ஆசார்யாள், கண்ணனின் மிதவாதம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இதற்கு ஆசார்யாள் ரொம்பவும் ஃபிலஸா ஃபிகலாக பாஷ்யம் செய்துவிட்டார். “சாப்பாடு இல்லாமலிருப்பதென்றால் போஜன நிவ்ருத்தி என்று அர்த்தமில்லை. வெறுமே போஜனத்தை விட்டால் பிராணன்தான் போகுமே தவிர ஆத்ம ஞானம் வந்தவிடாது. அதனால் இங்கே ‘அசனம்’ (சாப்பாடு) என்று சொன்னது ஆசையநுபோகங்களைத்தான். காம நுகர்ச்சியை விடுமாறே இந்த மந்திரம் சொல்கிறது” என்று பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.

ஆனால் இம்மாதிரி ஆசை அற்று போவதற்கும் பட்டினி கிட்டினி கிடந்து வ்ரத உபவாஸமிருப்பது உதவத்தான் செய்கிறது. அதுவும் ஆசார்யாளுக்குத் தெரியாததில்லை. நம் மதத்தை மற்ற மதங்கள் அடித்துக் கொண்டுபோக இருந்தபோது மீட்டுக் கொடுத்தது அவர்தான். ஞான மார்க்கம் என்று த்யான விசாராதிகள் பண்ணுவதை மட்டுந்தான் அவர் மீட்டு ரக்ஷித்துத் தந்தார் என்றில்லை. நம்முடைய பூஜா பத்ததிகள், கோயில், குளம், உத்ஸவம், பண்டிகை, வ்ரதம் எல்லாவற்றுக்குமே புனர்ஜீவன் தந்தவர் அவர்தான். அதனால் இன்றைக்கு நாம் ஏகாதசி வ்ரதம் என்று ஒன்று இருக்கிறோமென்றால் அதற்குக் காரணமே அவர்தான். புராணானாம் ஆலயம் என்பதாக ஸகல புராணங்களுக்குமே உறைவிடமாக இருந்த ஆசார்யாள், புராணங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் ஏகாதசி வ்ரதத்தை அவசியமில்லாதது என்று சொல்லவே மாட்டார்.

இங்கே அவர் சொல்வது என்னவென்றால், ஏகாதசி மாதிரி பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தப் பட்டினி போடுவதையல்ல. “இனிமேலே சாப்பிடுவதேயில்லை” என்று உண்ணாவிரதம் இருந்து ஸாதனை பண்ணுவதைத் தான் சொல்கிறார். அந்த மாதிரி ஒரே தீவிரமாகப் போகிறதில் ஒன்றும் பிரயோஜனமில்லை. அவ்வப்போது ஒருவேளை, அல்லது ஒரே ஒரு நாள் பட்டினி போடுவது என்பது ‘நேச்ச’ருக்கே அநுகூலமாக இருப்பது. ஒரேயடியாக ‘சாகிற மட்டும் உண்ணாவிரதம்’ என்றால் அது ‘நேச்ச’ரை எதிர்த்துக்கொண்டு போவதாகும். அப்போது ‘நேச்ச’ரும் பழி வாங்கும். உடம்பைச் சித்ரவதை பண்ணும். அந்த வதையை நினைத்துக்கொண்டு அதைச் சமாளிக்க யத்தனிப்பதிலேயேதான் மனஸ் போகுமே தவிர, ஸாதனா லக்ஷ்யத்தில் ஈடுபட்டு நிற்காது. இம்மாதிரி தன்னைத்தானே க்ரூரமாக வ்ருத்திக் கொள்கிற வழிகளை ஆசார்யாள் ஒப்புக் கொள்ளாததால்தான் இப்படிச் சொல்கிறார்.

