நடைமுறையில் நற்கர்மத்தின் பயன் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இதையே திருப்பிவைத்தும் கேட்கலாம்: “கர்மாப்படி, — ஜன்மாந்தரக் கடன் என்றுகூடச் சொல்வதுண்டே, அப்படி — நாம் ஒருத்தனுக்கு ஒரு உபகாரம் பண்ணியே அதனால் அவனுடைய கஷ்டம் நிவ்ருத்தியாகவேண்டும் என்றும் ஏன் இருக்கக்கூடாது? இந்த லோகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பிறத்தியாரால் எத்தனையோ உபகாரம் தேவையாகத்தான் இருக்கிறது. யாருடைய ஒத்தாசையும் இல்லாமல் எவனொருத்தனும் வாழ்க்கை நடத்திவிட முடியாது என்றே பார்க்கிறோம். பல பேர் செய்துகொள்ளும் பரஸ்பர உதவியால்தான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நடந்துகொண்டு போகிறது. சிலது ஃபெயில் ஆகிறது என்றாலும் பலது ஸரியாக நிறைவேறவும் செய்வதால்தான் லோக வாழ்க்கை நடந்துகொண்டிருக்கிறது. அதனால் ஒரே ‘பெஸ்ஸிமிஸ’மாக (நல்லதே நடக்காது என்ற அழுமூஞ்சி ஸித்தாந்தமாக), அதோடு கொஞ்சங்கூட அன்போ, தயையோ இல்லாமல், ‘யார் வேணா என்ன வேணா கஷ்டப்பட்டுப் போகட்டும்! நமக்கென்ன ஆச்சுன்னு சும்மாயிரு’ என்றால் எப்படி? என்று கேட்கலாம்.

இதுவும் நியாயந்தான். அதோடுகூட, நாம் உள்ள நடைமுறை உலகத்தில், நடைமுறையில் நமக்குள்ள மனநிலையில், நாம் கெட்ட கார்யங்களில் போகாமலிருப்பதற்கு வழி ஏதாவது நல்ல கார்யங்களில் ஈடுபட்டுக்கொண்டேயிருப்பதுதான். எந்த நல்ல கார்யத்திலும் கெட்டது வரலாமானாலும், சாஸ்த்ரப்படியும், பெரியவர்கள் வழி காட்டியுள்ளபடியும், நம்முடைய மனஸ்ஸாக்ஷிக்குக் கொஞ்சம்கூட உறுத்தாதபடியும், ‘மொத்தத்தில் நல்லது’ என்று தெரிகிற கார்யங்களில் — கார்யத்தில் கெடுதல் ஏதாவது சேர்ந்தாலும்கூட, நம்முடைய உத்தேசம் கெட்டதேயில்லாமல் நல்லதாக இருக்கிற கார்யங்களில் — ஈடுபட்டு ஈடுபட்டுத்தான் பழைய கெட்ட கர்மா பாக்கிகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படிப் பணிகள் செய்வதில் வாஸ்தவமாகவே நாம் பிறத்தியாருக்கும், பிறத்தியார் நமக்கும் அநேக நல்லது பண்ணவும் முடியுந்தான். ஒத்துக்கொள்கிறேன் [சிரித்தபடி] ஒத்துக்கொள்வதோடு இத்தனை நாழி சொன்ன மாதிரி, சும்மாயிருந்துவிடமாட்டேன்! உங்களையும் சும்மாயிருக்க விடமாட்டேன்! ‘இதைப் பண்ணுங்கோ, அதைப் பண்ணுங்கோ!’ என்று ஓயாமல் உங்களுக்கு ஏதாவது கார்யத்தைக் கொடுத்து உபத்ரவம் பண்ணிக்கொண்டேதான் இருப்பேன்! ‘ஒரு நல்லதும் பண்ணவேண்டியதில்லை; சும்மாயிருக்கிறதுதான் பெரிய உபகாரம்’ என்று நான் விஸ்தாரம் பண்ணிக் கொண்டு போனதைப் பார்த்துவிட்டு யாராவது, ‘அப்பாடா! இனிமேலே இவர் வேத ரக்ஷணம், பிடி அரிசி, ஆத்திக்கீரை*, கும்பாபிஷேகம், குளம் வெட்டுவது என்று எதையாவது சொல்லி ஹிம்ஸை பண்ணமாட்டார் என்று நினைத்திருந்தால் நன்றாக ஏமாந்துதான் போவீர்கள்! இனி மேலேயும் இப்படிச் சொல்லி, இன்னும் புதிசு புதிசாக ஏதாவது சேர்த்துச் சொல்லி, உபத்ரவம் பண்ணிக்கொண்டு தானிருப்பேன்!

ஒன்றும் செய்யாமல், சொல்லாமல் இருக்கிற உபகாரத்தைச் சொல்லவே அவதாரம் பண்ணினவரும், ‘சாஸ்த்ரப் படி பண்ணு, பரோபகாரம் பண்ணு; பக்தி பண்ணு; பஞ்சாயதன பூஜை பண்ணு; ச்ரவண – மனன – நிதித்யாஸனம் பண்ணு’ என்றும் அநேகம் ‘பண்ணு’களைச் சொல்லிக் கொண்டேயிருந்தவர்தான்.


* பசுக்களுக்கென்று அகத்தி பயிரிடும் திட்டத்தை ஸ்ரீ சரணர்கள் வலியுறுத்துவது வழக்கம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is எதுவும் செய்யாமலிருப்பதற்கான அவதாரம்!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  செயலற்றுப் போக வழியாகவே செயல்களும்!
Next