ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருக்கண்ணமங்கை (க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம்)
திருச்சேறையிலிருந்து சுமார் 15 மைல், கும்பகோணத்திலிருந்து சுமார் 25 மைல், திருவாரூர் ஸ்டேஷனிலிருந்து வட மேற்கில் 4 மைல், கும்பகோணம் - திருவாரூர் பஸ் மூலம் வரலாம். டவுன் பஸ் வசதி உண்டு. குடவாசலிலிருந்தும் வரலாம்.
மூலவர் - பக்தவத்ஸலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள், நின்ற
திருக்கோலம். மிகப் பெரிய திருவுருவம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - அபிஷேகவல்லி.
தீர்த்தம் - தர்சனபுஷ்கரிணி.
விமானம் - உத்பல விமானம்.
ப்ரத்யக்ஷம் - வருணன், ரோமசமுனி.
விசேஷங்கள் - கோயிலுக்கு வேண்டிய விமானம், மண்டபம், அரண்யம், ஸரஸ்ஸு, க்ஷேத்ரம், ஆறு, நகரம் ஆகிய ஏழு அம்சங்களும் அமுதமயமாக இருப்பதால் இதற்கு ஸப்தாம்ருதக்ஷேத்ரம் என்றும் பெயருண்டு. மந்த்ரஜயம் இல்லாவிட்டாலும் ஓர் இரவு இந்த க்ஷேத்திரத்தில் வாஸம் செய்தாலும் மோக்ஷம் கிடைக்கும் என்று ஐதீஹம். தாயார் ஸந்நிதியில் ஒரு தேன்கூடு போன்ற அமைப்புக்கு தினந்தோறும் பூஜை நடக்கிறது. இங்குள்ள அருமையான சிற்பங்களில் வைகுண்டநாதன் சிலையும், கருடன் மேல் எழுந்தருளி இருக்கும் மகாவிஷ்ணுவின் சிலையும் மிக அழகானவை.
நாதமுனிகளின் சீடரான திருக்கண்ணமங்கையாண்டான் இவ்வூரில்தான் ஆனித்திருவோணத்தன்று அவதரித்து துளஸி புஷ்பாதி ஸமர்ப்பணத் தொண்டு செய்தார். ஸ்ரீயின் மூன்று திருநாமங்களோடு கூடிய மந்திரம் இந்த க்ஷேத்திரத்தில் ஸித்தியை சீக்கிரத்தில் கொடுக்கும் என்பது புராண வரலாறு. லக்ஷ்மீ தவம் செய்ததால் லக்ஷ்மிவனம் என்ற பெயர் உண்டு. சிவபெருமான் இந்த க்ஷேத்திரத்தில் நான்கு உருவங்கள் எடுத்துக்கொண்டு நான்கு பக்கங்களையும் காத்து வருகிறார். பெரிய ஊராகையால் ஸகல ஸெளகர்யங்களும் உண்டு.
மங்களா சாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1638-47, 1848, 2008, 2673 (71) , 2674 (116)
மொத்தம் 14 பாசுரங்கள்.