ப்ரம்மமாயினும் நமஸ்காரத்துக்குரியவரே! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

த்ரிமூர்த்திகள் த்ரிமூர்த்திகளாக மட்டும் தங்கள் தொழில்களைக் குறுக்கிக் கொண்டுள்ளபோது அவர்களுக்கு நமஸ்காரம் பண்ண நமக்குக் காரணமில்லையென்றால், ப்ரஹ்மமோ குறுகலே இல்லாமல் ஒரே விரிவாக, ஒரே பெரிசாக இருந்தாலும் அது எதற்கும் – மனஸ், வாக்கு ஆகிய எதற்குமே – எட்டாமலிருப்பதால் நாம் நமஸ்காரம் பண்ணினாலும் அது அதை எட்டாது. ப்ரஹ்மம் நிஷ்க்ரியமாக ஒன்றுமே செய்யாமலிருக்கும்போது நம்முடைய நமஸ்காரத்தை மட்டும் ‘ரிஸீவ்’ பண்ணிக்கொள்ளுமா என்ன? ஆகையால் அதை நமஸ்கரிப்பதில் அர்த்தமில்லையென்று பார்த்தோம். த்ரிமூர்த்திகளை நமஸ்கரிக்கும் தேவை நமக்கில்லை; ப்ரஹ்மத்துக்கு நம் நமஸ்காரம் தேவையில்லை!

அப்போது, குரு ப்ரஹ்மமென்றால் அவரை ஏன் நமஸ்காரம் பண்ணணும்?

ஸரி, குரு ஒரு விதத்தில் த்ரிமூர்த்திகளாக இருந்தாலும் அவருக்கு நாம் நமஸ்காரம் பண்ணவும் நிறைய நியாயமிருக்கிறதென்று பார்த்தோமல்லவா? அதேபோல இங்கேயும் இருக்குமா?

ஆமாம். அப்படித்தான்.

எப்படியென்றால் – நிதர்சனமாகவேதான் தெரிகிறதே! குரு ப்ரஹ்மமானாலும் நமக்கு எட்டாமலா இருக்கிறார்? எந்தக் காரியமுமில்லை, எதையும் தெரிந்து கொள்வதில்லை, ஏற்றுக்கொள்ளுவதுமில்லை, தள்ளுவதுமில்லை என்றெல்லாம் நிஷ்க்ரியமாகவா அவர் இருக்கிறார்? எட்டாத அந்த நிஷ்க்ரியமேதானே நமக்கு எட்டியே ஆகவேண்டும் என்று இப்படி ரூபம் எடுத்துக்கொண்டு இந்த க்ரியாலோகத்தில் இத்தனை செய்கிறது?

அதனால் ப்ரஹ்மமாகவே இருக்கிற ப்ரஹ்மத்துக்கு நமஸ்காரம் வேண்டாம்தான் என்றாலும், குருவாக இருக்கிற ப்ரஹ்மத்துக்கு – ஸரியாகச் சொன்னால், அதே ப்ரஹ்மம் குருவாக வந்துள்ளபோது – அனந்த கோடி நமஸ்காரமும் பண்ணத்தான் வேண்டும். ப்ரஹ்மமாக இருப்பதோடு அப்படியே ஹாய்யாக இருந்துவிடமால் குருவாகி இப்படி நம்முடைய இத்தனை கோணாமாணாவையும் நேராக்க வேண்டும் என்று வந்திருக்கும் கருணைக்கு நமஸ்காரம் பண்ணிக்கொண்டேயிருக்க வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஆசார்யாள் அளிக்கும் ஆசார்ய லக்ஷணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  நமஸ்காரமே செல்வம்:ஆசார்யாள் உணர்த்துவது
Next