பாமருமூவுலகம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஏழாம் பத்து

பாமருமூவுலகம்

தம்முடைய ஆற்றாமை எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டு, ஆழ்வார், பரமபதநாதனின் செவியில் படும்படி குரலை உயர்த்திக் கூவி அழைக்கிறார்.

பெருமானைக் காண உருக்கத்துடன் அழைத்தல்

கலி நிலைத்துறை

பற்பநாபா!உன்னை என்றைக்குச் சேர்வேன்?

3392. பாமரு மூவுலகும் படைத்த

பற்ப நாபாவோ

பாமரு மூவுலகும் அளந்த

பற்ப பாதாவோ,

தாமரைக் கண்ணாவோ!தனியேன்

தனியா ளாவோ,

தாமரைக் கையாவோ!உன்னை

யென்றுகொல் சார்வதுவே?

எந்தாய்!யான் நின் திருவடி சேர்வது என்று?

3393. என்றுகொல் சார்வதந் தோஅரன்

நான்முக னேத்தும்,செய்ய

நின்திருப் பாதத்தை யான்நிலம்

நீரெரி கால்,விண்ணுயிர்

என்றிவை தாம்முத லாமுற்று

மாய்நின்ற எந்தாயோ,

குன்றெடுத் தாநிரை மேய்த்தவை

காத்தவெங் கூத்தாவோ!

துழாய்முடியாய்!உன்னை எங்கே காண்பேன்?

3394. காத்தவெங் கூத்தாவோ!மலையேந்திக்

கன்மாரி தன்னை,

பூத்தண் டுழாய்முடி யாய்!புணை

கொன்றையஞ் செஞ்சடையாய்,

வாய்த்தவென் நான்முக னே!வந்தென்

னாருயிர் நீயானால்

ஏத்தருங் கீர்த்தியி னாய்!உன்னை

யெங்குத் தலைப்பெய்வனே?

கோவலனே!நான் எப்படி உன்னைக் காண்பேன்?

3395. எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில்

மூவுல கும்நீயே,

அங்குயர் முக்கட் பிரான்பிர

மன்பெரு மானவன்நீ,

வெங்கதிர் வச்சிரக் கையிந்

திரன்முத லாத்தெய்வம்நீ,

கொங்கலர் தண்ணந் துழாய்முடி

யென்னுடைக் கோவலனே

கருமாணிக்கமே!என் உயிர் நின்னை எப்படி எய்தும்?

3396. என்னுடைக் கோவல னே!என்பொல்

லாக்கரு மாணிக்கமே,

உன்னுடை யுந்தி மலர்உலக

மவைமூன் றும்பரந்து,

உன்னுடைச் சோதிவெள் ளத்தகம்

பாலுன்னைக் கண்டுகொண்டிட்டு,

என்னுடை யாருயிரார் எங்ங

னேகொல்வந் தெய்துவர்?

திருமார்பனே!நின்னை எய்தும் வகை தெரியவில்லையே!

3397. வந்தெய்து மாறறி யேன்மல்கு

நீலச் சுடர்தழைப்ப,

செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொரு

மாணிக்கம் சேர்வதுபோல்,

அந்தர மேல்செம்பட் டோடடி

யுந்திகை மார்வுகண்வாய்,

செஞ்சுடர்ச் சோதி விடவுறை

என்திரு மார்பனையே.

பகவானை நான் காணமாட்டேனா?

3398. என்திரு மார்பன் றன்னையென்

மலைமகள் கூறன்றன்னை,

என்றுமென் நாமக ளையகம்

பால்கொண்ட நான்முகனை,

நின்ற சசிபதி யைநிலங்

கீண்டெயில் மூன்றெரித்த,

வென்று புலம்துரந் தவிசும்

பாளியைக் காணேனோ!

இராமபிரானை நான் காணமுடியுமோ?

3399. ஆளியைக் காண்பரி யாய்அரி

காண்நரி யாய்,அரக்கர்

ஊளையிட் டன்றிலங் கைகடந்

துபிலம் புக்கொளிப்ப,

மீளியம் புள்ளைக் கடாய்விறல்

மாலியைக் கொன்று,பின்னும்

ஆளுயர் குன்றங்கள் செய்தடர்த்

தானையும் காண்டுங்கொலோ?

மனமே!இராமபிரானைக் காண்போமோ?

3400. காண்டுங்கொ லோநெஞ்ச மே!கடி

யவினை யேமுயலும்,

ஆண்டிறல் மீளிமொய்ம் பிலரக்

கன்குலத் தைத்தடிந்து,

மீண்டு மன் தம்பிக் கேவிரி

நீரிலங் கையருளி,

ஆண்டுதன் சோதிபுக் கவம

ரர்அரி யேற்றினையே?

கண்ணனே நமக்கு வைகுந்தம் தருவான்

3401. ஏற்றரும் வைகுந்தத் தையரு

ளும்நமக்கு, ஆயர்குலத்து

ஈற்றிளம் பிள்ளையன் றாய்ப்புக்கு

மாயங்க ளேயியற்றி,

கூற்றியல் கஞ்சனைக் கொன்றுஐவர்க்

காய்க்கொடுஞ் சேனை தடிந்து,

ஆற்றல்மிக் கான்பெரி யபரஞ்

சோதிபுக் கஅரியே.

இவற்றைப் படித்தால் யாவரும் பல்லாண்டு பாடுவர்

3402. புக்க அரியுரு வாயவு

ணனுடல் கீண்டுகந்த,

சக்கரச் செல்வன்றன் னைக்குரு

கூர்ச்சட கோபன்சொன்ன,

மிக்கவோ ராயிரத் துளிவை

பத்தும்வல் லாரவரை,

தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி

செய்வ ரேழையரே.

நேரிசை வெண்பா

அறிவு மிக்கோர் மாறனையே நெருங்குவர்

பாமருவு வேதம் பகர்மால் குணங்களுடன்,

ஆமழகு வேண்டற்பா டாமவற்றைத், - தூமனத்தால்

நண்ணியவ னைக்காண நன்குருகிக் கூப்பிட்ட,

அண்ணலைநண் ணார்ஏழை யர்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கற்பார்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  ஏழையர் ஆவி
Next