ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
வடநாட்டுத் திருப்பதிகள்
திருவதரியாச்ரமம் (பத்ரிநாத்)
டெல்லியிலிருந்து ஸஹரன்பூர், லக்ஸார் வழியாக அல்லது கல்கத்தா டேராடூன் எக்ஸ்பிரஸில் ஹரித்வார் ஸ்டேஷனுக்கு வந்து, அங்கிருந்து ரிஷிகேசில் தங்கி, அங்கிரந்து 187 மைல் பஸ்ஸில் ஹிமாலய மலையில் பிராயாணம் செய்து, பத்ரிநாத்தை அடைய வேண்டும். இங்கு ஏராளமான சத்திரங்களும் பல வசதிகளும் உண்டு.
மூலவர் - பத்ரி நாராயணன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - அரவிந்தவல்லி.
தீர்த்தம் - தப்தகுண்டம்,
ஸ்தல விருக்ஷம் - பதரீ (இலந்தை) வ்ருக்ஷம்.
விமானம் - தப்தகாஞ்சந விமானம்.
ப்ரத்யக்ஷம் - நரன்.
மார்க்கம் - முதலில் ஹரித்வார் வந்து, அங்கு வசதியான தர்மசாலையில் தங்கி, ப்ரஹ்ம குண்டம் என்ற ஸ்நாந கட்டத்தில் நீராடி, யாத்திரையை துவக்குவது நலம். ஹரித்வாரத்திலிருந்து 15 மைல் தூரமுள்ள ஹ்ருஷீகேசத்தை அடையவேண்டும். ஹ்ருஷீகேசத்திலிருந்து பத்ரிநாத் போகும் பஸ் மூலம் தேவப்ரயாகையை அடையவேண்டும். இதுதான் "கண்டமென்னும் கடிநகர்" என்ற திவ்யதேசம். இங்கிருந்து புறப்பட்டு 1706 அடி உயரத்திலுள்ள ஸ்ரீ நகர் என்ற ஊரை ராணுவ தளத்தின் வழியாக அடையவேண்டும். இங்கிருந்து ருத்ர ப்ரயாகை எனும் இடத்தை அடைய வேண்டும். பிறகு, கெனஸார் என்ற விமான தளத்தை அடைந்து, கர்ண பிரயாகையை அடையவேண்டும். இங்கிருந்து 6 மைல் தூரத்தில் ராவணன் சிவ பெருமானைக்குறித்து தவம் செய்து கைலாஸ பர்வதத்தை தூக்கியதாக ஐதீஹம். திருப்பரிதி என்ற திவ்ய தேசம் இதுதான் என்றும், ஜோஷிமட் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். பிறகு, சமோலி என்ற இடத்தை அடைய வேண்டும். இங்கிருந்து பீபல்கோடி அடைந்து, பிறகு ஜோஷி மடம் அடையவேண்டும். ஜோழி மட்டிலிருந்து பத்ரிநாத் வரை ஒரு வழிப்போக்கு ஏற்பாடு உள்ளது. பிறகு, விஷ்ணுப்ரயாகை எனும் இடம் அடையவேண்டும். கடும் குளிர், கம்பளிப்போர்வகைள் தேவை. அளகாநந்தாவும் தோலிகங்காவும் சங்கமம் ஆகும் இடம். மஹாவிஷ்ணு கோயில் கொண்டுள்ளார். நாரதமஹரிஷி அஷ்டாக்ஷர மந்த்ரத்தினால் விஷ்ணுவை பூஜை செய்த புண்ய ஸ்தலம். பிறகு, பாண்டுகேச்வர் என்ற ஊர் வரவேண்டும். பத்ரிநாத் கோவிலுள்ள உத்ஸவ மூர்த்திகள், பனிமூடிய ஆறு மாதகாலம், இங்குள்ள வாஸுதேவர் கோவிலில் வைத்துப் பூஜிக்கப்படுகின்றன, இது பாண்டவர்களின் ஜன்மஸ்தானமாகவும், பாண்டுமஹா ராஜா தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது. இங்கிருந்து ஹனுமான்சட்டி (பீமசேனனும் ஹனுமாரும் சண்டையிட்ட கந்தமாதனபர்வதம்) சென்று அங்கிருந்து 15 மைல் வளைவுப் பாதைகளில் சென்று பத்ரிநாத்தை அடையவேண்டும். ஹனுமான்சட்டியைத் தாண்டிய சுமார் இரண்டு மைல் தூரத்திலேயே பத்ரிகாச்ரமத்தின் காட்சி எதிரே தென்படுகிறது. பஸ் நிலையத்திலிருந்து 2 பர்லாங் தூரத்தில் அலகாநாந்தாவின் கரையில் ஸ்ரீ பத்ரீநாராயணன் கோயில் உள்ளது.
