அந்த ஆறு அங்கங்களாவன: சிக்ஷை (எழுத்திலக்கணம்) , வியாகரணம் (சொல்லிலக்கணம்) , நிருக்தம் (நிகண்டு) , கல்பம் (கர்மாநுஷ்டான முறை) , சந்தஸ் (பாவிலக்கணம்) , ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பவை. பிராம்மணன் வேதங்களையும் இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் வேதாத்யயனம் செய்யவேண்டும். அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் பொருட்டு, இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேத புருஷனுக்கு சிக்ஷை மூக்கு; வியாகரணம் முகம் அதாவது வாய் (வியாகரணப்படி ஒன்றைச் சொல்ல முடியாவிட்டால் உளற வேண்டும்) ; கல்பம் கை; நிருக்தம் காது; சந்தஸ் பாதம்; ஜ்யோதிஷம் கண்; ஜோஸ்யம் என்பது ஜ்யோதிஷத்தையே ஆகும்.
ஏன் இப்படி ஒவ்வொரு சாஸ்திரத்தை ஒவ்வொரு அவயமாகச் சொல்லியிருக்கிறது என்பதை அந்தந்த சாஸ்திரத்தைப் பற்றிச் சொல்லும்போது பார்க்கலாம்! பொருத்தமாகத்தான் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்.
முதலில் ‘சிக்ஷை’யில் ஆரம்பிக்கலாம்.