ஏழையர் ஆவி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஏழாம் பத்து

ஏழையர் ஆவி

ஆழ்வாரின் அழைப்புப் பரமபதநாதனின் செவியில் விழுந்தது. அப்பெருமான் இவரைத் தேற்றுவிக்க, இவர் கண்முன் தோன்றாமல் மனத்தால் ஸேவித்து மகிழும்படி தன் உருவெளிப் பாட்டினைத் தோன்றச் செய்தான். ஆழ்வார் பிராட்டி நிலையில் இருந்துகொண்டு சொல்லும் பகுதி இது. 'பகவானின் வடிவழகு என்னை நலியும்படி செய்கிறதே என் செய்வேன்?' என்று தாயையும் தோழியரையும் பார்த்துத் தலைவி கூறுதல்போல் பாடல்கள் ஈண்டு அமைந்துள்ளன.

தலைவனின் அழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி ஏங்கியுரைத்தல்

கலி நிலைத்துறை

கண்ணபிரான் திருக்கண்கள் என்னை நலிகின்றனவே!

3403. ஏழையர் ஆவியுண் ணுமிணைக்

கூற்றங்கொ லோவறியேன்,

ஆழியங் கண்ண பிரான்திருக்

கண்கள்கொ லோவறியேன்,

சூழவும் தாமரை நாண்மலர்

போல்வந்து தோன்றும்கண்டீர்,

தோழியர் காள்!அன்னை மீர்!என்செய்

கேன்துய ராட்டியேனே?

கண்ணனின் திருமூக்கு என் கண்முன் நிற்கிறது

3404. ஆட்டியும் தூற்றியும் நின்றென்னை

மீர்என்னை நீர்நலிந்தென்?

மாட்டுயர் கற்பக்த் தின்வல்லி

யோகொழுந் தோ?அறியேன்,

ஈட்டிய வெண்ணெயுண் டான்திரு

மூக்கென தாவியுள்ளே,

மாட்டிய வல்விளக் கின்சுட

ராய்நிற்கும் வாலியதே.

கண்ணனின் பவளவாய் என்னை வருத்துகிறது

3405. வாலிய தோர்கனி கொல்வினை

யாட்டியேன் வல்வினைகொல்,

கோலம திரள்பவ ளக்கொழுந்

துண்டங்கொ லோவறியேன்,

நீல நெடுமுகில் போல்திரு

மேனியம் மான்தொண்டைவாய்,

எலும் திசையுளெல் லால்வந்து

தோன்றுமென் னின்னுயிர்க்கே.

கண்ணனின் திருப்புருவ அழகு என்னைக் கொல்கிறது

3406. இன்னுயிர்க் கேழையர் மேல்வளை

யுமிணை நீலவிற்கொல்,

மன்னிய சீர்மத னன்கருப்

புச்சிலை கொல்,மதனன்

தன்னுயிர்த் தாதைகண் ணபெரு

மான்புரு வமவையே,

என்னுயிர் மேலன வாயடு

கின்றன என்றும் நின்றே.

கண்ணனின் புன்முறுவல் என்னை வாட்டுகிறது

3407. என்றும்நின் றேதிக ழும்செய்ய

வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,

அன்றியென் னாவி யடுமணி

மூத்தங்கொ லோவறியேன்,

குன்றம் எடுத்தபி ரான்முறு

வலென தாவியடும்,

ஒன்றும் அறிகின்றி லேனன்னை

மீர்!எனக் குய்விடமே.

கண்ணனின் திருச்செவிகள் என்னை அடுகின்றன

3408. 'உய்விடம் ஏழையர்க் குமசு

ரர்க்கும் அரக்கர்கட்கும்,

எவ்விடம்?' என்றிலங் கிமக

ரம்தழைக் கும்தளிர்கொல்,

பைவிடப் பாம்பணை யான்திருக்

குண்டலக் காதுகளே?

கைவிட லொன்றுமின் றியடு

கின்றன காண்மின்களே.

பகவானின் திருநுதல் என் உயிரைத் துன்புறுத்துகின்றன

3409. காண்மின்கள் அன்னையர் காள்!என்று

காட்டும் வகையறியேன்,

நாண்மன்னு வெண்திங்கள் கொல்!நயந்

தார்கட்கு நச்சிலைகொல்,

சேண்மன்னு நால்தடந் தோள்பெரு

மான்றன் திருநுதலே?,

கோள்மன்னி யாவி யடும்கொடி

யேனுயிர் கோளிழைத்தே.

கண்ணனின் திருமுகம் என் உயிரைக் கவர்கிறது

3410. கோளிழைத் தாமரை யும்கொடி

யும்பவ ளமும்வில்லும்,

கோளிழைத் தண்முத் தமும்தளி

ரும்குளிர் வான்பிறையும்,

கோளிழை யாவுடை யகொழுஞ்

சோதிவட் டங்கொல்,கண்ணன்,

கோளிழை வாள்முக மாய்க்கொடி

யேனுயிர் கொள்கின்றதே?

கண்ணனின் திருக்குழல் கற்றை என்னைக் கொள்ளை கொண்டது

3411. கொள்கின்ற கோளிரு ளைச்சுகிர்ந்

திட்ட கொழுஞ்சுருளின்,

உள்கொண்ட நீலநன் னூல்தழை

கொல்?அன்று மாயன்குழல்,

விள்கின்ற பூந்தண் டுழாய்விரை

நாறவந் தென்னுயிரை,

கள்கின்ற வாறறி யீரன்னை

மீர்!கழ றாநிற்றிரே.

கண்ணனின் திருமுடியில் என் மனம் ஈடுபட்டது

3412. 'நிற்றிமுற் றத்துள்'என் றுநெரித்

தகைய ராய்என்னைநீர்

சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்சுடர்ச்

சோதி மணிநிறமாய்,

முற்றவிம் மூவுல கும்விரி

கின்ற சுடர்முடிக்கே,

ஒற்றுமைக் கொண்டதுள் ளம்அன்னை

மீர்!நசை யென்நுங்கட்கே?

இவற்றைப் படித்தோர் தேவருடன் வாழ்வார்

3413. கட்கரி யபிர மன்சிவன்

இந்திரன் என்றிவர்க்கும்

கட்கரி யகண்ண னைக்குரு

கூர்ச்சட கோபன்சொன்ன,

உட்குடை யாயிரத் துளிவை

யுமொரு பத்தும்வல்லார்,

உட்குடை வானவ ரோடுட

னாயென்றும் மாயாரே.

நேரிசை வெண்பா

மாறனைச் சேர்ந்தால் தீவினை மாயும்

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு,

சூழவந்து தோன்றித் துயர்விளைக்க, - ஆழுமனம்

தன்னுடனே அவ்வழகைத் தானுரைத்த மாறன்பால்,

மன்னுமலர் தீவினைபோம் மாய்ந்து.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is பாமருமூவுலகம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  மாயா வாமனனே
Next