ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருக்கண்ணங்குடி (க்ருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்)
நாகப்பட்டினத்திலிருந்து பஸ் வழியாக சிக்கலுக்கும் கீவளுருக்கும் இடையேயுள்ள ஆழியூர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து முக்கால் மைல் தூரம் நடந்தோ வண்டியிலோ செல்லலாம். தஞ்சாவூர்- கீவளூர் ரயில் பாதையிலுள்ள கீவளூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2 மைல் தூரம் சென்றும் அடையலாம். இங்கு வசதிகள் ஒன்றும் இல்லை. சிக்கலில் தங்கி ஸேவிக்கலாம்.
மூலவர் - லோகநாதன், ச்யாமளமேனிப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர் - தாமோதர நாராயணன்.
தாயார் - லோகநாயகி உத்ஸவர் - அரவிந்தவல்லி.
தீர்த்தம் - ராவண புஷ்கரிணி.
ஸ்தல விருக்ஷம் - மகிழமரம் (வகுளம்)
விமானம் - உத்பல விமானம்.
ப்ரத்யக்ஷம்- ப்ருகு, ப்ருஹ்மா, உபரிசரவஸு, கெனதமர், திருமங்கையாழ்வார்.
விசேஷங்கள் - இவ்வூரின் முக்கிய அடையாளங்களான ஊறாக்கிணறும், உறங்காப்புளியும் இப்போது இல்லை. காயாமகிழ் (காய்ந்து பட்டுப் போகாத வரம்பெற்ற ஸ்தலவ்ருக்ஷம்) ஸந்நிதியின் பின்புறம் இருக்கிறது.
தாயார் ஸந்நிதியில் மூலவரும் உத்ஸவரும் ஒரே முகஜாடையுடனிருப்பது வேறெங்கும் காணமுடியாத அதிசயம். வஸிஷ்டர் தம் பக்தியால் வெண்ணை மயமான க்ருஷ்ணனை இளகி, த்ரவமாகாமல் கட்டி, திவ்யமங்கள விக்ரஹம்செய்து, த்யானம் செய்வார். இப்படி வெகு காலம் கடந்தபின், ஒரு நாள் பகவான் கோபாலன் உருவம்கொண்டு வஸிஷ்டர் ஆராதனம் செய்யும் வெண்ணை கண்ணனை அமுது செய்ததைப் பார்த்து கோபாலனைப் பிடிக்க ஒட, கோபாலனும் மேற்கு திசை நோக்கி ஒட, மகிழ மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த மஹரிஷிகள் பக்தியாகிய பாசக்கயிற்றால் கட்டியதால், கட்டுண்டு கோயில்கொண்டு கண்ணன் எழுந்தருளியதால், திருக்கண்ணங்குடி என்ற பெயர் உண்டாயிற்று.
திருமங்கையாழ்வார், நாகப்பட்டினத்திலிருந்து தங்கமயமான புத்த விக்ரஹத்தை ரங்கநாதன் கோபுரம் பிராகாரங்கள் முதலிய திருப்பணிகளை செய்ய கொண்டுவந்து புதைத்து, பகவான் அருளால் எடுத்துச் சென்ற ஸ்தலம் இது.
'காயாமகிழ், உறங்காப்புளி, தோலாவழக்கு, உராக்கிணறு திருக்கண்ணங்குடி' என்பது பழமொழி.
மங்களா சாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1748-57 - 10 பாசுரங்கள்.