கண்ணன் கழலிணை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

பத்தாம் பத்து

கண்ணன் கழலிணை

பெரியோர்கள் திருநாட்டுக்கு எழுந்தருளும் கடைசி நாட்களில், தமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் அன்பர்களுக்கு அருமையான உபதேசங்கள் சிலவற்றைச் செய்வதுண்டு. ஆழ்வாரும்ட கடைசி உபதேசங்களைச் செய்கிறார் இப்பகுதியில்.

பக்தி செலுத்தும் விதங்கள்

வஞ்சித்துறை

நாராயணன் திருநாமம் எண்ணுக

3711. கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,

எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

நாரணனே ஆதிமூலம்

3712. நாரண னெம்மான். - பாரணங் காளன்,

வாரணம் தொலைத்த, - காரணன் தானே.

உலகெல்லாம் ஆள்பவன் நாராயணனே

3713. தானே யுலகெலாம், - தானே படைத்திடந்து,

தானே யுண்டுமிழ்ந்து, - தானே யாளர்வானே.

நாரணன் திருவடிகளில் மலர் தூவி வழிபடுக

3714. ஆள்வா னாழிநீர், - கோள்வா யரவணையான்,

தாள்வாய் மலரிட்டு, - நாள்வாய் நாடீரே.

நாரணன் நாமம் பாடுக வைகுந்தம் கிட்டும்

3715. நாடீர் நாடொறும். - வாடா மலர்கொண்டு,

பாடீர் அவன் நாமம், - வீடே பெறலாமே.

மாதவன் வேங்கடத்தே உள்ளான்

3716. மேயான் வேங்கடம், - காயா மலர்வண்ணன்,

பேயார் முலையுண்ட, - வாயான் மாதவனே,

மாதவனென்று ஓது - தீது வராது

3717. மாதவ னென்றுன்று, - ஓத வல்லீரேல்,

தீதொன் றுமடையா. -ஏதம் சாராவே.

கண்ணன் பேர் ஓதினால் துன்பங்கள் சேரா

3718. சாரா ஏதங்கள், -நீரார் முகில்வண்ணன்,

பேரா ரோதுவார்,-ஆரார் அமரரே.

கண்ணனைத் தொழுக - வினைகள் சேரா

3719. அமரர்க் கரியானை. - தமர்கட் கெளியானை,

அமரத் தொழுவார்கட்கு, - அமரா வினைகளே.

நெடியானை நினைமின் - வினையிருள் ஓடும்

3720. வினைவல் லிருளென்னும்.-முனைகள் வெருவிப்போம்,

சுனைநன் மலரிட்டு, - நினைமின் நெடியானே.

இவற்றைப் பாடு - கண்ணன் அருள்கிட்டும்

3721. நெடியான் அருள்சூடும், - படியான் சடகோபன்,

நொடியா யிரத்திப்பத்து, - அடியார்க் கருள் பேறே.

நேரிசை வெண்பா

மாறன் உபதேசங்களை அருளினான்

கண்ணன் அடியிணையிற் காதலுறு வார்செயலைத்

திண்ணமுற வேசுருங்கச் செப்பியே. - மண்ணவர்க்குத்

தானுபதே சிக்கை தலைக்கட்டி னான்மாறன்,

ஆனபுகழ் சேர்தன் அருள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is சார்வே தவநெறி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  அருள் பெறுவார்
Next