அர்த்த நிர்ணயம் எப்படி ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதத்தின் வாக்கியம் ஒன்று இருக்கிறது; அத்தியாயம் ஒன்று இருக்கிறது. அதிலே என்ன அபிப்ராயம் சொல்லி இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? எந்தத் தீர்மானத்தை வலியுறுத்த அது ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்ன செய்வது?

வேதத்தை அர்த்தம் செய்வதற்குச் சில விதிகள் இருக்கின்றன. அவற்றை மீமாம்ஸா சாஸ்திரம் சொல்கிறது. வேதம் என்கிற சட்டத்திற்கு ‘லா ஆஃப் இண்டர்ப்ரடேஷன்’ மீமாம்ஸைதான். சர்க்காரில் அநேகச் சட்டங்களைப் பண்ணும்போது, அவற்றின் அர்த்தத்தைப் பற்றியே சந்தேகம், குழறுபடி உண்டாகும். அப்போது அந்த சட்டத்தை வியாக்யானம் பண்ண இன்னொரு சட்டம் வகுப்பார்கள். அதுதான் Law of Interpretation. வேதத்துக்கு இப்படியிருப்பது மீமாம்ஸை. அதில் வேதத்தை அர்த்தம் செய்து கொள்ளச் சில வழிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

உபக்ரம-உபஸம்ஹாரம், அப்யாஸம், அபூர்வதா, பலம், அர்த்தவாதம், உபபத்தி என்று ஆறு வழிகளைக் காட்டி இவற்றால் வேதமந்திரங்களின் உத்தேசத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று மீமாம்ஸை சொல்கிறது.

ஆரம்பமும் முடிவும் ஒரே விஷயமாக இருந்தால் அதுதான் உத்தேசம். இது இரண்டுக்கும் நடுவில் ஆயிரம் ஸமாசாரம் சொல்லியிருந்தாலும் இந்த ஆயிரம் ஸமாசாரமும் அந்த ஒரே உத்தேசத்தைத் தீர்மானிக்கத்தான் வந்திருக்கின்றன என்று ஸந்தேஹம் இல்லாமல் சொல்லிவிடலாம். இதற்குத் தான் ‘உபக்ரம-உபஸம்ஹாரம்’ என்று பெயர். ‘உபக்ரமம்’ என்றால் தொடக்கம்; ‘உபஸம்ஹாரம்’ என்றால் முடிவு.

ஒரு உபந்நியாசத்திலோ ஒரு கட்டுரையிலோ ஒரே விஷயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால், அப்படிச் சொல்லப்படுகிற விஷயத்தைத் தீர்மானம் பண்ணுவதற்காகத்தான் அந்த உபந்நியாசம், அல்லது கட்டுரை என்று தீர்மானித்து விடலாம். பிரசங்கம் எதைப்பற்றி என்று தெரியாது; இன்விடேஷனைப் பார்க்கவில்லை; நோட்டீஸ் போடவில்லை. ஆரம்பித்துப் பதினைந்து நிமிஷம் கழித்துத்தான் நாம் வந்தோம். அந்தப் பிரஸங்கத்தின் நடுவில் பிரஸங்கி அநேக ஸமாசாரங்களைச் சொல்கிறார். ஆனாலும் எது திருப்பித் திருப்பிச் சொல்லப்படுகிறதோ அதுதான் அந்தப் பிரஸங்கத்தின் தீர்மானம் என்று முடிவு செய்யலாம். ஒன்றை அடிக்கடி திருப்பித் திருப்பிச் சொல்வது, அல்லது செய்வதுதான் ‘அப்யாஸம்’. ஏதாவது ஒன்றை மனனம் பண்ண வேண்டுமானால் திருப்பித் திருப்பி உருப்போடுகிறோம். திருப்பித் திருப்பி தண்டால் முதலியன போடுகிறார்கள்; அது தேகாப்பியாஸம். அப்படி ஒரு விஷயத்தைத் தீர்மானம் பண்ணுவதற்கு உபயோகப்படுவது ‘அப்யாஸம்’. திருப்பித் திருப்பிச் சொல்லப்படும் விஷயந்தான் அதன் முடிவான தீர்மானம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொன்று ‘அபூர்வதா’. ஒரு பிரஸங்கத் தொடர் முந்தாநாள் கேட்டிருக்கிறோம்; நேற்று கேட்டோம்; இன்றும் கேட்கிறோம். நேற்று, நேற்றுக்கு முந்தினநாள் சொன்ன விஷயங்களை இன்றைக்கும் சொல்லலாம். இருந்தாலும் இதுவரைக்கும் சொல்லாத சமாசாரம் இன்றைக்கு ஏதாவது சொன்னால் அதுதான் இன்றைய பேச்சின் முக்கியமான உத்தேசம். இதுவரைக்கும் சொல்லாத ஒன்றை இன்றைக்கு அதிகப்படியாகச் சொன்னால் அதிகப்படியாகச் சொல்கிற புது விஷயந்தான் இன்றைய பிரசங்கத்தின் விஷயம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். நடுவில் என்ன என்ன சமாசாரங்கள் சொன்னாலும் அவை எல்லாம் இந்த ஒன்றுக்கு அநுகுணமானவையே. இப்படி ஒரு விஷயத்தைத் தீர்மானம் பண்ணுவது ‘அபூர்வதா’- புதிதாகச் சொல்லப்படும் விஷயம். பூர்வத்தில் வராதது அபூர்வதா.

