தாம் பண்ணப்போகிற யஜ்ஞத்துக்குப் பரமேச்வரனை யார் மூலம் வரவழைக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருந்த ஸோமாசிமாறர் ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு அவரைப் பிடித்தே கார்யத்தை நடத்திக் கொள்ளலாமென்று தீர்மானம் பண்ணினார்.
ஆனால் அவரைப் பிடிப்பதும் அப்படி லேசான கார்யமாக இருந்துவிடவில்லை. ஏனென்றால் அவரைச் சுற்றி எப்போது பார்த்தாலும் சிவனடியார்களும், ஜனங்களுமாக ஜே, ஜே என்று கூட்டமாக இருக்கும். ராஜா மாதிரி ஒரு பெரிய தர்பார்-சிவ பக்தி தர்பார்-அவர் நடத்தி வந்தார்!ஆதி சைவரென்றும், சிவ ப்ராஹ்மணரென்றும் சொல்லும் அர்ச்சகர்கள் ஜாதியில் அவர் பிறந்திருந்தாலும், அவரை திருமுனைப்பாடி நாட்டின் சிற்றரசரே ஸ்வீகாரம் செய்து கொண்டு வளர்த்தார். அப்புறம் அவருக்கு மூவேந்தர்களுமே, அதிலும் சிறப்பாக சேர ராஜா, நெருங்கிய பக்தர்களாக இருந்தார்கள். மூவேந்தர்களும் புடைசூழக்கூட அவர் சில பாண்டி நாட்டு ஸ்தலங்களுக்குப் போயிருக்கிறார். ஆகையால் அவரும் ஒரு ராஜா மாதிரியே அலங்காராதிகளுடன் பரிவாரம் சூழ இருந்தார்.
‘யாரோ ஒரு ஏழை ப்ராம்மணனான தான் அவரை எப்படி நெருங்குவது? அவர் கவனத்தை எப்படிக் கவர்வது? என்று ஸோமாசி மாறர் யோசித்தார். ‘தம்மால் என்ன பெரிய காணிக்கை, ஸம்பாவனை ஸமர்ப்பித்து அவருடைய கவனத்தைப் பெறமுடியும்?’ என்று யோசனை பண்ணினார். சட்டென்று அவருக்கு ஒரு யுக்தி தோன்றிற்று.
அவர் அக்னிஹோத்ராதி கர்மாக்கள் எல்லாம் க்ரமப்படி செய்துவிட்டு மத்யான்னம் ஒரு மணிக்கு மேலே தான் போஜனம் பண்ணுவார். போஜனமென்றால் ஒன்றும் பஞ்ச பக்ஷ்ய பரமான்னமில்லை. “இவன் யார் பார்ப்பான்? பிடுங்கித் தின்கிறான்!” என்று எவரும் சொல்வதற்கு இடமில்லாமல், எத்தனை எளிமையாக ப்ராம்மணன் இருக்க வேண்டுமென்று சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறதோ அப்படி வாழ்க்கை நடத்தினவர் அவர். ஆனதினாலே யாருக்கும் எந்தத் தொந்தரவுமில்லாமல், தானம் தக்ஷிணை என்றுகூட யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், அவர் பாட்டுக்குப் பஞ்சாக்ஷரத்தை ஜபித்துக்கொண்டே ஆற்றங்கரையோடு போய், கேட்பாரில்லாமல் ஒதுக்குப் புறத்தில் முளைத்திருக்கிற கீரை முதலானதுகளைப் பறித்துக்கொண்டு வந்து பத்னியிடம் கொடுத்தே பாகம் (சமையல்) பண்ணி வைக்கச் சொல்வார். ஊரானைப் பிடுங்கித் தின்கிறதில்லை; ஊருக்கு ஒதுக்குப் புறத்துக் கீரையைத்தான் பிடுங்கித் தின்கிறது! அதனால் அவருக்கு இப்போது என்ன நினைவு வந்ததென்றால், ‘நாம் ஸமர்ப்பணம் பண்ணுவதற்கு வேறே பெரிய காணிக்கை இல்லாவிட்டால் என்ன? நம் ஆற்றங் கரையிலே