விசேஷங்கள் - இது கடல்மட்டத்திலிருந்து 10,404 அடி உயரத்திலும் ஹரித்வாரத்திலிருந்து 202 மைல் தூரத்திலும் உள்ளது. இங்கு பல தர்மசாலைகளும் திருப்பதி தேவஸ்தானத்தின் விடுதிகளும் உள்ளன. கங்கைக்கரையிலேயே உள்ள கீதாமந்திர் வசதியான இடம்.
கங்கையின் எதிர்க்கரையில் தப்தகுண்டம் என்ற வெண்ணீர் ஊற்றும், எதிரே பத்ரிநாராயணன் ஆலயமும் உள்ளன. ஆலயத்துக்கு எதிர்புறம் நரநாராயண பர்வதங்களும், வலப்புறம் நீலகண்ட பர்வதமும் உள்ளன. தப்தகுண்டத்திலிருந்து
சில படிகள் மேலேறி ஸிம்ஹதவாரத்தில் இருக்கும் கருடாழ்வானுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கோவிலின் பிராகாரத்தை அடைய வேண்டும். கோவிலில் ஸ்ரீ பத்ரிநாராயணன் அரவிந்தவல்லித்தாயார், கருடன், நாரதன், நாரநாராயணர்கள் முதலியவர்களுடன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுக் காட்சி தருகிறார். பெருமாள் மட்டும் ஸாளக்கிராமச் சிலையாலான மூலமூர்த்தி, மற்றவையெல்லாம் உத்ஸவ மூர்த்திகளே. உரிய கட்டணத்தை முன்னாடியே செலுத்தி விசேஷ அபிஷேகங்களும் திருமஞ்சனமும் அர்ச்சனையும் கர்ப்பூர ஆரத்தியும் செய்யலாம். "க்யூ" வரிசையில் எத்தனை தரம் வேண்டுமானாலும் சென்று ஸேவிக்காம். கர்ப்பக்ருஹத்திற்கு வெகு அருகாமையில் அமர்ந்து அபிஷேகங்களையும் அர்ச்சனைகளையும் முடியும்வரை அமர்ந்திருந்து பகவானை மனத்திருப்தியுடன் ஸேவிக்கலாம். இப்பெருமானுக்கு எதிரில் திரை போடுவதே இல்லை. திருமஞ்சனம், சாத்துப்படி, நைவேத்யம் எல்லாம் மக்கள் எதிரிலேயே நடக்கின்றன. இரவில் வடநாட்டுப் பிராம்மணர்கள் சாந்திபஞ்சகம் போன்ற மந்திரங்களை ஸேவிக்க ஆடைகளையும் மாலைகளையும் "ராவால்" (இவர் கேரள தேசத்து நம்பூதிரிப் பிராம்மணர். பிரதம அர்ச்சகர்.) களைந்து சிறிய துண்டு சார்த்தும் காட்சிக்கு கீத கோவிந்தம் என்று பெயர். கோயில் பூஜை விதிமுறைகளை நன்றாகக் கற்றறிந்தவர்களாகவும் நல்லொழுக்கம் பூண்டவர்களாகவும் உள்ளவர்களையே இந்தஸ்தானத்துக்கு நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு ஸ்வாமியின் அருகில் அமர்ந்து பார்க்க கட்டணம் உண்டு. மற்றவர்கள் தூர இருந்து பார்க்கலாம். மஹாலக்ஷ்மிக்கு ப்ரியமான இருப்பிடமான பத்ரீ (இலந்தை) விருக்ஷத்தின் கீழேதான் ஸ்ரீ பத்ரீநாராயணன் வீற்றிருப்பதாக ஐதீஹம். தென்புறம் ப்ராகாரத்தில் அரவிந்தவல்லித் தாயார் தனி ஸந்நிதி உள்ளது.