ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருநீர்மலை (தோயாத்ரி க்ஷேத்ரம்)
சென்னை - தாம்பரம் ரயில் பாதையில் பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து சுமார் 3 1/2 மைல் தூரத்தில் உள்ளது. டவுன் பஸ், வசதியும், மற்ற வசதிகளும் உள்ளன. இங்கு ஒரு சிறிய மலை இருக்கிறது. மலைக்கு செல்லும் படிக்கட்டுகள் முதலியன புதுப்பிக்கப்பட்டுள்ளன. பெருமாள் கீழே ஒருவராகவும், மலை மேலே மூவராகவும் (நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்ற திருப்பெயர்களில்) நான்கு திருக்கோலங்களில் எழுந்தருளியிருக்கிறார்.
மலை அடிவாரக் கோவில்
1) மூலவர் - நீர்வண்ணன், நீலமுகில்வண்ணன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - அணிமாமலர் மங்கை. (தனிக் கோவில் நாச்சியார்.) மலைமேல் கோவில்
2) மூலவர் - (இருந்தான்) சாந்த நரஸிம்மன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
3) மூலவர் - (கிடந்தான்) ரங்கநாதன், மாணிக்கசயனம், தெற்கே திருமுக மண்டலம்.
தாயார் - ரங்கநாயகி. (தனிக் கோவில் நாச்சியார்) . கிழக்கே திருமுக மண்டலம்.
4) மூலவர் - த்ரிவிக்ரமன் (நடந்தான்) , நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
மலை அடிவாரத்தில் சக்ரவர்த்தி திருமகனுக்குத் தனி ஸந்நிதி உண்டு. கிழக்கே மண்டலம்.
தீர்த்தம் - மணிகர்ணிகா தடாகம் - க்ஷீர புஷ்கரிணி, காருண்ய புஷ்கரிணி, ஸித்த புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி என்று நான்கு தீர்த்தங்கள் அடங்கியது.
விமானம் - தோயகிரி விமானம்.
ப்ரத்யக்ஷம் - தொண்டைமான், ப்ருகு, மார்க்கண்டேயர்.
விசேஷங்கள் - வால்மீகி மஹரிஷி இந்த தலத்திற்கு வந்து மலைமீது ஏறி ரெங்கநாதன், நரஸிம்மன், த்ரிவிக்ரகமன் என்ற மூன்று மூர்த்திகளையும் வணங்கி வழிபட்டு, கீழே இறங்கி மலை அடிவாரத்தில் உள்ள ஸரஸ்ஸில் கிழக்கு முகமாக நின்று கொண்டு ஸ்ரீ ராமனை த்யானம் செய்ய, ரெங்கநாதன் ராமனாகவும், லக்ஷ்மீ ஜானகியாகவும், ஆதிசேஷன் லக்ஷ்மணனாகவும் சங்கு சக்கரங்கள் சத்ருக்ன, பரதர்களாகவும், விஷ்வக்ஸேனர் ஸுக்ரீவனாகவும், கருடன் ஹநுமானாகவும் காக்ஷி தந்து மறைந்த பொழுது, KS பிரார்த்தனைபடி அற்புதமான ரூபமான நீர்வண்ணனாக ஸேவை ஸாதித்ததாகவும் ஐதீஹம்.
மங்களாசாஸனம் செய்யத் திருமங்கையாழ்வார் எழுந்தருளியபோது இந்த மலையைச்சுற்றி நீர் அரண்போல் சூழ்ந்திருந்ததால், ஆறு மாதகாலம் ஊருக்கு வெளியே காத்திருந்ததாகவும், அதனால் இம்மலைக்கு 'நீர்மலை' என்று பெயர் உண்டானதாக புராண வரலாறு. ஆழ்வார் தங்கி இருந்த இடம் இன்றும் திருமங்கை ஆழ்வார்புரம் என்று அழைக்கப்படுகிறது.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1078-87, 1115, 1521, 1554, 1660, 1765, 1848, 2069, 2673 (73) , 2674 (130) .
பூதத்தாழ்வார் 2227
மொத்தம் 20 பாசுரங்கள்