எங்கேயுமில்லாத விசேஷமாக ரொம்ப உசந்த ஜாதி தூதுவிளங்கீரை (தூதுவளை அல்லது தூதுளை என்கிற கீரை) யதேஷ்டமாக விளைகிறதே! அது தேஹாரோக்யத்தோடு ஞானத்தையும் வ்ருத்தி பண்ணக்கூடியது என்று சொல்கிறார்களே! ஆகையினாலே பச்சுப் பச்சென்று அதை நித்யமும் பறித்தெடுத்துக்கொண்டு போய் ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் க்ருஹத்தில் சேர்ப்பித்து அவருடைய ஆஹாரத்தில் சேர்க்கும்படிப் பண்ணிவிட்டால், என்றைக்காவது ஒரு நாள் அவர், யார் நித்யமும் இப்படி கீரை கொண்டு வந்து தருகிறது?’ என்று கேட்டுத் தெரிந்து கொண்டு பேட்டி கொடுக்க மாட்டாரா?’ என்று எண்ணினார். தூதுவிளங்கீரை மூலமாக ஸூக்ஷ்மமாக ஒரு தூது அனுப்பி ஸுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் கவனத்தைக் கவர யுக்தி பண்ணிவிட்டார்!
யுக்தியாக மட்டும் பண்ணவில்லை, பக்தியோடுந்தான் பண்ணினார். ‘அவர் கீரையைக் கவனிக்காவிட்டால் கூடப் போகட்டும். அந்தப் புண்யாத்மா குக்ஷியில் நித்யமும் நம்முடைய நிவேதனம் போனாலே போதும். நாம் பாட்டுக்குக் quiet – ஆகக் கொடுத்துக் கொண்டேயிருப்போம். நடக்கிறது நடக்கட்டும்’ என்று முடிவு பண்ணினார்.
அந்த ப்ரகாரமே தினமும் ச்ரமத்தைப் பார்க்காமல் திருவாரூருக்குப் போய் தூதுவளை கொடுக்க ஆரம்பித்தார்.
ஸுந்தரமூர்த்தி பரவை நாச்சியார் வீட்டில் வாஸம் பண்ணிக்கொண்டிருந்தார். அங்கே வருகிறவர்களும் போகிறவர்களுமாக திருவிழா மாதிரியே எப்பவும் இருக்கும். அந்த அமர்க்களத்தில் ஸோமாசி மாறர் ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இருந்த பக்கமே போவதில்லை. அவர் பாட்டுக்கு ஓசைப் படாமல் சமையற்கட்டுக்குப் போய் பரிசாரகர்களிடம் கீரையைக் கொடுத்துவிட்டுப் போய் விடுவார். ‘யாரோ ப்ராம்மணர், இத்தனை அக்கறையாக ஒரு நாளைப் போலக்கொண்டு வந்து தருகிறாரே’ என்று பரவை நாச்சியார் பரிவாக நினைத்துக்கொண்டு அதை ஸுந்தரமூர்த்தியின் ஆஹாரத்தில் சேரும்படியாக ஏற்பாடு பண்ணிக்கொண்டிருந்தாள். ஆனாலும் அந்த ப்ராம்மணரை பற்றிப் பதியிடம் சொல்ல அவளுக்கு அவகாசம் கிடைக்கவில்லை.
பெரிய பங்க்தியாக சிவனடியார்களோடு சேர்ந்துதான் ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் போஜனம் பண்ணுவார். ஒன்று, போஜனம் மௌனமாக சிவத்யானத்தோடேயே பண்ணுவார். இல்லாவிட்டால் ஈச்வர மஹிமைகளை அடியார்களோடு பரிமாறிக்கொண்டே, தமக்குப் பரிமாறப்படும் அன்னத்தை புஜிப்பார். போஜனம் ஆன பிற்பாடும் நாம கீர்த்தனம், த்யானம், ஆலய தர்சனம், இவரே புதிது புதிதாகத் தேவாரம் பாடுவது என்று நடந்து வந்ததால் கீரையைப் பற்றி அவர் தனி கவனத்தோடு விசாரிக்க இடமேற்படவில்லை.
