கல்வெட்டும் செப்பேடும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

பழைய காலத்தில் தர்மசாஸனங்களெல்லாம் கோயில் சுவர்களில் கல்லில் வெட்டப்பட்டிருக்கின்றன. தர்மங்களைப் பதிவு செய்யும் ஸப் ரிஜிஸ்திரார் ஆபீஸ் பழைய நாளில் கோயில்தான்! திருவாங்கூர் ஸம்ஸ்தானத்து ராஜ்யாதிகாரிகளில் திருமந்திர ஓலை என்பவன் ஒர் உத்தியோகஸ்தன். ஸமீப காலம் வரையில் அந்த ராஜ்யத்தில் இந்த உத்யோகம் இருந்தது. பூர்வத்தில் தமிழ்நாட்டில் எல்லா அரசர்களிடமும் இப்படியொரு அதிகாரி இருந்தான். இந்தக் காலத்தில் ‘பிரைவேட் ஸெகரெட்டரி’ என்று சொல்கிறார்களே, அந்த மாதிரி, அவன் அரசன் எது சொன்னாலும் அதை ஓலையில் எழுதிக் கொள்ளவேண்டும். பின்பு அதை யார் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்ப வேண்டும். அந்தக் காலத்தில் யார் எந்த தர்மம் பண்ணினாலும், அதை மஹாராஜாவுக்குத் தெரிவிக்கவேண்டும். அவன் அதை ஒத்துக் கொண்டு ஆக்ஞை பண்ணுவான். அந்த ஆக்ஞையைத் திருமந்திர ஓலைக்காரன் எழுதி அனுப்புவான். அப்படி எழுதிக் கடைசியில், “கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளுவதாகவும்” என்று முடிப்பான். அந்த ஆக்ஞை எந்த ஊரில் தர்மம் செய்யப்படுகிறதோ அந்த ஊர் ஸபையாருக்கு அனுப்பப்படும். அவர்கள் அதைக் கோயில் சுவரில் வெட்டச் செய்வார்கள். இதுதான் ‘கல்லில் வெட்டிக் கொள்வது’ என்பது. அநேகக் கோயில்களிலுள்ள சிலாசாஸனங்கள் இவைதான்.

‘செம்பில் வெட்டிக் கொள்வது’ என்பது தாமிர சாஸனமாக செப்பேடுகளில் எழுதி, ஒரு ஏட்டுக்கு மேல் போனால் ஒட்டை பண்ணி வளையம் போட்டுக் கோத்து வைப்பதாகும். இதற்கும் உள்ளூர் ஸபையார் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட செப்பேடுகளும் கோவில்களிலேயே பாதுகாப்பாக பூமிக்கு அடியிலுள்ள “க்ஷேமம்” என்கிற (க்ஷேமம் என்றால் பாதுகாப்பு என்றுதானே அர்த்தம்?) இடத்தில் வைக்கப்படும். தேச வாழ்வே ஈச்வரன் கையில் ஒப்பிக்கப்பட்ட, ஆலயம் என்பதே ஒரு நாட்டின் உயிர்நிலையாகக் கருதப்பட்டு வந்ததால், இப்படி அதுவே ரிஜிஸ்திரார் ஆபீஸ், எபிக்ராஃபி ஆபீஸ் எல்லாமாக இருந்தது! அந்த விஷயம் இருக்கட்டும்.

ஊர் தோறும் இருந்த ஸபை விஷயத்துக்கு வருகிறேன்.

ஒவ்வொரு ஊரிலும் பிராம்மணர்கள் அங்கம் வஹிப்பதாக இந்த “ஸபை” என்பது இருந்தது. அதில் வேதமும் மந்திரப் பிராம்மணமும் தெரிந்தவன் அங்கத்தினனாகலாம். அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் உண்டு. இன்ன இன்ன குற்றம் செய்தவர்களும் அவர்களுடைய பந்துக்களும் ஸபைக்கு அங்கத்தினர் ஆகக்கூடாது என்ற நியதியும் உண்டு. அங்கத்தினராவதற்குப் போட்டி போடும் ஒவ்வொருவர் பெயரையும் ஓலையில் எழுதிக் குடத்தில் போட்டு ஒரு குழந்தையைக் கொண்டு எடுக்கச் சொல்லுவது வழக்கம். அப்படி எடுத்த ஓலையில் உள்ள பெயருடையவர் ஸபைக்கு அங்கத்தினராவர். உத்தரமேருர் என்னும் ஊரில் உள்ள சிலாசாஸனத்தில் இந்த விஷயங்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

அந்த ஸபையினருக்குள் பல பிரிவுகள் உண்டு. நீருக்காக ஒரு பிரிவு, வரி போட ஒரு பிரிவு முதலிய பல பிரிவுகள் உண்டு. தர்மத்துக்கு நிலம் கொடுத்தாலும், பணம் கொடுத்தாலும், மாடு ஆடுகளைக் கோயில்களுக்கு விட்டாலும், தீபம் போடுவதற்காக ஏற்பாடு செய்தாலும் இப்படி எதுவானாலும் அந்த ஸபையினர் மூலமாக விடவேண்டும். அவர்கள் அதை அங்கீகரிப்பார்கள். அந்த தர்மசாஸனத்தில் ‘இங்ஙனம் ஸபையோம்’ என்று அவர்கள் கையெழுத்து போடுவார்கள். அப்படி உள்ள கையெழுத்துக்களால் பல அங்கத்தினருடைய பெயர்கள் இப்பொழுது தெரியவருகின்றன. அவற்றிலிருந்து ‘ஷட்கர்மநிரதன்’ என்றும் ‘சடங்கவி’ என்றும் பிராம்மணர்களுக்கு பட்டம் கொடுக்கப்பட்டிருந்தது என்று தெரியவருகிறது. ‘சடங்கவி’ என்பது ‘ஷடங்கவித்’ என்பதன் சிதைவாகும். ஷட்+அங்கம் +வித் – அதாவது “ஆறு அங்கங்களை அறிந்தவன்” என்பது அதன் அர்த்தம். அந்த பிராம்மணர்கள் ஆறு அங்கங்களையும் அறிந்தவர்கள் என்று தெரியவருகிறது. இப்படி நம் நாட்டின் சின்ன சின்ன ஊர்களில் கூட எத்தனை ஷடங்கவித்துக்கள் இருந்திருக்கிறார்கள் என்று பழைய சாஸனங்களிலிருந்து தெரிகிறது. இவர்கள் முக்கியமாக வைதிக கர்மாநுஷ்டானம் செய்தவர்கள்தானே? இதனால் தான் வைதிக கர்மாக்களுக்கே “சடங்கு” என்று சொல்லும் வந்தது. ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்குப் பெண் கொடுக்க வந்தவருக்கு ‘சடங்கவி சிவாசாரியார்’ என்றே பெயர் சொல்லியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஷடங்கங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஆறு அங்கங்கள்
Next