இப்படியேதான் ஒரு புஸ்தகத்தில் அநேக விஷயங்கள் சொல்லியிருந்தாலும் எதற்குப் பலன் சொல்லியிருக்கிறதோ, ‘இப்படிச் செய்தால் இன்ன பலன் தரும்’ என்று சொல்லியிருக்கிறதோ அதுதான் அந்த புஸ்தகத்தின் தீர்மானம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குத்தான் ‘பலம்’ என்று பெயர்.

அநேக சமாசாரங்களைச் சொல்லிக் கொண்டு வருகிறோம். நடுவில் ஒரு கதை சொல்லி ஒன்றைப் பற்றி ஸ்தோத்திரம் பண்ணுகிறோம். எதைப்பற்றி ஸ்தோத்திரம் பண்ணுகிறோமோ அந்த விஷயந்தான் பிரதானம். அதைச் சொல்வதற்காகத்தான் கதை யெல்லாம் சொன்னது என்று புரிந்து கொண்டு விடலாம். கதைகளை ஆதாரமாகச் சொல்லி ஒன்றை ஸ்தோத்திரம் பண்ணுவதற்கு ‘அர்த்த வாதம்’ என்று பெயர். இதன் மூலமும் தீர்மானத்தைக் கண்டுபிடித்து விடலாம்.

ஒன்றைச் சொல்லி அதற்குக் காரண நிரூபணம், பொருத்தம் முதலியவை விளக்கப்பட்டிருந்தால் அந்த விஷயந்தான் முக்கியமான உத்தேசம். இந்த முறைக்கு ‘உபபத்தி’ என்று பெயர்.

உபக்ரமோபஸம்ஹாரௌ அப்யாஸோ (அ)பூர்வதா பலம் |

அர்த்தவாதோபபத்தீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணயே ||

என்று இந்த ஆறு விதமான லிங்கங்களினால் ஒன்றைத் தீர்மானம் செய்து கொள்ளலாம் என்று மீமாம்ஸா சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இவற்றுக்கு தாத்பர்ய லிங்கம் என்று பெயர்.

சம்ஸ்கிருதத்தில் ‘லிங்கம்’ என்றால் அடையாளம் என்பது பொருள். ஆரம்பமும் முடிவும் சொல்லமுடியாத பரமாத்ம தத்துவத்துக்கும், நீள உருண்டையாக இருக்கிற பிரபஞ்சத்துக்கும் அடையாளமாக இருப்பதுதான் கோவில்களில் உள்ள லிங்கம். லிங்கத்தைக் குறி என்றும் சொல்லலாம். குறிப்பு என்றும் சொல்வது உண்டு. ஒரு உபந்நியாஸமோ, ஒரு புஸ்தகமோ எந்த தீர்மானத்தைச் சொல்கிறது, எந்த முடிவை வற்புறுத்துகிறது என்பதை இந்த ஆறுவிதமான குறிப்புகளை வைத்துக் கொண்டே நாம் தீர்மானம் பண்ணிவிடலாம்.

வேதத்தில் சொல்லப்பட்ட ஒரு வாக்கியமோ ஒரு அத்தியாயமோ எந்த விஷயத்தை தீர்மானிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க இந்த ஆறு தாத்பர்ய லிங்கங்களைக் கொண்டே, ஆறு விதமான குறிப்புகளைக்கொண்டே தீர்மானம் செய்து கொள் என்று சொல்கிறது மீமாம்ஸா நியாயம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is மீமாம்ஸையும் ஆதிசங்கரரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மீமாம்ஸைக் கொள்கைகள்
Next