ஜன ஸமூஹத்துக்குப் பொதுவாக அநுபவங்களை நானாவிதமான ருசி பேதங்களில் நுகர்வதுதான் இயற்கை குணம். ஆஹாரம் பல சுவைகளில் இருக்கணும். ஒன்றே இருந்தால் திகட்டிப் போகிறது. கதை, நாடகம் என்றாலும் பல ரஸங்கள் இருக்கணும். பாட்டு என்றால் பல ராகங்களில், தாளங்களில் இருக்கணும்; விறுவிறுப்பாகவும் வேணும், விளம்பமாகவும் வேணும். உபாஸனை என்று வரும்போதும் இப்படி நானா தினுஸாக உள்ள வைசித்ரியம் (விசித்ரத் தன்மை) வேண்டும். முடிவிலே ஸமாதி யோகம், வேறே கலப்பேயில்லாமல் ஒரே ஒரு உணர்வாக, ‘ஏகப் பேருணர்வாக’ என்பார்கள், அப்படி மனஸின் ஆட்டமே இல்லாமல் ஆகவேண்டுமென்றாலும், அது எங்கேயோ எப்போதோ எவருக்கோதான் லபிக்கிற ஸ்திதி. அந்த ஸ்திதிக்குப் போவதற்கே, அலை பாய்கிற இந்த மனஸை வைத்துக் கொண்டுதான் உபாஸனையை ஆரம்பிக்கும்போது அலை அலையாகப் பாய்ந்தாலும், பாய்கிறதெல்லாம் நம்மை ஸம்ஸாரத்தில் முழுக்கடிக்கிற அலைகளாக இல்லாமல், ஏதோ ஒரு தினுஸில் ஏதோ ஒரு அளவில் ஈச்வர ஸ்மரணத்தில் நனைப்பதாக இருக்கட்டும் என்றுதான் வைசித்ரிய ருசி கொண்ட மனஸுக்குப் பிடித்த மாதிரியே ஏக பரமேச்வரன் பல திவ்ய ரூபங்கள் எடுத்துக்கொண்டு பல விதமான பலன் தருவது; பூஜா பத்ததியையும் பல விதமாகக் கொடுத்து, ஒன்றுக்கு (ஒரு தெய்வத்துக்கு) வில்வம், ஒன்றுக்குத் துளஸி, ஒன்றுக்கு வெல்லச் சீடை, ஒன்றுக்குக் கொழுக்கட்டை என்று வைத்திருப்பது எல்லாம். இதுதான் பெரும்பாலான ஜனங்களுக்கு அதாவது ‘வழக்கு’ என்பது.
ஈச்வரனின் விளையாட்டில் இதற்கு ‘விலக்கு’ ம் கொஞ்சம் கொஞ்சம் உண்டு. சிலபேருக்கு இஷ்ட தெய்வம் என்று ஒன்று, அதனிடமே அத்யந்தமான பக்தி என்று ஏற்படுகிறது. விதவிதமாக தெய்வ பேதங்களைப் பூஜிக்க வேண்டுமென்று தோன்றாமல் இவர்களுக்கு இஷ்ட தெய்வத்திடமே முழு பக்தியுமாக இருக்கிறது. இன்னொன்றைப் பூஜிப்பதில்லை என்ற அநன்ய பக்தியோடு, ஏகாந்த பக்தியோடு ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு ஆராதிக்கிறார்கள். இவர்கள் ஏகமான பரமாத்ம சைதன்யத்தின் பரிபூர்ண விலாஸமாகவும் தங்கள் இஷ்ட தெய்வமே இருக்கிறது, அதுவே முழுமுதற் கடவுள் என்று கொண்டு எல்லாவிதமான பலன்களையும் அதனிடமே கோருகிறார்கள். அதை ஏதோ ஒரு குறிப்பிட்ட பலன் தருவதாக மட்டும் நிறுத்திவிடுவதில்லை. இப்படி முருக பக்தர்கள், தேவி பக்தர்கள், விஷ்ணு பக்தர்கள், அந்த விஷ்ணுவிலும் ஏதோ ஒரு அவதாரமான ராமனை மட்டும் தான் பக்தி பண்ணுபவர்கள், க்ருஷ்ணனை மட்டும்தான் பக்தி பண்ணுகிறவர்கள் என்று ஒரே மூர்த்தியை பிடித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். பூர்ண ப்ரஹ்ம சக்தியான பரமாத்மாவும் அந்த ஒரு மூர்த்தியின் மூலமே இந்த பக்தர்களுக்கு ஸகல விதமான பலன்களையும் அநுக்ரஹிக்கிறது.
ஆனால் இப்படி சிவோபாஸனைதான், அம்பாள் உபாஸனைதான், ராமனோ க்ருஷ்ணனோ எவரோ ஒருத்தருக்குத்தான் மனஸைப் பூர்ணமாகக் கொடுத்து பக்தி பண்ணுவது என்று இருக்கிறவர்கள்கூடப் பிள்ளையாரை மட்டும் தள்ளிவிட முடிவதில்லை. ‘சுக்லாம்பரதரம்’ குட்டிக்கொள்ளாமல் அவர்களும் இஷ்ட தெய்வ உபாஸனை பண்ண முடிவதில்லை. இஷ்ட தெய்வத்தைத் தவிர ஏனைய தெய்வங்களில் எதுவும் வேண்டாமென்று மற்ற தெய்வங்களை விட்டு விட்டாலும் பிள்ளையாரை மாத்திரம் அப்படி விடமுடிவதில்லை.
இப்படிப்பட்ட அநன்ய பக்திக்காரர்கள் குறைச்சல் தான். பொதுவாக பலவேறு தெய்வங்களையும் அது அது தருகிற பலன்களுக்காக வழிபடுவதாகத்தான் காணப்படுகிறது. ஒரு கோவிலுக்குப் போனால் எத்தனை ஸந்நிதி? ஒவ்வொரு ஸந்நிதிக்கும்தான் போய் தர்சனம் பண்ணி வணங்குகிறோம். சிவன் கோவிலில் உள்ள ஸந்நிதிகள் பெருமாள் கோவிலில் இருக்காது; அதே மாதிரி அங்கேயிருக்கிற ஸந்நதிகள் இங்கே இருக்காது. நாம் என்ன பண்ணுகிறோமென்றால் ஈச்வரன் கோவிலுக்குப்போய் தரிசனம் பண்ணினபிறகு பெருமாள் கோவிலுக்கும் போகிறோம். காஞ்சீபுரம் மாதிரிப் பல தெய்வங்களில் ஒவ்வொன்றையும் மூல மூர்த்தியாக வைத்துப் பல ஆலயங்கள் உள்ள ஊர்களில் நாம் காமாக்ஷி, ஏகாம்ரேச்வரர், வரதராஜா ஆகிய ஒவ்வொருவருடைய கோவில்களுக்கும், இன்னும் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கான குமரக் கோட்டம்,- சித்ரகுப்தனுக்குக் கோவிலிருக்கிறதா? ஸரி, அதற்கும் போய்- இப்படி எல்லா தெய்வங்களையும்தான் தர்சிக்கிறோம். எந்தக் கோவிலுக்குப் போனாலும் அங்கே இந்த விக்நேச்வரர் மட்டும் இல்லாமலிருக்கமாட்டார். பெருமாள் கோவிலானாலும் விஷ்வக்ஸேனர் என்ற பெயரில் நாமத்தைப் போட்டுக்கொண்டு வந்து நிற்பார்! நம்முடைய நமஸ்காரத்தை வாங்கிக்கொண்டு விடுவார்!