ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி - ஆழ்வார் நவதிருப்பதி)
திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்பாதையில் ஆழ்வார் திருநகரி ஸ்டேஷனிலிருந்து 1 மைல் தூரம் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்தில் தங்கினால், அங்கிருந்து 3 மைல் பஸ்ஸில் வந்து ஸேவிக்கலாம். இங்கு சத்திரங்கள் அஹோபில மடம் மற்றும் ஸாதாரண ஹோட்டல்களும் உண்டு.
மூலவர் - ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்து நின்றபிரான், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்று 2 தனிக்கோவில் நாச்சியார்கள்.
தீர்த்தம் - ப்ரஹ்ம தீர்த்தம், தாம்பரபரணி நதி.
ஸ்தல வ்ருக்ஷம் - புளியமரம்.
விமானம் - கோவிந்த விமானம்.
ப்ரத்யக்ஷம் - ப்ரஹ்மா, மதுரகவி, நம்மாழ்வார்.
விசேஷங்கள் - தாமாகத் தோன்றிய பெரிய திருமேனியுடைய மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீஹம். நம்மாழ்வார் அவதார வரலாற்றை திருப்பதிசாரம் என்ற ஸ்தலத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய ஸந்நிதி மிகுந்த முக்யத்வம் வாய்ந்தது. இங்கும் ஸ்ரீ ரங்கத்தில்போல் அரையர்ஸேவை நடக்கிறது. திருமஞ்சனத்தின்போது ப்ரபந்தங்களையும், புருஷஸ¨க்தத்தையும் தாளம் போட்டுக்கொண்டே சொல்கின்றனர்.
இங்கு ஆழ்வார் பொந்தில் வீற்றிருந்த புளியமரம் (திருப்புளி ஆழ்வார்) , காட்சியளிக்கிறது. இது தவிர, ஞானப்பிரான் என்ற திருநாமத்துடன், வராஹப்பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். மணவாள மாமுனிகளால் நிர்வஹிக்கப்பட்ட இக்கோவிலில், ஸ்ரீ ரங்கம் போல், மாதந்தோறும் ஒவ்வொரு ஆழ்வாரின் திருநக்ஷத்திரமும் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் தங்கி எல்லா எம்பெருமான்களையும் (நவதிருப்பதி பெருமாள்) ஸ¨லபமாக ஸேவிக்கலாம். வைகாசி மாத கருட ஸேவையில் (விசாகத்தன்று) நவதிருப்பதி பெருமாள், மதுரகவி ஆழ்வார், நம்மாழ்வார் இவர்கள் மங்களாசாஸனம் மிகவும் விசஷேமாக இருக்கும். நம்மாழ்வார் ஹம்ஸவானத்தில் எழுந்தருளுவது விசேஷம். இந்திரன் தன் மாதா பிதாக்களை உபசரிக்காமல் சபிக்கப்பட்டு இத்தலத்திற்கு வந்து ஆதிநாதனை வழிபட்டு சாபவிமோசனம் அடைந்ததாக புராண வரலாறு. இவ்விடத்தில் லக்ஷ்மணன் புளியமரமாக ஆவிர்பவித்ததாகவும், பகவான் அவ்விடம் ப்ரஹ்மசர்ய யோகத்தில் இருப்பதாகவும் வரலாறு. லக்ஷ்மி பெருமாளை அடைய பிரார்த்திக்க, பகவான் ப்ருஹ்மசர்ய யோகத்தில் இருந்த படியால் லக்ஷ்மியை மகிழமாலையாக மார்பில் தரித்து கொண்டதாகவும் ஐதீஹம்.
மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் செய்த ஸ்தலம்.
மங்களாசாஸனம் -
நம்மாழ்வார் - 3106-3116 - 11 பாசுரங்கள்.