வட இந்தியர் மஹால்க்ஷமி என்றே அழைப்பர். சற்று மேற்கே ஆதிசங்கரரின் ஸந்நிதி. ஸ்ரீ பதரீநாராயணர் வலக் கையில் சக்கரமும் மேல் இடக்கையில் சங்கமமும் தரித்து கீழ் வலது, இடது கைகளை யோக முத்திரையாகக் கொண்டு பத்மாஸனத்தில் வீற்றிருந்து தபஸ்வி வேஷத்தில் ஸேவை ஸாதிக்கிறார். பகவானின் வலப்புறம் தனபதி குபேரனும், கருடனும் அமர்ந்திருக்கிறார்கள். இடப்புறத்தில் தேவரிஷி, நாரதர், உத்தவர், நாராயணர், நரர், முதலியோர் உள்ளனர்.
கோவிலுக்கு சிறிது வடக்கே கங்கையின் கரையில் ப்ரஹ்மபகபாலம் என்ற பெரிய பாறையன்று இருக்கின்றது. இங்கு, பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் ஈரேழு தலைமுறைகளும் மோக்ஷமடைவதாகவும் பிறகு சிராத்தங்கள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்றும் நம்பப்படுகிறது. கோயில் ப்ராகாரத்திற்குள் லக்ஷ்மீ தேவிக்கும் ஆதி சங்கரருக்கும் தனிக் கோயில்கள் உள்ளன. கோயில்கள் உள்ளன. கோயிலின் பின்புறம் லஷ்மீந்ருஸிமர்மந்திர் என்கிற தனிக்கோயிலில் ஸ்ரீ ஸ்வாமிதேசிகன், ஸ்ரீமத்ராமானுஜர் முதலியோருக்கு ஸந்நிதிகள் உள்ளன. கோயிலுக்கு நாற்புறமும் பனிமலைகளும் எதிரே நரநாராயண பர்வதங்களும் வலப்புறத்தில் நீலகண்ட பர்வதமும் உள்ளன. இது தவிர, இவ்வூரில் வஸுதாரா என்ற பனிமலை நீர்வீழ்ச்சியின் திவலைகள் தன்மேல் பட்டுப் புனிதமாதவற்குப் பல யாத்ரிகர்கள் அங்கே செல்வதுண்டு.
குறிப்புகள் - திருவஷ்டாக்ஷரமந்திரத்தின் அவதாரஸ்தலமான இவ்வூரின் பெருமை எல்லையற்றது. விசாலபுரி என்று பெயர் பெற்றது. பனிபெய்யும் பிரதேசமாகையால் இக்கோவில் தீபாவளியன்று மூடப்பட்டுவிடும். தொடர்ந்து, 6 மாதகாலம் மூடியிருந்து சித்திரை மாதம் சித்ரா பெனர்ணமியன்றே திறக்கப்படும். யாத்திரைக்கு மழையில்லாத காலமாகிய மே மாதமும் ஸெப்டெம்பர் பிற்பகுதியும் தான் ஏற்றவை. எப்பொழுதும் கடுங்குளிர் நிறைந்த பிரதேசமாகையால் கம்பளி உடைகள் எடுத்துச் செல்வது அவசியம்.
"பத்ரீவிசால்கிஜே"
மங்களாசாஸனம் -
பெரியாழ்வார் - 399.
திருமங்கையாழ்வார் - 968-87, 2673 (74)
மொத்தம் - 22 பாசுரங்கள்.