ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருவல்லிக்கேணி (ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம்)
சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைல் தூரத்திலும், சென்னை கடற்கரையிலிருந்து 2 பர்லாங் தூரத்திலும் உள்ளது. எல்லா வசதிகளும் உண்டு. இந்த ஆலயத்தில் 5 ஸந்நிதிகள் உள்ளன.
1) மூலவர் - வேங்கடகிருஷ்ணன், ருக்மிணி பிராட்டியுடன், (பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், ப்ரத்யும்னன் இவர்களோடு) நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர் - பார்த்தஸாரதி.
2) மூலவர் - ரங்கநாதன், மன்னாதன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - வேதவல்லி. (தனிக்கோயில் நாச்சியார்) .
3) மூலவர் - ஸீதா, லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, ஹனுமாருடன் ஸ்ரீராமர், நின்ற திருக்கோலம், தெற்கே திருமுகமண்டலம்.
4) மூலவர் - வரதராஜன், தேவப்பெருமாள், கருடன் மீதமர்ந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
5) மூலவர் - தெள்ளிய சிங்கர் (நரஸிம்ஹன்) , வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
வடமேற்கு பக்கம் தனி ஆண்டாள் ஸந்நிதியும் உண்டு.
தீர்த்தம் - கைரவினி ஸரஸ் (அல்லிக்கேணி) - இந்தப் புஷ்கரிணியில் இந்த்ர, ஸோம, மீன, அக்னி, விஷ்ணு என்ற ஐந்து தீர்த்தங்கள் சூழப்பட்டதாக ஐதீஹம்.
விமானம் - ஆநந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம்.
ப்ரத்யக்ஷம் - ருக்மணிபிராட்டி, தொண்டைமான், ஸுமதி ராஜன், அர்ஜூனன், ப்ருஹ§மஹரிஷி, மார்க்கண்டேயர், மதுமான் மஹரிஷி, ஸப்தரோமா, அத்ரிமஹரிஷி, ஜாஜலிமஹரிஷி, அநிருத்தன், ப்ரத்யும்னன், பலராமன்.
விசேஷங்கள் - திருவேங்கடமுடையான், ஸுமதி என்னும் துண்டீர மண்டலாதிபதிக்கு, பாரதயுத்தத்தில் அர்ஜுனனுக்கு ஸாரத்யம் செய்த திருக்கோலத்துடன் ஸேவை ஸாதிக்கிறேன் என்று வாக்களித்தபடி, ஆத்ரேயமஹரிஷியை கொண்டு பார்த்தஸாரதியை சங்கம் வலக்கையிலும் தான முத்திரை இடக்கையிலுமாக ப்ரமாணப்படி அர்ச்சா விக்ரஹத்தை அமைத்து ருக்மணி, பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், ப்ரத்யும்னனன், இவர்களோடு வைகாநஸ விதியாலே ப்ரதிஷ்டை செய்ததாக ஐதீஹம்.
மூலவருக்கு இரண்டே திருக்கரங்கள். வலது கையில் சங்கம், இடது கையில் கோல் (திருப்பதியில்போல்) . தான் வளர்ந்த குல வழக்கத்திற்கேற்ப பெரிய மீசை உண்டு. திருவேங்கடநாதனே கண்ணனாக (பார்த்தஸாரதியாக) ஸேவை ஸாதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வலது புறம் ருக்மணி பிராட்டியும், இடதுபுறம் தம்பிசாத்யகியும், தெற்கே அண்ணா பலராமனும் வடக்கே பிள்ளை பிரத்யும்னனும் பேரன் அநிருத்தனும் எழுந்தருளியிருக்கின்றனர்.
ஸ்ரீ க்ருஷ்ணன் குடும்பஸமேதனாய் எழுந்தருளி இருப்பது இத்தலத்தில் மட்டுமே. அழகிய அல்லிமலர்கள் நிறம்பிய குளத்தை உடைய ஊர் என்ற காரணத்தினால் திருவல்லிக்கேணி என்று வழங்கி வருகிறது. திருப்பதி பெருமாள் ஸுமதி என்ற அரசனுக்கு இத்தலத்தில் வேங்கடக்ருஷ்ணனாக ஸேவை ஸாதித்தருளியபடியால் இரண்டாவது திருப்பதி என்று அழைக்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள் திருப்பதியைப்போல் விசேஷம் வாய்ந்தது. கண்ணன் அர்ஜுனனுக்காக ஏற்றதைக் காண்பிக்க, இன்றைக்கும் ஸ்ரீ பார்த்தஸாரதி (உத்ஸவர்) திருமுக மண்டலத்தில் வடுக்களைக் காணலாம்.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் திருமலையைப் போலவே ஸ்ரீ வேங்கடக்ருஷ்ணனுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இக்கோயிலில் ஐப்பசித் திருமூலநன்னாளில் நடைபெறும் கைத்தலஸேவை சிறப்பு வாய்ந்தது. திருமழிசையாழ்வார், ராமாநுஜர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் இங்கேயே எழுந்தருளி இருந்து மங்களாசாஸனம் செய்துள்ளனர்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1068-1077
பேயாழ்வார் - 2297
திருமழிசையாழ்வார் - 2416
மொத்தம் 12 பாசுரங்கள்.