மாயா வாமனனே

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஏழாம் பத்து

மாயா வாமனனே

ஆழ்வாரின் வருத்தத்தைத் தீர்க்க எண்ணிய பகவான், அதற்கொரு நேரத்தை எதிர்பார்த்திருந்தான். இது ஆழ்வாருக்குத் தெரியுமாயினும், 'உயிர் போகவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டிருந்தும் போகவெட்டாமல் வைத்திருக்கிறானோ' என்று நினைத்து வியந்தார். ஆழ்வாரை மேலும் வியக்கச் செய்யத் தன் விசித்திர

விபூதித்துவத்தைப் பகவான் காட்டுகிறான். அது கண்ட ஆழ்வார் வியப்புறுகிறார் இத்திருவாய்மொழியில்.

எம்பெருமானின் விசித்திர விபூதி கண்டு வியத்தல்

கலி நிலைத்துறை

மாயா என்னே நின் தோற்றம்

3414. மாயா!வாமன னே!மது

சூதா!நீயருளாய்,

தீயாய் நீராய் நிலனாய்

விசும்பாய்க் காலாய்,

தாயாய்த் தந்தையாய் மக்களாய்

மற்றுமாய் முற்றுமாய்,

நீயாய் நீநின்ற வாறிவை

யென்ன நியாயங்களே

அச்சுதனே!எனக்கு அருள் செய்

3415. அங்கண் மலர்த்தண்டுழாய்முடி

அச்சுத னே!அருளாய்,

திங்களும் ஞாயிறு மாய்ச்செழும்

பல்சுட ராய்இருளாய்,

பொங்கு பொழிமழை யாய்ப்புக

ழாயப்பழி யாய்ப்பின்னும்நீ,

வெங்கண்வெங் கூற்றமு மாமிவை

யென்ன விசித்திரமே

சக்கரபாணீ உன் செயல்கள் புரியவில்லையே

3416. சித்திரத் தேர்வல வா!திருச்

சக்கரத் தாய்!அருளாய்,

எத்தனை யோருக முமவை

யாயவற் றுள்ளியலும்,

ஒத்தவொண் பல்பொருள் களுலப்

பில்லன வாய்வியவாய்,

வித்தகத் தாய்நிற்றி நீயிவை

யென்ன விடமங்களே

கண்ணனே!என்னே உன் உபாயங்கள்

3415. கள்ளவிழ் தாமரக் கட்கண்ண

னே!எனக் கொன்றருளாய்,

உள்ளது மில்லது மாயுலப்

பில்லன வாய்வியவாய்,

வெள்ளத் தடங்கட லுள்விட

நாகண மேல்மருவி,

உள்ளப்பல் யோகுசெய் தியிவ

யென்ன உபாயங்களே

மாயவனே!இவையென்ன மயக்குகள்!

3418. பாசங்கள் நீக்கியென் னையுனக்

கேயுறக் கொண்டிட்டு,நீ

வாச மலர்த்தண் டுழாய்முடி

மாயவ னே!அருளாய்,

காயமும் சீவனு மாய்க்கழி

வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ,

மாயங்கள்செய்துவைத் தியிவை

யென்ன மயக்குகளே!

வாமனா!என்னே நின் லீலா வினோதம்!

3419. மயக்கா!வாமன னே!மதி

யாம்வண்ணம் ஒன்றருளாய்,

அயர்ப்பாய்த் தேற்றமு மாயழ

லாய்க்குளி ராய்வியவாய்,

வியப்பாய் வென்றிக ளாய்வினை

யாய்ப்பய னாய்ப்பின்னும்நீ,

துயக்காய் நீநின்ற வாறிவை

யென்ன துயரங்களே!

கண்ணா!இவை என்னை விளையாட்டுகள்!

3420. துயரங்கள் செய்யுங்கண்ணா!சுடர்

நீண்முடி யாய்அருளாய்,

துயரம்செய் மானங்க ளாய்மத

னாகி உகவைகளாய்,

துயரம்செய் காமங்க ளாய்த்துலை

யாய்நிலை யாய்நடையாய்,

துயரங்கள் செய்துவைத் தியிவை

யென்னசுண் டாயங்களே.

கண்ணா!என்னே நின் இயல்புகள்!

3421. என்னசுண் டாயங்க ளால்நின்றிட்

டாயென்னை யாளும்கண்ணா,

இன்னதோர் தன்னைமயை என்றுன்னை

யாவர்க்கும் தேற்றரியை,

முன்னிய மூவுல குமவை

யாயவற் றைப்படைத்து,

பின்னுமுள் ளாய்!புறத் தாய்!இவை

யென்ன இயற்கைகளே!

கண்ணா!நின்னை முற்ற முடிய அறியமுடியாது

3422. என்ன இயற்கைக ளால்எங்ங

னேநின்றிட் டாயென்கண்ணா,

துன்னு கரசர ணம்முத

லாகவெல் லாவுறுப்பும்,

உன்னு சுவையளி யூறொலி

நாற்றம் முற்றும்நீயே,

உன்னை யுணர வுறிலுலப்

பில்லை நுணுக்கங்களே.

அச்சுதா!அருவும் உருவும் நீயே

3423. இல்லை நுணுக்கங் ளேயித

னில்பிறி தென்னும்வண்ணம்,

தொல்லைநன் னூலில் சொன்ன

வுருவும் அருவும்நீயே.

அல்லித் துழாயலங் கலணி

மார்ப!என் அச்சுதனே,

வல்லதோர் வண்ணம்சொன்ன னாலது

வேயுனக் காம்வண்ணமே.

இவற்றைப் படித்தோர் நிறைவு பெறுவர்

3424. ஆம்வண்ண மின்னதொன் றென்றறி

வதரி யஅரியை.

ஆம்வண்த் தால்குரு கூர்ச்சட

கோபன் அறிந்துரைத்த,

ஆம்வண்ண வொண்டமிழ் களிவை

யாயிரத் துளிப்பத்தும்,

ஆம்வண்ணத் தாலுரைப் பாரமைந்

தார்தமக் கென்றைக்குமே.

நேரிசை வெண்பா

மாறனைப் புகழ்ந்து வாழ்வோம்

மாயாமல் தன்னைவைத்த வைசித் திரியாலே,

தீயா விசித்திரமாச் சேர்பொருளோ - டோயாமல்,

வாய்ந்துநிற்கும் மாயன் வளமுரைத்த மாறனைநாம்,

ஏய்ந்துரைத்து வாழும்நாள் என்று?

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is ஏழையர் ஆவி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  என்றைக்கும்
Next