ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
திருத்தொலைவில்லிமங்கலம்
(ஆழ்வார் நவதிருப்பதிகளில் இரண்டு இரட்டைத் திருப்பதி)
திருக்குளந்தையிலிருந்து 1 மைல் மங்கலக்குறிச்சி என்ற ஊர் வந்து அங்கிருந்து வாய்க்கால் கரை மேலே உள்ள கப்பிப் பாதையில் 2 மைல் வந்து வாய்க்காலைக் கடந்து இவ்வூருக்கு வரலாம். ஆழ்வார் திருநகரியிலிருந்து 2மைல் கிழக்கே வந்து தாம்பரபரணி ஆற்றைக் கடந்தும் இங்கு வரலாம். இங்குள்ள இரண்டு கோவில்களும் சேர்ந்தே ஒரு திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது.
முதல்கோவில் - தாம்பரபரணி நதிக்கரையில் உள்ளது.
மூலவர் - ஸ்ரீநிவாஸன் (தேவப்பிரான்) , நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - உபயநாச்சியார்கள் (தனிக்கோவில் இல்லை) .
இரண்டாவது கோவில் - முன்சொன்ன வாய்க்கால் கரையிலேயே உள்ளது.
மூலவர் - அரவிந்தலோசனன், செந்தாமரைக்கண்ணன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - கருந்தடங்கண்ணி நாச்சியார்.
தீர்த்தம் - வருண தீர்த்தம், தாம்பரபரணி ஆறு.
விமானம் - குமுத விமானம்.
ப்ரத்யக்ஷம் - இந்த்ரன், வாயு, வருணன்.
விசேஷங்கள் - இக்கோவில்கள் காட்டில் உள்ளன. அருகில் வெகு தூரத்துக்கு வீடுகளோ மனித நடமாட்டமோ இராது. அர்ச்சகர் இருக்கும் நேரம் தெரிந்து கொண்டோ அல்லது அவருடனோ போகவேண்டும். அத்திரேய ஸுப்ரபர் என்கிற முனி இத்தலத்தில் யாகசாலை ஏற்படுத்தி ரித்விக்குகளுடன் யாகசாலையை சோதித்தபொதுழுது அவ்விடத்தில் மிகவும் பிரகாசித்த தராசையும் வில்லையும் கண்டு ஆச்சரியப்பட்டு எடுத்தபொழுது தராசு ஒரு பெண்ணாகவும் வில் ஒரு புருஷனாகவும் குபேர சாபத்திலிருந்து விடுபட்டதாகவும், இங்கே துலையும் வில்லும் முக்தி அடைந்தபடியால் "துலைவில்லி மங்கலம்" என்று இந்த ஸ்தலத்திற்குப் பெயர் உண்டானதாக புராண வரலாறு.
இரண்டு திருப்பதிகள் இருப்பதால், இரட்டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. அச்வினி தேவர்களுக்கு பகவான் அருளால் யாகத்தில் பாகம் கொடுத்த ஸ்தலம்.
மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் செய்த பெருமாள் இவர்.
மங்களாசாஸனம் -
நம்மாழ்வார் - 3271-81 - 11 பாசுரங்கள்.