கிருஷ்ண பரமாத்மாவும் எக்ஸ்ட்ரீம்களை வேண்டாம் என்றுதான் சொல்கிறார். ‘நாத்யச்நதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தம் அநச்நத: … யுக்தாஹார … ஸ்ய யோகோ பவதி து:கஹா – பெருந்தீனி தின்கிறவனுக்கும் யோகம் வராது, ஒரேயடியாகப் பட்டினி கிடக்கிறவனுக்கும் யோகம் வராது, யுக்தமான அளவு மிதமாய் சாப்பிடுகிறவனுக்கே யோகம் ஸித்தித்துத் துக்கத்தைப் போக்கும்” என்கிறார்*. ஒரேயடியாகப் பல நாள் சேர்ந்தாற்போல் உண்ணாவிரதம் கிடப்பது நம் சாஸ்த்ர ஸம்மதமல்ல. அது ஒரே ஓய்ச்சலில் கொண்டுவிட்டு, மனஸையும் சுத்தி பண்ணுவதற்குப் பதில் ஒரேயடியாகப் பலஹீனமாக்கிப் பைத்தியத்திலோ ஸ்மரணை தப்புவதிலோதான் கொண்டுவிடும். பகவத் ஸ்மரணையில் ஸ்டெடியாக நிற்கப் பண்ணாது. ஆனால் சாஸ்த்ரங்களில் சொன்னாற்போல் அவ்வப்போது ஒருபொழுதும், பதினைந்து நாளுக்கு ஒருமுறை சுத்தோபவாஸமும் இருப்பது மனஸை சுத்தமாக்கி, திவ்ய ஸ்மரணத்தில் பலப்படுத்தி நிறுத்தி வைக்கும்.

ரொம்பவும் தீவிரமாகவும், ‘ forced’ ஆகவும் [வலுக்கட்டாயமாகவும்] உபவாஸாதிகளை அநுஷ்டித்தால் எல்லாம் சிதறிப் பிரயோஜனமில்லாமல் போய்விடும்; அதனால் gradual-ஆக (படிப்படியாக) ப் போக வேண்டும் என்பதுதான் நம் ஆசார்யாள், கீதாசார்யனான பகவான் இவர்களின் அபிப்ராயம். அவர்கள் சொன்ன context-ல் அடியோடு நிராகரிப்பது போல அழுத்திச் சொல்லும்படியாகிவிட்டது.

அதியாகப் போகக்கூடாது என்பதாலேயே போஜன நிவ்ருத்தியால் ப்ரயோஜனமில்லை என்று கொஞ்சம் அடித்தே ஆசார்யாள் சொல்லிவிட்டார்.

‘பூணூல் ஒருத்தனை பிராம்மணனாக்கி விடவில்லை; ஒழுக்கம்தான் அப்படி ஆக்குகிறது ‘என்று சொன்னால், உடனே உபநயன ஸம்ஸ்காரத்தை நிறுத்தி விட வேண்டும் என்று அர்த்தம் பண்ணிக்கொள்வதா? ஒன்று சிலாக்யமானது, ஆனால் அதைவிட சிலாக்யமாக இன்னொன்று இருக்கிறது என்றால் அப்போது இரண்டாவதை வலியுறுத்துவதற்காக முதலாவதைக் கழித்துக் கட்டுவது போல exaggerate பண்ணியே பேசுவது வழக்கம். ‘பாயின்ட்’ நன்றாக நம் மனஸில் தைப்பதற்காக இப்படிச் சொல்கிறது. பிராம்மணனுக்குப் பூணூல் முக்யமானாலும், அதைவிட ஒழுக்கம் முக்யம் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் பூணூலே வேண்டாம், ஒழுக்கம் போதும் என்பது. திருக்குறளில் ஆயிரம் யாகத்தைவிட ஒரு பிராணிக்குக்கூட ஹிம்ஸை செய்யாமலிருப்பது உசத்தி என்று சொல்லியிருப்பதும் இப்படித்தான்1 கீதையில் இனனோரிடத்திலும் ஒரு ஆசாரத்தின் முக்யத்வத்தை வலியுறுத்துவதற்காகவே இன்னொரு ஆசாரத்தை மட்டம் தட்டிக் கழித்துக் கட்டிப் பேசியிருக்கிறார். ‘அக்னியை விட்டு விட்டதால் ஒருத்தன் ஸந்நியாஸி இல்லை; கர்மாவை விட்டுவிட்டதால் ஒருத்தன் ஸந்நியாஸி இல்லை; என்று அங்கே (பகவான்) சொல்கிறார்:

ஸந்ந்யாஸீ யோகீ நிரக்நிர் சாக்ரி:2

ஸந்நியாஸிக்கு அக்னி ஹோத்ரம், ஒளபாஸனம், யஜ்ஞம் முதலான அக்னிகார்யம் எதுவும் கிடையாது. அவனுக்கு மற்ற பூஜை முதலான கர்மாக்களும், ஸமூஹக் கடமைகளுங்கூடக் கிடையாது. இது ஸகல சாஸ்திரங்களாலும் ஏற்படுத்தப்பட்ட ஸந்நியாஸாச்ரம தர்மமாகும். அப்படியிருக்க ‘நிரக்னி’ (அக்னியை விட்டவன், ‘அக்ரியன்’ (கர்மா இல்லாதவன்)  என்பதால் ஒருத்தன் ஸந்நியாஸி ஆகிவிடமாட்டானென்றால் எப்படி ஸரியாகும்?

