ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
மூன்றாம் பத்து
பயிலும் சுடரொளி
பகவானக்கு அடிமை செய்துகொண்டு அடியவராக இருப்பது மிகவும் ஏற்றம். அவனடியார்களுக்கு அடிமை செய்துகொண்டு அடியவராக இருப்பது அதைவிட ஏற்றம். பாகவத சேஷத்வம் என்கிற பரமபுருஷார்த்தத்தை ஆழ்வார் இப்பகுதியில் அருளிச்செய்கிறார்.
பகவானிடம் அடியார்க்கு அடியாரை வணங்குவதில் விசேஷம் எனல்
கலி நிலைத்துறை
கண்ணனின் அடியார்களே எம்மையாள்பவர்
2963. பயிலும் சுடரொளி மூர்த்தியைப்
பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல்
சேர்ந்த பரமனை,
பயிலும் திருவுடை யார்யவ
ரேலும் அவர்கண்டீர்,
பயிலும் பிறப்பிடை தோறெம்மை
யாளும் பரமரே.
கண்ணனைப் பணிவோர் எம்மையாளுடை நாதர்
2964. ஆளும் பரமனைக் கண்ணனை
ஆழிப் பிரான்றன்னை,
தோறுமோர் நான்குடைத் தூமணி
வண்ணனெம் மான்றன்னை
தாளும் தடக்கையும் கூப்பிப்
பணியும் அவர்கண்டீர்,
நாளும் பிறப்பிடை தோறெம்மை
யாளுடை நாதரே.
கண்ணனின் அடியார்க்கடியார் எம்மையாள்பவர்
2965. நாதனை ஞாலமும் வானமும்
ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனை, பொன்னெடுஞ் சக்கரத்
தெந்தை பிரான்றன்னை
பாதம் பணியவல் லாரைப்
பணியும் அவர்கண்டீர்,
ஓதும் பிறப்பிடை தோறெம்மை
யாளுடை யார்களே.
நாரணன் தொண்டர் தொண்டர்களே பெருமக்கள்
2966. உடையார்ந்த வாடையன் கண்டிகை
யன்உடை நாணினன்
புடையார்பொன் னூலினன் பொன்முடி
யன்மற்றும் பல்கலன்,
நடையா வுடைத்திரு நாரணன்
தொண்டர்தொண் டர்கண்டீர்,
இடையார் பிறப்பிடை தோறெமக்
கெம்பெரு மக்களே.
திருமாலைப் புகழ்வோரின் அடியார்கள் நம் ஸ்வாமிகள்
2967. பெருமக்க ளுள்ளவர் தம்பெரு
மானை, அமரர்கட்
கருமை யழியஅன் றாரமு
தாட்டிய அப்பனை,
பெருமை பிதற்றவல் லாரைப்
பிதற்றும் அவர்கண்டீர்,
வருமையு மிம்மையும் நம்மை
யளிக்கும் பிராக்களே.
கண்ணனை நினைப்பவறே நம்மைக் காப்பர்
2968. அளிக்கும் பரமனைக் கண்ணனை
ஆழிப் பிரான்றன்னை,
துளிக்கும் நறங்கண்ணித் தூமணி
வண்ணனெம் மான்றன்னை,
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக்
கொள்ளும் அவர்கண்டீர்,
சலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன்
மாந்தரங் காப்பரே.
கண்ணனின் அடியார்க்கடியார் நம்மை உய்விப்பர்
2969. சன்மசன் மாந்தரங் காத்தடி
யார்களைக் கொண்டுபோய்,
தன்மை பெறுத்தித்தன் தாளிணைக்
கீழ்க்கொள்ளும் அப்பனை,
தொன்மை பிதற்றவல் லாறைப்
பிதற்றும் அவர்கண்டீர்,
நம்மை பெறுத்தெம்மை நாளுய்யக்
கொள்கின்ற நம்பரே,
மாலின் அடியார் நரகராயினும் தொழுகுலமே
2970. நம்பனை ஞாலம் படைத்தவ
னைத்திரு மார்பனை,
உம்பர் உலகினில் யார்க்கும்
உணர்வரி யான்றன்னைக்,
கும்பி நரகர்கள் ஏத்துவ
ரேலும் அவர்கண்டீர்,
எம்பல் பிறப்பிடை தோறெம்
தொழுகுலம் தாங்களே.
கண்ணனின் அடியார் சண்டாளராயினும் அவரது
அடியார்க்கு அடியார் எம் தலைவர்
2971. குலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண்
டாளர்க ளாகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல்
மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி
யாரெம் மடிகளே.
ஏழு தலைமுறைகள் அடியார்களாக இருப்பவர்களுக்கே நாங்கள் அடிமைகள்.
2972. அடியார்ந்த வையமுண் டாலிலை
யன்னவ சஞ்செய்யும்,
படியாது மில்குழ விப்படி
யெந்தைபி ரான்றனக்கு,
அடியார் அடியார் தம்அடி
யார்அடி யார்தமக்
கடியார் அடியார் தம்,அடி
யாரடி யோங்களே.
இவற்றைப் படியுங்கள் ஜன்மமே இராது
2973. அடியோங்கு நூற்றவர் வீயஅன்
றைவருக் கருள்செய்த
நெடியோனை, தென்குரு கூர்ச்சட
கோபன்குற் றேவல்கள்,
அடியார்ந்த ஆயிரத் துள்ளிவை
பத்தவன் தொண்டர்மேல்
முடிவு,ஆரக் கற்கில் சன்மம்செய்
யாமை முடியுமே.
நேரிசை வெண்பா
மாறனுக்கு அடிமையாகுக : பிறப்பே இராது
பயிலுந் திருமால் பதந்தன்னில், நெஞ்சம்
தயலுண்டு நிற்குந் ததியர்க்கு - இயல்வுடனே
ஆளானார்க் காளாகும் மாறன் அடியதனில்,
ஆளாகார் சன்மமுடி யா.