நாள் ஓடிக்கொண்டேயிருந்தது. ஸோமாசி மாறரும் மனந்தளராமல், கால்வலி பார்க்காமல் தினமும் கீரைக் கைங்கர்யம் பண்ணிக்கொண்டே வந்தார்.
அப்புறம் என்ன ஆச்சு என்றால், அவர் வருகிற வழியில் ஆற்றில் பெரிசாக வெள்ளம் வந்து விட்டது. ஸோமாசி மாறரால் அதைத் தாண்டி வர முடியவில்லை. ‘ஐயோ, இப்படி நம்முடைய அல்ப கைங்கர்யத்துக்கும் விக்னம் ஏற்பட்டுவிட்டதே!’ என்று துக்கப்பட்டார். துக்கப்பட்டு என்ன பண்ணுவது? நாலு, ஐந்து நாளுக்கு வெள்ளம் வடியவேயில்லை. ஆறாத குறையோடு ஸோமாசி மாறர் வீட்டோடேயே கிடந்தார்.
ஆனால் ஈச்வரன் இப்படி விக்னம் மாதிரிக் காட்டியதிலேயேதான் அவருடையே பிரச்னையைத் தீர்ப்பதற்கு வழி வைத்திருந்தான். இப்படி விளையாடுவதுதான் அவன் வழக்கம்!
அங்கே, திருவாரூரில், நாலஞ்சு நாள் சேர்ந்தாற் போல தூதுவளை போஜனத்தில் சேராததாலேயே ஸுந்தரமூர்த்தி குறிப்பாக அதைக் கவனித்துவிட்டார்!
அநேக ஸமாசாரங்கள் அவை நடக்கும்போது நம் கவனத்துக்கு விசேஷமாக வராது. ஆனால் நடக்காமல் நின்று போனால் சட்டென்று கவனித்து விடுவோம். நாம் இப்போது பேச்சிலேயே கவனமாக இருப்பதால் இங்கே காற்றோட்டாமாயிருக்கிறது என்பதை ஒரு விஷயமாக மனஸில் வாங்கிக்கொள்ளாமலே இருக்கிறோம். அதுவே இந்தக் கதவு, ஜன்னல் சட்டென்று சாத்திக்கொண்டு, புழுங்க ஆரம்பித்தால் அப்போதுதான், ‘ஓஹோ, இத்தனை நாழி காற்றோட்டமாக இருந்திருக்கிறது!’ என்று தெரிந்து கொள்வோம்.
அந்த மாதிரி, போஜனத்தில் தூதுவளை சேர்ந்துகொண்டிருக்கும் வரையில் வேறே சிவ ஸ்மரணம், சிவ கதை பேசுவது என்பதில் ஸுந்தரமூர்த்தி அதை மனஸில் வாங்கிக் கொள்ளாவிட்டாலும், இப்போது சேர்ந்தாற்போல சில நாட்கள் அது நின்று போனதும் ஆஹாரத்தில் என்னவோ வித்யாஸம், குறை இருக்கிற மாதிரித் தெரிந்தது.
விசாரித்ததில் எவரோ ப்ராமணர் எங்கேயிருந்தோ தினந்தினம் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்த கீரை நின்று போயிருப்பதைப் பரவை நாச்சியார் சொன்னாள்.
“ஐயோ, பாவமே! இப்படியொருத்தர் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் மெனக்கிட்டு கைங்கர்யம் செய்துகொண்டிருந்தாரா? இப்படிபட்ட உத்தமமான ஜீவனைத் தெரிந்துகொள்ளாமல் போய்விட்டேனே! அவர் மறுபடியும் வந்தால் என்னிடம் அனுப்பு. அவரை அவச்யம் பார்க்கவேண்டும். நம்மால் ஏதாவது ப்ரதி செய்ய முடியுமானால் செய்யவேண்டும்” என்று ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் சொன்னார்.
