ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
மூன்றாம் பத்து
சொன்னால்
'பகவானையே புகழவேண்டும். இவனுடைய குணங்களையே கூறவேண்டும்.
இவற்றை விட்டு மனிதனைப் பாடுவார்களா? இவ்வாறு செய்வதால் என்ன பயன்? பகவான் கொடுத்த ஞானம், நாவன்மை ஆகியவற்றை அவனுக்கே பயன்படுத்த வேண்டாமா?' என்கிறார் ஆழ்வார்.
மனிதரைப் பாடாது மாதவனை ஏத்துக எனல்
கலி நிலைத்துறை
திருவேங்கடமுடையானையே பாடுவேன்
2985. சொன்னால் விரோதமிது ஆகிலும்
சொல்லுவன் கேண்மினோ,
என்னாவில் இன்கவி யானொரு
வர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனாவென்று வண்டு
முரல்திரு வேங்கடத்து,
என்னானை என்னப்பன் எம்பெரு
மானுள னாகவே.
திருக்குறுங்குடி எம்பெருமானையே பாடுவேன்
2986. உளனாக வேயெண்ணித் தன்னையன்
றாகத்தன் செல்வத்தை
வளனா மதிக்குமிம் மானிடத்
தைக்கவி பாடியென்,
குளனார் கழனிசூழ் கண்ணன்
குறுங்குடி மெய்ம்மையே,
உளனாய எந்தையை எந்தைபெம்
மானை ஒழியவே?
புலவர்களே!மானிடரைப் பாடாதீர்
2987. ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோ
றூழி நிலாவ,போம்
வழியைத் தரும்நங்கள் வானவர்
ஈசனை நிற்கப்போய்,
கழிய மிகநல்ல வான்கவி
கொண்டு புலவீர்காள்,
இழியக் கருதியோர் மானிடம்
பாடலென் னாவதே?
தேவதேவனைப் : பாடுக ஜன்மமே இராது
2988. என்னாவ தெத்தனை நாளைக்குப்
போதும் புலவீர்காள்,
மன்னா மனிசரைப் பாடிப்
படைக்கும் பெரும்பொருள்?
மின்னார் மணிமுடி விண்ணவர்
தாதையைப் பாடினால்,
தன்னாக வேகொண்டு சன்மம்செய்
யாமையும் கொள்ளுமே.
மணிவண்ணனைப் பாட வாருங்கள்
2989. கொள்ளும் பயனில்லைக் குப்பை
கிளர்த்தன்ன செல்வத்தை,
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை
இழக்கும் புலவீர்காள்,
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்
லாம்தரும் கோதில்,என்
வள்ளல் மணிவண்ணன் றன்னைக்
கவிசொல்ல வம்மினோ.
திருமாலைப் பற்றியே கவிதை இயற்றுங்கள்
2990. வம்மின் புலவீர்!நும் மெய்வருத்
திக்கைசெய் தய்ம்மினோ,
இம்மன் னுலகில் செல்வரிப்
போதில்லை நோக்கினோம்,
நும்மின் கவிகொண்டு நும்நுமிட்
டாதெய்வம் ஏத்தினால்,
செம்மின் சுடர்முடி என்திரு
மாலுக்குச் சேருமே.
மனிதரைப் புகழ்ந்து பொய்க் கவி பாடாதீர்
2991. சேரும் கொடைபுகழ் எல்லையி
லானை,ஓ ராயிரம்
பேரும் உடைய பிரானையல்
லால்மற்று யான்கிலேன்,
மாரி யனையகை மால்வரை
யக்கும்திண் டோளென்று,
பாரிலோர் பற்றையைப் பச்சைப்
பசும்பொய்கள் வேயவே.
நம்பின்னை மணாளனையே பாடுவேன்
2992. வேயின் மலிபுரை தோளிபின்
னைக்கு மணாளனை,
ஆய பெரும்புகழ் எல்லையி
லாதன பாடிப்போய்,
காயம் கழித்துஅவன் தாளிணைக்
கீழ்ப்புகுங் காதலன்,
மாய மனிசரை என்சொல்ல
வல்லேனென் வாய்கொண்டே?
கண்ணனைப் பாடினால் இருமையின்பமும் கிடைக்கும்
2993. வாய்கொண்டு மானிடம் பாடவந்
தகவி யேனல்லேன்,
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பி
ரானெனக் கேயுளன்,
'சாய்கொண்ட இம்மையும் சாதித்து
வானவர் நாட்டையும்,
நீகண்டு கொள்' என்று வீடும்
தரும்நின்று நின்றே!
கண்ணனையே பாடுவேன் : மனிதரைப் பாடேன்
2994. நின்றுநின் றுபல நாளுய்க்கும்
இவ்வுடல் நீங்கிப்போய்,
சென்றுசென் றாகிலும் கண்டுசன்
மங்கழிப் பானெண்ணி,
ஒன்றியன் றியுல கம்படைத்
தான்கவி யாயினேற்கு,
என்றுமென் றுமினி மற்றொரு
வர்கவி யேற்குமே?
இவற்றைப் பாடுக ஜன்மமே இராது
2995. ஏற்கும் பெரும்புகழ் வானவர்
ஈசன்கண் ணன்றனக்கு,
ஏற்கும் பெரும்புகழ் வண்குரு
கூர்ச்சட கோபன்சொல்,
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்
துள்ளிவையும் ஓர்பத்து,
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்
லார்க்கில்லை சன்மமே.
நேரிசை வெண்பா
மாறன் அருளால் பிறவித்துயர் நீங்கும்
'சொன்னாவில் வாழ்புலவீர்!சோறுகூ றைக்காக,
மன்னாத மானிடரை வாழ்த்துதலால், - என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும்' எனுங்குருகூர்,
மன்னருளான் மாறுஞ்சன் மம்.