வேய் மருதோள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

பத்தாம் பத்து

வேய் மருதோள்

இத்திருவாய்மொழி காலைப்பூசல்.

ஆழ்வார் திருவனந்தபுரம் சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்யப் பாரித்தார். ஆனால். அப்போதே அவ்விடம் சென்று அடிமை செய்ய முடியாமையால் கலங்கினார். எம்பெருமான், தம்மை இங்கேயே இருக்கச் செய்துவிடுவானோ என்று ஐயுற்றார்.

இடைப் பெண்களுக்குக் கண்ணபிரான்மீது ஓர் ஐயமுண்டாகி, அவர்கள் கதறியதை வெளியிடும் வாயிலாகத் தம் ஐயத்தை வெளியிடுகிறார் ஆழ்வார்.

ஆநிரை மேய்க்கச் செல்லுதலைத் தவிர்க்குமாறு

ஆய்ச்சியர் கண்ணனை வேண்டல்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

கண்ணா!பிரிவாற்றோம் c ஆநிரை மேய்க்கச் செல்லாதே

3689. வேய்மரு தோளிணை மெலியு மாலோ!

மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்கா,

காமரு குயில்களும் கூவு மாலோ!

கணமயில் அவைகலந் தாலு மாலோ,

ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்

கொருபக லாயிர மூழி யாலோ,

தாமரைக் கண்கள்கொண் டீர்தி யாலோ!

தகவிலை தகவிலை யேநீ கண்ணா!

கண்ணா எம்மைப் பிரிதல் தக்கதன்று

3690. தகவிலை தகவிலை யேநீ கண்ணா!

தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக் காரா,

சுகவெள்ளம் விசும்பிறந் தறிவை மூழ்க்கச்

சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே,

அகவுயிர் அகமகந் தோறும் உள்புக்

காவியின் பரமல்ல வேட்கை யந்தோ,

மிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால்

வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.

கண்ணா!எம்மைத் தவிக்கச் செய்த பிரிந்துவிடாதே

3691. வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு

வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்,

யாவரும் துணையில்லை யானி ருந்துன்

அஞ்சன மேனியை யாட்டம் காணேன்,

போவதன் றொருபகல் நீய கன்றால்

பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா,

சாவதிவ் வாய்க்குலத் தாய்ச்சி யோமாய்ப்

பிறந்தவித் தொழுத்தையோம் தனிமைதானே.

கண்ணா!நீ பிரிந்தால் எம் ஆவி வெந்துவிடும்

3692. தொழுத்தையோம் தனிமையும் துணைபி ரிந்தார்

துயரமும் நினைகிலை கோவிந் தா,நின்

தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித்

துறந்தெம்மை விட்டவை மேய்க்கப் போதி,

பழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம்

பாவியேன் மனமகந் தோறு முள்புக்

கழுத்த,நின் செங்கனி வாயின் கள்வப்

பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்.

கண்ணா!எம் கூந்தலைத் தடவிக்கொண்டே இரு

3693. பணிமொழி நினைதொம் ஆவி வேமால்

பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா,

பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்

பெருமத மாலையும் வந்தின் றாலோ,

மணிமிகு மார்வினில் முல்லைப் போதென்

வனமுலை கமழ்வித்துன் வாயமு தந்தந்து,

அணிமிகு தாமரைக் கையை யந்தோ!

அடிச்சி யோந்தலை மிசைநீ யணியாய்.

கண்ணா!நீ பிரிந்தால் எம் உயிர் உருகும்

3694. அடிச்சி யோந்தலை மிசைநீ யணியாய்

ஆழியங் கண்ணா!உன் கோலப் பாதம்,

பிடித்தது நடுவுனக் கரிவை மாரும்

பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம்,

வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா

மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே,

வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு

வேமெம துயிரழல் மெழுகில் உக்கே.

கண்ணா!நீ உன் கால் நோவ ஏன் செல்கின்றாய்?

3695. வேமெம துயிரழல் மெழுகில் உக்கு

வெள்வளை மேகலை கழன்று வீழ,

தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத்

துணைமுலை பயந்தென தோள்கள் வட,

மாமணி வண்ண உன்செங் கமல

வண்ணமென் மலரடி நோவ நீபோய்,

ஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோ

டசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கே?

கண்ணா ஆய்ச்சியர்களின் பக்கத்திலேயே c இரு

3696. அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்

றழுமென் னாருயிர் ஆன்பின் போகேல்,

கசிகையும் வேட்கையும் உள்க லந்து

கலவியும் நலியுமென் கைகழி யேல்,

வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும்

கைகளும் பீதக வுடையும் காட்டி,

ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ

உகக்குநல் லவரொடும் உழித ராயே.

கண்ணா c அசுரர்களுடன் போரிட நேரலாம் போகாதே

3697. உகக்குநல் லவரொடும் உழிதந் துன்றன்

திருவுள்ளம் இடர்கெடுந் தோறும்,நாங்கள்

வியக்கவின் புறுதுமெம்-பெண்மை யாற்றோம்

எம்பெரு மான்!பசு மேய்க்கப் போகேல்,

மிகப்பல அசுரர்கள் வேண்டும் உருவங்

கொண்டுநின் றுழிதருவர் கஞ்ச னேவ,

அகப்படில் அவரொடும் நின்னொ டாங்கே

அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ!

கண்ணா அசுரர் திரிகின்றார் தனியே செல்லாதே

3698. அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ!

அசுரர்கள் வன்கையர் கஞ்ச னேவத்,

தவத்தவர் மறுக நின்றுழி தருவர்

தனிமையும் பெரிதுனக் கிரம னையும்

உவர்த்தலை, உடன்திரி கிலையு மென்றென்

றூடுற வென்னுடை யாவி வேமால்,

திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி

செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே!

இவற்றையும் பாடுக உய்வு பெறலாம்

3699. செங்கனி வாயெங்கள் ஆயர் தேவத்

திருவடி திருவடி மேல்,பொ ருநல்

சங்கணி துறைவன் வண்தென் குருகூர்

வண்சட கோபன்சொல் லாயி ரத்துள்,

மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை

அவனொடும் பிரிவதற் கிரங்கி,தையல்

அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான்

உரைத்தன இவையும்பத் தற்றின் சார்வே.

நேரிசை வெண்பா

மாறனே எனக்குக் கதி

வேய்மருதோள் இந்திரைகோன் மேவுகின்ற தேசத்தைத்,

தான்மருவாத் தன்மையினால் தன்னையின்னம் - பூமியிலே

வைக்குமெனச் சங்கித்து மால்தெளிவிக் கத்தெளிந்த,

தக்கபுகழ் மாறனெங்கள் சார்வு

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கெடுமிடர்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  சார்வே தவநெறி
Next