இவரைப் பார்ப்போமா, பார்ப்போமா என்று அவர் தவித்துக்கொண்டிருந்த மாதிரியே அவரைப் பார்ப்போமா என்று இவர் தவிக்க ஆரம்பித்து விட்டார்! இதுதான் ஈச்வரன் செய்யும் விளையாட்டு!
வெள்ளம் வடிந்தது.
‘அப்பாடா மறுபடி கைங்கர்யம் ஆரம்பிக்கலாம்’ என்று ஸோமாசி மாறர் ரொம்ப ஸந்தோஷமாகக் கூடுதலாகவே கீரை பறித்துக்கொண்டு வந்து சேர்ந்தார்.
ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அவரைப் பார்க்க ப்ரியப்படுகிறாரென்று தெரிந்ததும் ஸந்தோஷத்தில் உச்சிக்கே போய்விட்டார். “மஹா பெரியவர், ஈச்வரனோடு நேரே பேசிப் பழகுபவரின் ஸந்திப்புக் கிடைக்கிறதே!” என்று ஹ்ருதயம் பட், பட்டென்று அடித்துக்கொள்ள அவருக்கு முன்னாடிபோய் விழுந்தார்.
ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்குக் கீரைக் கைங்கர்யக்காரரைப் பார்த்ததில் ரொம்பவும் ஸந்தோஷம் ஏற்பட்டது. “நீர் யார் ஸ்வாமி? கஷ்டம் பார்க்காமல் நித்யம் தூதுவளை கொண்டுவந்து கொடுத்துண்டு இருக்கேளே? என்னாலே உமக்கு ஏதாவது ஆகணுமா?” என்று கேட்டார்.
இந்த ஒன்றுக்காகத்தான் ஸோமாசிமாறர் காத்துக் கொண்டிருந்தாரென்றாலும், தம்முடைய பெரிய ஆசையை எல்லார் எதிரிலும் தெரிவிக்க வெட்கப்பட்டுக்கொண்டு, “ஆமாம், தங்களால் ஒரு உபகாரம் நடக்கணும். அதை ஏகாந்தத்தில் தெரிவிச்சுக்கணும்” என்றார்.
இப்படி அவர் சொன்னவுடனேயே ரொம்பப் பெரிசாக எதற்கோ அவர் அடி போடுகிறாரென்று ஸுந்தரமூர்த்திக்குப் புரிந்துவிட்டது. ‘என்னதான் ஈச்வரன் தனக்கு எந்த அபீஷ்டமானாலும் பூர்த்தி பண்ணுகிறவனாக இருந்தாலும், அதற்காகத் தன்னிடம் எவர் வேண்டுமானாலும் எது வேண்டுமானால் நடத்தித் தரும்படி கேட்டால் அவனிடம் சிபார்சு பண்ணுவதா?’ என்று அவர் நினைத்து, “பிராம்மணா! என்னாலே எதையும் முடித்துத் தரமுடியுமென்று நினைக்காதீர். என்னால் முடிந்ததைச் சொன்னால் செய்கிறேன்” என்றார்.
“தங்களால் முடியாததே இல்லை” என்று ஸோமாசி மாறர் பிடிவாதம் பிடித்து, ஏகாந்தத்தில் ஸுந்தரமூர்த்தியிடம் விஷயத்தைச் சொன்னார்.
“பரமேச்வரன் நேரிலே வந்து உம்மிடம் ஹவிஸ் வாங்கிக் கொள்வதென்பது ஸாமான்ய விஷயமில்லை. என்னால் அதை முடித்துத் தரமுடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் உம்ம கீரை இந்த உடம்பில் நிறையச் சேர்ந்து விட்டதால், என்னால் முடிந்தது, சொல்லிப் பார்க்கிறேன். செய்கிறதும் செய்யாததும் ஸ்வாமி இஷ்டம். தப்பாக நினைச்சுக்கப்படாது” என்று ஸுந்தரர் முடித்துவிட்டார்.