணீத் தோர்மருவும்
வாழ்கொளி புத்தூர் மணிச் சுடரே. (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. மாணிக்கவண்ணர் திருக்கோயில்
திருவாளப்புத்தூர் - அஞ்சல் - 609 205
மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.