ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருசெம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)
சீர்காழியிலிருந்து 5 மைல் தூரத்தில் உள்ளது. பஸ் வசதி உண்டு. இதுவும் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளது.
மூலவர் - பேரருளாளன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்.
உத்ஸவர் - ஹேமரங்கர், செம்பொன்னரங்கர்.
தாயார் - ஹேமபுஷ்கரிணி, கனகதீர்த்தம்.
விமானம் - ருத்ரன்.
விசேஷங்கள் - ராவணவதத்திற்குப் பிறகு, ராமன் இந்த ஸ்தலத்தில் த்ருடநேத்ரர் என்ற முனிவர் ஆச்ரமத்தில் தங்கி அவர் சொல்லியபடி தங்கத்தில் பசு செய்து அதில் நான்கு நாட்கள் தங்கி ஒரு பிராம்ஹணனுக்கு தானம் செய்து, அதைக் கொண்டு அந்த பிராம்ஹணன் இந்தக் கோயிலைக் கட்டியபடியால், செம்பொன் செய்கோயில் என்ற பெயர் ஏற்பட்டது. சிவபெருமான் ப்ரஹ்ம ஹத்யா தோஷத்திலிருந்து விடுபட "ஏகாதச ருத்ர" அச்வமேதத்தை செய்து பூர்ணஹ§தி ஸமயத்தில் பகவான் ஸ்ரீபூநீளை ப்ரஹ்மாதிதேவர்களுடன் சங்கரனுக்கு ஸேவை ஸாதித்த போது, ருத்ரன் பிரார்த்தனைப்படி விஷ்ணு பதினோரு ரூபத்துடன்
ருத்திரனுடன் நித்யவாஸம் செய்துகொண்டு பக்தர்களின் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பது வரலாறு. இதை முன்னிட்டு தை மாதம் அமாவாசை கழிந்த மறுநாள் ராத்திரி 11 திவ்ய தேச எம்பெருமான்களும் திருமணிக்கூடத்திலிருந்து தொடங்கி 11 கருடவாஹனங்களில் எழுந்தருளி (பிரதக்ஷிமாய் ஆழ்வார் மங்களாசாஸனம் பெற்று) திருநாங்கூரில் 11 கருடசேவை
உத்ஸவம் மிக சிறப்பாக வருடா வருடம் நடைபெற்று வருகிறது. திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களும் ருத்திரன் பூஜிப்பதற்காக ஏற்பட்டவை. காஞ்சிபுரத்தில் காச்யபன் என்ற அந்தணனின் மூத்த மகன் முகுந்தன், தன் தகப்பனார் வறுமையைப் போக்க இந்த ஸ்தலத்திற்கு வந்து பெருமாள் உபதேசித்த அஷ்டாக்ஷரத்தை மூன்று நாளில் முப்பத்தி இரண்டாயிரம் தடவை ஜபம் செய்து பெருமாளின் திருவருளால் செல்வம் பெற்றான்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1268-1277 -10 பாசுரங்கள்.