கடல்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

கடல்

பராங்குச நாயகி, 'கடல் ஞாலம் செய்தேனும் யானே, கடல் ஞாலம் ஆவேனும் யானே'என்று பலவாறாகக் கூறி,தன்னை எம்பெருமானாகவே கருதிப் பேசித் தரித்திருக்கப் பார்க்கிறார். தாயோ தன் மகளின் நிலையைக் கண்டு 'இது என்ன?'என்று வியந்து கலங்குகிறாள். உறவினர் சிலர் வந்து இம்மகளின் நிலையைப் பற்றி கேட்கிறார்கள். 'எம்பெருமான் இவளிடம் ஆவேசித்து இருப்பதுபோல் தோன்றுகிறது'என்று (தாய்) விடை கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது.

தலைவியில் நிலைகண்ட தாய்,'ஆவேசம் வந்ததோ'என்று எண்ணி நொந்து கூறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என் மகளுக்கு ஆவேசம் வந்துவிட்டதோ?

3172. 'கடல்ஞாலம் செய்தேனும் யானே'என்னும்

'கடல்ஞாலம் ஆவேனும் யானே'என்னும்,

'கடல்ஞாலம் கொண்டேனும் யானே'என்னும்

'கடல்ஞாலம் கீண்டேனும் யானே'என்னும்,

'கடல்ஞால முண்டேனும் யானே'என்னும்

'கடல்ஞாலத் தீசன்வந் தேறக் கொல்லோ?,

கடல்ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்

கடல்ஞா லத்தென் மகள்தற் கின்றவே? 1

திருமாலின் செயல்களைத் தன் செயல்கள் என்கின்றாரோ!

3173. 'கற்கும்கல் விக்கெல்லை யிலனே'என்னும்

'கற்கும்கல்வி யாவேனும் யானே'என்னும்,

'கற்கும்கல்வி செய்வேனும் யானே'என்னும்

'கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே'என்னும்

'கற்கும்கல்விச் சாரமும் யானே'என்னும்

கற்கும்கல்வி நாதன்வந் தேறக் கொல்லோ?,

கற்கும் கல்வியீர்க் கிவையென் சொல்லுகேன்

கற்கும் கல்வியென் மகள்காண் கின்றவே? 2

கடல் வண்ணன் இவள்மீது ஆவேசித்துவிட்டானோ?

3174. 'காண்கின்ற நிலமெல்லாம் யானே'என்னும்

'காண்கின்ற விசும்பெல்லாம் யானே'என்னும்,

'காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே'என்னும்

'காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே'என்னும்,

'காண்கின்ற கடலெல்லாம் யானே'என்னும்

காண்கின்ற கடல்வண்ண னேறக் கொல்லோ?,

காண்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்

காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே? 3

கண்ணன் தன்மைகளைத் தன் தன்மைகளாகக் கூறுகின்றாளே!

3175. 'செய்கின்ற கிதியெல்லாம் யானே'என்னும்

'செய்வானின் றனகளும் யானே'என்னும்,

'செய்துமுன் னிறந்தவும் யானே'என்னும்

'செய்கைப்பய னுண்பேனும் யானே'என்னும்

'செய்வார்களைச் செய்வேனும் யானே'என்னும்

செய்யகம லக்கண்ண னேறக் கொல்லோ

செய்யவுல கத்தீர்க் கிவையென் சொல்லுகேன்

செய்ய கனிவா யிளமான் திறத்தே? 4

திருமாலின் செயல்களைத் தன் செயல் என்கிறாள்

3176. 'இனவேய்மலை யேந்தினேன் யானே'என்னும்

'இன வேறுகள் செற்றேனும் யானே'என்னும்,

'இனவான்கன்று மேய்த்தேனும் யானே'என்னும்

'இனவாநிரை காத்தேனும் யானே'என்னும்

'இனவாயர் தலைவனும் யானே'என்னும்

இனத்தேவர் தலைவன்வந் தேறக் கொல்லோ?,

இனவேற்கண் நல்லீர்க் கிவையென் சொல்லுகேன்

இனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே? 6

மாயன் இவள்மீது ஆவேசித்தானோ?

3178. 'உற்றார்க ளெனக்கில்லை யாரும்'என்னும்

'உற்றார்க ளெனக்கிங்கெல் லாரும்'என்னும்

'உற்றார்களைச் செய்வேனும் யானே'என்னும்

'உற்றார்களை அழிப்பேனும் யானே'என்னும்,

'உற்றார்களுக் குற்றேனும் யானே'என்னும்

உற்றாரிலி மாயன்வந் தேறக் கொல்லோ?,

உற்றீர்கட் கென்சொல்லிச் சொல்லு கேன் யான்

உற்றென் னுடைப்பே தையுரைக் கின்றவே? 7

எல்லாத் தெய்வங்களும் யானே என்கிறாள்

3179. 'உரைக்கின்ற முக்கட்பிரான் யானே'என்னும்

'உரைக்கின்ற திசைமுகன் யானே'என்னும்,

'உரைக்கின்ற அமரரும் யானே'என்னும்

'உரைக்கின்ற அமரர்கோன் யானே'என்னும்

'உரைக்கின்ற அமரர்கோன் யானே'என்னும்,

உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொல்லோ?,

உரைக்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்

உரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே? 8

வினை தீர்ப்பவன் யானே என்கிறாள்

3180. 'கொடிய வினையாது மிலனே'என்னும்

'கொடியவினை யாவேனும் யானே'என்னும்,

'கொடியவினை செய்வேனும் யானே'என்னும்

'கொடியவினை தீர்ப்பேனும் யானே'என்னும்

'கொடியா னிலங்கைசெற் றேனே'என்னும்

கொடியபுள் ளுடையவ னேறக் கொல்லோ?,

கொடிய வுலகத்தீர்க் கிவையென் சொல்லுகேன்

கொடியேன் கொடியென் மகள்கோ லங்களே? 9

சுவர்க்கமும் நரகமும் யானே என்கிறாள்

3181. 'கோலங்கொள் சுவர்க்கமும் யானே'என்னும்

'கோலமில் நரகமும் யானே'என்னும்,

'கோலம்திகழ் மோக்கமும் யானே'என்னும்

'கோலங்கொ ளுயிர்களும் யானே'என்னும்

'கோலங்கொள் தனிமுதல் யானே'என்னும்

கோலங்கொள் முகில்வண்ண னேறக் கொல்லோ?,

கோலங்கொ ளுலகத் தீர்க்கென் சொல்லுகேன்

கோலந் திகழ்கோ தையென்கூந் தலுக்கே! 10

இவற்றைப் படித்தோர் அடியார்க்கடியார் ஆவர்

3182. கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும்

குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் றன்னை,

வாய்ந்த வழுதிவள நாடன் மன்னு

குருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து,

ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்

இவையுமோர் பத்தும்வல் லார்,உலகில்

ஏந்து பெருஞ்செல்வந் தாராய்த் திருமால்

அடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே. 11

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களைப் படித்தோர் நவஞ்செய்தோர் ஆவர்

கடல்ஞாலத் தீசனைமுன் காணாமல் நொந்தே,

உடனா அனுசரிக்க லுற்றுத், - திடமாக

வாய்ந்தவனாய்த் தான்பேசும் மாறன் உரையதனை,

ஆய்ந்துரைப்பா ராட்செயநோற் றார். (46)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is எங்ஙனேயோ
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  நோற்ற நோன்பு
Next