ஸ்வாமியிடம் ஸ்வாதீனம் கொண்ட ஸ்வாமிகள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அப்போதுதான் அவர் திருவாரூரிலிருந்த ஸுந்தரமூர்த்திகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவருக்கும் ஈச்வரனுக்கும் இருக்கப்பட்ட அத்யந்த உறவைப் பற்றிக் கேள்விப்படப் பட அவருக்கு ரொம்ப விசித்ரமாகவும் இருந்தது, அதிசயமாகவும் இருந்தது. அந்த ஸ்வாமிகள் (ஸுந்தரமூர்த்தி) ஊரிலுள்ள எல்லா ஸ்வாமிகள் மாதிரியும் இல்லாமல் ரொம்ப மாறுதலாக இருந்தார். ஸ்வாமிகள் என்றால் பொதுவாக ஒட்ட ஒட்டக் கிடந்துகொண்டு, ஒரு கோவணத்தைக் கட்டிக்கொண்டு, ‘பெண்ணாவது, பொன்னாவது?’ என்று இருப்பார்கள் என்றால் இவரானால் ஷோக் ஆஸாமி மாதிரி இருப்பதாகத் தெரிந்தது! குங்குமப் பொட்டும் ஜவ்வாதுப் பொட்டுமாக ஏக அலங்காரமாயிருப்பாராம்! அதோடு, கேட்டாலே ‘ஷாக்’ அடிக்கிற மாதிரி, போகப்படாத வீட்டுக்குப் போகிறவராம்! இருந்தாலும் ஈச்வரன் அவருக்கு ரொம்பவும் அத்யந்தமாம். “பொன் வேணும், பெண் வேணும்” என்று அவனையே இவர் கேட்டால் அவனும் உடனுக்குடனே அப்படியே கொடுக்கிறானாம்! போகப்படாத வீட்டுக்காரி இவர் கிட்டே கோபித்துக் கொண்டால், இவருக்காக ஈச்வரனும் அந்தப் போகப்படாத இடத்துக்கு நடையாக நடந்து தூது சொல்லி அவளுடைய கோபத்தைத் தீர்த்துவைத்து இவர் அங்கே மறுபடி போகும்படி ஸஹாயம் பண்ணுகிறானாம்! ஸ்வாதீனத்திலே இவர் ஈச்வரனையே எடுத்தெறிந்துகூடப் பேசுகிறாராம். இவர் பொய் ஸத்யம் பண்ணிக் கண் அவிந்து போனால், அதற்காக ஈச்வரனைத் திட்டுவாராம். ‘ஏனையா என் கண்ணைப் பறிச்சே! நீ நன்னா இருப்பியா? வாழ்ந்து போதீரே!1” என்பாராம். (… அதாவது ‘நீ நன்றாக வாழ்வாய்’ என்று சொல்லுகிற மாதிரி சொல்லும் போதே ‘நீ வாழ்வாயா?’ என்ற அபிப்ராயத்தைத் தெரிவிப்பது. ‘எனக்கு இத்தனை கஷ்டம் கொடுத்தியோன்னோ, நீ நன்னாயிரப்பா!’ என்றால் என்ன அர்த்தம்? இப்போதுங்கூட, ‘நீ வாழ்ந்தே!’ என்று சொல்லும்போது என்ன அர்த்தத்தில் சொல்கிறோம்?) இப்படி அந்த ஸ்வாமிகள் ஈச்வரனையே கடிந்து கொள்கிறாராம். ஈச்வரனும் உடனே கண்ணைக் கொடுக்கிறானாம். இவருக்கு ஏதோ திருட்டு போனால், ‘நீ இருந்து என்ன ப்ரயோஜனம்: எத்துக்கிருந்தீர்?2‘ என்று ஸ்வாமியை அதட்டுகிறாராம். உடனே ஸ்வாமி திருடர்களையே திரும்பிவந்து கொள்ளையடித்ததையெல்லாம் கொட்டிவிட்டுப் போகப் பண்ணுகிறாரம். மிரட்டி உருட்டியுங்கூட ஸ்வாமியிடம் காரியம் ஸாதித்துக் கொள்வதால் அவருக்கு ‘வன்றொண்டர்’ என்றே பேராம்! தொண்டர்களென்றால் அடங்கியொடுங்கிக் கிடப்பார்களென்றால் இவரோ வன்மையாகக் கண்டித்துப் பேசி யஜமானனிடம் காரியம் வாங்கிக்கொள்ளும் வன்தொண்டராயிருக்கிறார்! இவர் விசித்ரமான தொண்டராயிருக்கிறாரென்றால் ஸ்வாமியும் அதைவிட விசித்ரமாக இவர் சொல்கிறபடியெல்லாம் கேட்கிற இன்னொரு யதோக்தகாரியாக இருக்கிறார்! (என்றெல்லாம் ஸோமாசி மாறர் நினைத்தார்.)


1 “மீளாவடிமை” பதிகத்தின் அடிகள் “வாழ்ந்து போதீரே!” என்றே முடியும்.

2“கொடுகு வெஞ்சிலை” என்ற பதிகத்தின் ஒவ்வோர் அடியிலும் கேட்கும் கேள்வி.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஸோமாசி மாற நாயனார்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  நம் அறிவை மீறிய மஹான்களின் போக்கு
Next