ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
பத்தாம் பத்து
கெடுமிடர்
ஆழ்வார் திருவனந்தபுரத்தைப் பரமபதம்போல எண்ணி, அவ்விடத்தில் ஈடுபட்டுப் பாடுகிறார், இத்திருவாய்மொழி திருவனந்தபுரத்தைப் பற்றியது, திருவனந்தபுரத்தில் தொண்டு செய்யலாம் எனல்
கலி விருத்தம்
தொண்டு செய்யத் திருவனந்தபுரம் புகுவோம்
3678. கெடுமிட ராயவெல்லாம்
கேசவா வென்ன,நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின்
தமர்களும் குறுககில்லார்,
விடமுடை யரவில்பள்ளி
விரும்பினான் சுரும்பலற்றும்,
தடமுடை வயலனந்த
புரநகர்ப் புகுதுமின்றே.
திருவனந்தபுரத்தானை நினைத்தால் மோட்சம் உண்டு
3679. இன்றுபோய்ப் புகுதிராகி
லெழுமையும் ஏதம்சாரா,
குன்றுநேர் மாடமாடே
குருந்துசேர் செருந்திபுன்னை,
மன்றலர் பொழிலனந்த
புரநகர் மாயன்நாமம்,
ஒன்றுமோ ராயிரமாம்
உள்ளுவார்க் கும்பரூரே.
திருவனந்தபுரம் சேர்ந்தால் வினை தீரும்
3680. ஊரும்புட் கொடியுமஃதே
யுலகெல்லா முண்டுமிழ்ந்தான்,
சேரும்தண் ணனந்தபுரம்
சிக்கெனப் புகுதிராகில்,
தீரும்நோய் வினைகளெல்லாம்
திண்ணநாம் அறியச்சொன்னோம்
பேரும்ஓ ராயிரத்துள்
ஒன்றுநீர் பேசுமினே.
அனந்த பத்மநாபனுக்கு அடிமை செய்பவர் பாக்கியசாலி
3681. பேசுமின் கூசமின்றிப்
பெரியநீர் வேலைசூழ்ந்து,
வாசமே கமழுஞ்சோலை
வயலணி யனந்தபுரம்,
நேசம்செய் துறைகின்றானை
நெறிமையால் மலர்கள்தூவி,
பூசனை செய்கின்றார்கள்
புண்ணியம் செய்தவாறே.
பத்மநாபன் திருவடி அணுகினால் தேவராகலாம்
3682. புண்ணியம் செய்துநல்ல
புனலொடு மலர்கள்தூவி,
எண்ணுமி னெந்தைநாமம்
இப்பிறப் பறுக்குமப்பால்,
திண்ணம்நாம் அறியச்சொன்னோம்
செறிபொழில் அனந்தபுரத்து,
அண்ணலார் கமலபாதம்
அணுகுவார் அமரராவார்.
கோவிந்தனை நணுகுவோம்
3683. அமரராய்த் திரிகின்றார்கட்
காதிசேர் அனந்தபுரத்து,
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங்
ககப்பணி செய்வர்விண்ணோர்,
நமர்களோ!சொல்லக்கேண்மின்
நாமும்போய் நணுகவேண்டும்,
குமரனார் தாதைதுன்பம்
துடைத்தகோ விந்தனாரே.
கடுவினை களைய அனந்தபுரம் அடைக
3684. துடைத்தகோ விந்தனாரே
யுலகுயிர் தேவும்மற்றும்,
படைத்தவெம் பரமமூர்த்தி
பாம்பணைப் பள்ளிகெண்டான்,
மடைத்தலை வாளைபாயும்
வயலணி யனந்தபுரம்,
கடைத்தலை சீய்க்கப்பெற்றால்
கடுவினை களையலாமே.
நம்மவர்களே!பத்மநாபன் திருவடி காண நடமின்
3685. கடுவினை களையலாகும்
காமனைப் பயந்தகாளை,
இடவகை கொண்டதென்பர்
எழிலணி யனந்தபுரம்,
படமுடை யரவில்பள்ளி
பயின்றவன் பாதம்காண,
நடமினோ நமர்களுள்ளீர்!
நாமுமக் கறியச்சொன்னோம்.
வாமனன் திருவடி ஏத்துக வினைகள் அறும்
3686. நாமுமக் கறியச்சொன்ன
நாள்களும் நணியவான,
சேமநன் குடைத்துக்கண்டீர்
செறிபொழி லனந்தபுரம்,
தூமநல் விரைமலர்கள்
துவளற ஆய்ந்துகொண்டு,
வாமனன் அடிக்கென்றேத்த
மாய்ந்துளும் வினைகள்தாமே.
திருவனந்தபுரத்து மாதவனை ஏத்துக புகழடையலாம்
3687. மாய்ந்தறும் வினைகள்தாமே
மாதவா என்ன, நாளும்
ஏய்ந்தபொன் மதிளனந்த
புரநக ரெந்தைக்கென்று,
சாந்தொடு விளக்கம்தூபம்
தாமரை மலர்கள்நல்ல,
ஆய்ந்துகொண் டேத்தவல்லார்
அந்தமில் புகழினாரே.
இவற்றைப் பாடினால் தேவருலக இன்பம் கிட்டும்
3688. அந்தமில் புகழனந்த
புரநகர் ஆதிதன்னை,
கொந்தலர் பொழில்குருகூர்
மாறன்சொல் லாயிரத்துள்,
ஐந்தினோ டைந்தம்வல்லார்
அணைவர்போய் அமருலகில்,
பைந்தொடி மடந்தையர்தம்
வேய்மரு தோளிணையே.
நேரிசை வெண்பா
மாலுக்கு அடிமை செய்ய விரும்பினான் மாறன்
கெடுமிடர் வைகுந்தத் தைக்கிட்டி னாற்போல்,
தடமுடைய னந்தபுரந் தன்னில்.- படவரவில்
கண்டுயில்மாற் காட்செய்யக் காதலித்தான் மாறன்,உயர்
விண்டனிலுள் ளோர்வியப்ப வே.