முடியானே

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

முடியானே

பகவானை அடைந்து அநுபவிக்கவேண்டும் என்று ஆழ்வாருக்கு ஆசை. அவருடைய ஐம்புலன்களும் பரமனை நினைத்துக்கண்டு பாடிப் பெருமைப்படவேண்டும் என்று ஆசைப்படுகின்றன. இவ்வாறு ஆற்றாமையால் நோவுபட்டுப் பகவானை ஆழ்வார் கூப்பிடும் முறையை இப்பகுதி கூறுகிறது.

ஐம்புலன்களும் தாமும் பெருவிடாய்ப் பட்டுப் பேசுதல்

கலி விருத்தம்

நெடியானே!என் மனம் நின்னையே நினைத்துருகும்.

2974. முடியானேஸ மூவுலகும் தொழுதேத் தும்சீர்

அடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய்ஸ புள்ளூர்

கொடியானே, கொண்டல்வண் ணா!அண்டத் தும்பரில்

நெடியானே, என்று கிடக்குமென் நெஞ்சமே.

வாமனா!என் வாசகம் உன்னைப் பற்றியதே

2975. நெஞ்சமே!நீள்நக ராக இருந்தவென்

தஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற

நஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய

வஞ்சனே, என்னுமெப் போதுமென் வாசகமே.

கண்ணா!என் கைகள் உன்னையே தேடுகின்றன

2976. வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்

நாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து,

வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்

தாயவனே, என்று தடவுமென் கைகளே.

பாம்பணையானே!என் கண்கள் உன்னையே காண விரும்பும்

2977. கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை,

வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி,

பைகொள் பாம்பேறி உறைபர னே,உன்னை

மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே.

நினது கருடனின் சிறகொலி கேட்கக் காதுகள் விரும்பும்

2978. கண்களால் காண வருங்கொலென்றாசையால்,

மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்,

பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து,

திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே.

சக்ரதாரீ!என் உயிர் உன்னையே விரும்புகிறது

2979. செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும்

கவிகளே காலப்பண் தேனறைப் பத்துற்று,

புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே,

அவிவின்றி யாதரிக் கும்என தாவியே.

கருடவாகனா! உன்னை அழைத்தேன் வரவில்லையே

2980. ஆவியே ஆரமு தே!என்னை ஆளுடை

தூவியும் புள்ளுடை யாய்!சுடர் நேமியாய்,

பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்,

கூவியும் காணப் பெறேனுன கோலமே.

கண்ணா! உன்னை என்றுதான் காண்பேனோ

2981. கோலமே!தாமரைக் கண்ணதோர் அஞ்சன

நீலமே, நின்றென தாவியை யீர்கின்ற

சீலமே, சென்றுசெல் லாதன முன்னிலாம்

காலமே, உன்னையெந் நாள்கண்டு கொள்வனே?

கண்ணா!உன்னை என்று அடைவேனோ!

2982. 'கொள்வன்நான் மாவலி மூவடி தா'என்ற

கள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை

உள்வன்மை தீர,ஓ ராயிரம் தோள்துணித்த

புள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே?

கண்ணா!எத்தனை காலம் கதறுவேன்!

2983. பொருந்திய மாமரு தின்னிடை போயவெம்

பெருந்தகாய், உன்கழல் காணிய பேதுற்று,

வருந்திநான் வாசக மாலைகொண்டு, உன்னையே

இருந்திருந் தத்தனை காலம் புலம்புவனே?

இவற்றைப் பாடினால் தேவருலகு கிடைக்கும்

2984. புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை,

நலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்,சொல்

வலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்பத்து,

இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே.

நேரிசை வெண்பா

தமது ஆசையைக் கூறிய மாறன்

முடியாத ஆசைமிக முற்றுகர ணங்கள்,

அடியார்தம் மைவிட் டவன்பால் - படியா,ஒன்

றொன்றின் செயல்விரும்ப உள்ளதெல்லாந் தாம்விரும்பத்,

துன்னியதே மாறன்றன் சொல்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is பயிலும் சுடரொளி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  சொன்னால்
Next