சன்மம் பலபல

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

சன்மம் பலபல

பகவானைத் துதிப்பதை விட்டு மனிதர்களைத் துதித்துக் கவி பாடும் புலவர்களை அறிவுரைகளால் திருத்தப் பார்த்தார் ஆழ்வார். அவர்கள் திருந்தவில்லை. தாம் ஒருவராவது நரஸ்துதி செய்யாமல் மீண்டதை நினைத்துப் பெருமைப்படுகிறார். பகவானின் பண்புகளில் மூழ்கி அவனை அநுபவிக்கும் பேறு பெற்றோமே என்று நினைத்து ஆழ்வார் உள்குழைந்து பேசுகிறார்.

திருமாலைத் துதிக்கும் தமக்கு ஒரு குறையும் இல்லை எனல்

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

அடியேனுக்கு ஒரு குறையும் இல்லை

2996. சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்

சங்கொடு சக்கரம்வில்,

ஒண்மை யடைய வுலக்கையள் வாள்தண்டு

கொண்டுபுள் ளூர்ந்து,உலகில்

வன்மை யுடைய அரக்கர் அசுரரை

மாளப் படைபொருத,

நன்மை யுடையவன் சீர்புர வப்பெற்ற

நானோர் குறைவிலனே.

கண்ணனைப் பாடுக : தட்டுப்பாடு இராது

2997. குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்

கோலச்செந் தாமரைக்கண்,

உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த

ஒளிமணி வண்ணன்கண்ணன்,

கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி

அசுரரைக் காய்ந்தவம்மான்,

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்

யானொரு முட்டிலனே.

கண்ணனைப் பாடினால் துன்பமே வராது

2998. முட்டில்பல் போகத் தொருதனி நாயகன்

மூவுல குக்குரிய,

கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக்

கனியைக் கரும்புதன்னை,

மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை

வணங்கி அவன்திறத்துப்

பட்டபின் னை,இறை யாகிலும் யானென்

மனத்துப் பரிவிலேனே.

அச்சுதனை அடைந்தேன் : இடையூரே இல்லை

2999. 'பரிவின்றி வாணனைக் காத்தும்'என் றன்று

படையடும் வந்தெதிர்ந்த

திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும்

அங்கியும் போர்தொலைய,

பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை

ஆயனைப் பொற்சக்கரத்

தரியினை, அச்சுத னைப்பற்றி யானிறை

யேனும் இடரிலனே.

கண்ணனைப் பற்றினேன் துயரம் துடைத்தேன்

3000. இடரின்றி யேயரு நாளரு போழ்திலெல்

லாவுல கும்கழிய,

படர்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன்

ஏறத்திண் டேர்கடவி,

சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில்

வைதிகன் பிள்ளைகளை,

உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி

ஒன்றும் துயரிலனே.

கண்ணனைப் புகழ்கிறேன் : துன்பம் ஓடிவிட்டது

3001. துயரில் சுடரொளி தன்னுஐடச் சோதிநின்

றவண்ணம் நிற்கவே,

துயரில் மலியும் மனிசர் பிறவியில்

தோன்றிக்கண் காணவந்து,

துயரங்கள் செய்துநன் தெய்வ நிலையுல

கில்புக வுய்க்குமம்மான்,

துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற

யானோர்து ன்பமிலனே.

கண்ணனைச் சேர்ந்தேன் : அல்லல் அகன்றது

3002. துன்பமும் இன்பமு மாகிய செய்வினை

யாயுல கங்களுமாய்,

இன்பமில் வெந்நர காகி இனியநல்

வான்சுவர்க் கங்களுமாய்,

மன்பல் லுயிர்களு மாகிப் பலபல

மாய மயக்குகளால்,

இன்புறும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்

றேதமல் லலிலனே.

கண்ணன் தாள் பற்றியதால் துக்கம் இல்லை

3003. அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும்

அழகமர் சூழொளியன்,

அல்லி மலர்மகள் போக மயக்குகள்

ஆகியும் நிற்குமம்மான்,

எல்லையில் ஞானத்தன் ஞானமஃ தேகொண்டெல்

லாக்கரு மங்களும்செய்,

எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி

யானோர்துக் கமிலனே.

திருமாலைச் சேர்ந்தேன் : தளர்ச்சி நீங்கியது

3004. துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி

துழாயலங் கல்பெருமான்,

மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து

வேண்டும் உருவுகொண்டு,

நக்கபி ரானோ டயன்முத லாகஎல்

லாரும் எவையும்,தன்னுள்

ஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற்

றொன்றும் தளர்விலனே.

கண்ணனைப் பாடுவதால் கேடின்றி இருக்கிறேன்

3005. தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த

தனிமுதல் ஞானமொன்றாய்,

அளவுடை யைம்புலன் களறி யாவகை

யாலரு வாகிநிற்கும்,

வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள்

ஐந்தை யிருசுடரை,

கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி

யானென்றும் கேடிலனே.

இவற்றைப் பாடுக மூவுலகத் தலைமை கிடைக்கும்

3006. கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு

கூர்ச்சட கோபன்சொன்ன,

பாலோ ராயிரத் துளிவை பத்தும்

பயிற்றவல் லார்கட்கு,அவன்

நாடும் நகரமும் நன்குடன் காண

நலனிடை யூர்திபண்ணி,

வீடும்பெ றுத்தித்தன் மூவுல குக்கும்

தருமொரு நாயகமே.

நேரிசை வெண்பா

மாறனை நாத்தழும்பத் துதிமின்

'சன்மம் பலசெய்து தானிவ் வுலகளிக்கும்

நன்மையுடை மால்குணத்தை நாடோறும், - இம்மையிலே

ஏத்துமின்பம் பெற்றேன்' எனுமா றனையுலகீர்,

நாத்தழும்ப ஏத்துமொரு நாள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is சொன்னால்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  ஒரு நாயகம்
Next