இதற்கு ச்லோகத்தின் இன்னொரு வரியை, இதற்கு முந்தி வருகிற முதல் வரியைப் பார்க்க வேண்டும். அதிலே, “அநாச்ரித: கர்ம பலம் கார்யம் கர்ம கரோதி ய:” என்கிறார். தானாக எந்தக் கார்யம் வந்து வாய்த்தாலும் அதைத் ‘தான் பண்ணுகிறோம்’ என்ற உணர்ச்சியில்லாமல் பண்ணிக் கொண்டு, அந்தக் கர்மாவின் பலனைக் கொஞ்சங்கூடக் கருதாமல் இருப்பதுதான் உண்மையான ஸந்நியாஸ லக்ஷணம் என்பது பகவான் அபிப்ராயம். அதைத்தான் இந்த வரியில் சொல்லியிருக்கிறார். இப்படிக் கர்ம பலனில் அனாச்ரிதனாக இருந்துகொண்டு, எவன் வாய்த்த கர்மாவைப் பண்ணுகிறானோ ‘அப்படிப் பட்டவனே ஸந்நியாஸி அவனே யோகி – “ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச” என்று முத்தாய்ப்பு வைத்துவிட்டு, அப்புறந்தான் அதற்கு இன்னம் வலுக்கொடுப்பதற்காக, “ந நிரக்நிர் ந சாக்ரிய:” — நெருப்பை விட்டவனோ கர்மாவை விட்டவனோ இல்லை”என்கிறார்.

இதற்கு சரியாக அர்த்தம் பண்ணிக் கொண்டால், “ஸந்நியாஸ ஆச்ரமத்திலிருக்கிற ஒருவன் வெறுமே ‘நெருப்பை விட்டேன், கர்மாவை விட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே சொந்தப் பலனை உத்தேசித்து வேலைகள் பண்ணிக் கொண்டிருந்தால் அது ஸந்நியாஸமே இல்லை” என்று பகவான் சொல்வதாகவே ஆகும். இவன் அக்னியை விடத்தான் வேண்டும். தான் கர்த்தா என்ற எண்ணத்தோடு கர்மா செய்வதை விடத்தான் வேண்டும்; ஆனாலும் இதைவிட முக்யம் பலனை எதிர்பார்க்காமல் பட்டுக் கொள்ளாமல் வாய்த்த கர்மாவைப் பண்ண வேண்டும் என்பதே அர்த்தம்.

உபநிஷத்திலே சொல்லியிருக்கிற “அநாசகேன” என்பதற்கு “போஜனத்தை விட்டு விட்டு” என்றும் அர்த்தந்தான். ஆனால் அதைவிட முக்யமான அர்த்தம் “இந்த்ரிய இச்சைகளைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதை விட்டுவிட்டு” என்பதேயாகும். இந்த அபிப்ராயத்துக்கு அழுத்தங் கொடுப்பதற்காகவே ஆசார்யாள், “போஜனத்தை விடுவது இங்கே தாத்பரியமில்லை” என்கிறார்.

அவ்வப்போது ஆஹாரத்தை நிறுத்துவது சரீரத்துக்கும் நல்லது. மனஸுக்கும் நல்லது.

ஆஹார நியமங்களில் இதனால்தான் ஸத்வ போஜனம் என்று சாப்பிடத்தக்கதான உணவு முறையை வைத்ததோடு, அந்த ஸத்வ போஜனமுமில்லாத பட்டினி தினங்களாக வ்ரத உபவாஸங்களையும் சொல்லியிருக்கிறது.


* பகவத்கீதை – 6.16-17

1. ” தெய்வத்தின் குரல்”முதல் பகுதியில் “பரோபகாரம்“என்ற உரையும், இரண்டாம் பகுதியில் “வேதம்”என்ற உரையில் “ஜீவஹிம்ஸை செய்யலாமா?“என்ற உட்பிரிவும் பார்க்க.

2. கீதை – 6.1

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is உபநிஷத்தில் உபவாஸம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பண்டிகை, வ்ரதம்;ஏகாதசிச் சிறப்பு
Next