வேண்டுதலும் வரமும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

தக்ஷிணாமூர்த்தி ஆலமரத்தடியில் கருணாகுலமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். ‘ஜனங்களால் இங்கே வர முடியவில்லை. வரவேண்டும் என்று தோன்றக்கூடவில்லை. ஆனாலும் குழந்தைகள். நாமேதான் போய் நல்லதைச் சொல்லவேண்டும். ஆனால் தேவர்கள் மநுஷ்யர்களைப் போல அப்படி விஷயம் தெரியாதவர்கள் அல்ல. அவர்களுக்காக இவர்கள் வந்து சொல்லத்தான் வேண்டும். அதுதான் க்ரமம். ஜனங்களின் கர்மாநுஷ்டானம் குறைந்து போனதால் இவர்களுக்குத்தான் ஆஹுதி முதலானதுகள் நஷ்டப்படுகின்றன. அதனால் தேவர்கள் வந்து சொல்லவேண்டியது தான்; அப்புறந்தான் அவதரிக்க வேண்டும்’ என்று காத்துக் கொண்டிருந்தார்.

தேவர்களும் தப்புப் பண்ணுவார்கள். அதற்காக அவர்கள் கஷ்டப்படவேண்டிய காலம் வரும். ரொம்பவும் கஷ்டம் ஜாஸ்தியாகும்போது அவர்களுக்கு அடக்க ஒடுக்கம் ஏற்பட்டு ஈச்வரனிடம் ப்ரார்த்தித்துக்கொள்வார்கள். ஈச்வரனும் அவதாரம் பண்ணியோ வேறு விதத்திலோ கஷ்ட நிவாரணம் அளிப்பார்.

இப்போதும் அப்படி ஏற்பட்டது. தேவர்கள் கைலாஸத்திற்குப் போய் வட வ்ருக்ஷமூலத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த சம்பு மூர்த்தியிடம் ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டார்கள்.

லோகம் பூராவிலும் மத ஸம்ப்ரதாயமும் தத்வ சாஸ்த்ரமும் ரொம்பவும் குழறுபடியாகிவிட்டதைப் பார்த்து நாரதருக்குத்தான் முதலில் மனஸ் ரொம்பவும் ஸங்கடப்பட்டது; அவர் தம்முடைய பிதாவான ப்ரம்மாவிடம் போய்க் குறை தெரிவித்துக் கொண்டார்; அப்புறம் ப்ரம்மா ஸகல தேவர்களையும் அழைத்துக்கொண்டு கைலாஸத்திற்குப் போனார் என்று ஒரு ‘சங்கர விஜய’த்தில் இருக்கிறது.

லோகத்தில் ‘ச்ருத்யாசாரம்’ நசித்துப்போய் ‘மித்யாசாரம்’ வ்ருத்தியாகிவிட்டது என்று தேவர்களெல்லாம் பரமேச்வரனிடம் முறையிட்டுக்கொண்டார்கள் என்று அதில் இருக்கிறது:

ச்ருத்யாசாரம் பரித்யஜ்ய மித்யாசாரம் ஸமாச்ரிதா :

ச்ருத்யாசாரம் என்றால் வேத வழி, மித்யாசாரம் என்றால் பொய்யொழுக்கங்கள், அதாவது ஒழுக்கம் மாதிரி இருந்தாலும் வாஸ்தவத்தில் ஒழுங்கைக் கெடுக்கும் வழக்கங்கள்.

“ஒரு பக்கத்திலேயானால் பௌத்தர் முதலிய அவைதிக மதஸ்தர்கள் வேத நிந்தனை பண்ணி, கர்மாநுஷ்டானங்களையெல்லாம் கண்டனம் செய்தும், வர்ணாச்ரம ஒழுங்குகளைக் குலைத்தும் வருகிறார்கள். யஜ்ஞ பூமியாயிருந்த பாரத வர்ஷத்து ஜனங்கள் ‘யாகம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே காதைப் பொத்திக்கொள்கிற மாதிரியாகப் பண்ணியிருக்கிறார்கள். இன்னொரு பக்கத்திலோ சைவர், வைஷ்ணவரைப் போல வைதிக தெய்வங்களை உபாஸிப்பவர்களும் வைதிகமான உபாஸனையை விட்டுவிட்டு லிங்க முத்ரை, சக்ர முத்ரை என்றெல்லாம் சூடு போட்டுக்கொள்கிறார்கள். இன்னும் மிஞ்சிப்போய் காபாலிகர்கள் முதலானவர்கள் தங்கள் தலையையே பலி கொடுக்குமளவுக்கு க்ரூரமான வழிகளைப் பின்பற்றுகின்றனர். ஆகையினால்,

தத்-பவாந்-லோக ரக்ஷார்த்தம் உத்ஸத்ய நிகிலாந்கலாந்

வர்த்ம ஸ்தாபயது ச்ரௌதம் ஜகத் யேந ஸுகம் வ்ரஜேத்

அதாவது?

“தாங்கள்தான் தப்பு வழிக்காரர்களான அத்தனை பேரையும் நிர்மூலம் செய்து லோக ரக்ஷணம் செய்யவேண்டும். வேத வழியை மறுபடி ஸ்தாபனம் பண்ண வேண்டும். ஜகத் உண்மையான ஸுகத்தைப் பெற வேண்டுமானால் அதற்கு ச்ருதிதானே மார்க்கம்? அதைத் தாங்கள் நிலைநாட்ட வேண்டும்” என்று ப்ரார்த்தித்துக் கொண்டார்கள்.

“மாதவீய சங்கர விஜயம்” என்பதில் இப்படிச் சொல்லித் தொடர்ந்து பரமேச்வரன் அவர்களுக்குப் பரமாநுக்ரஹம் பண்ணியதையும் சொல்லியிருக்கிறது. தாமாகவே அவர் லோகரக்ஷார்த்தம் அவதாரம் பண்ண எண்ணி, இவர்கள் பெடிஷன் கொடுக்க வருவார்களா, வருவார்களா என்றுதானே தவித்துக் கொண்டிருந்தார்?

அதனால் உடனே, “உங்களுடைய மனோரதத்தை அப்படியே பூர்த்தி பண்ணுகிறேன். நானே மநுஷ்ய ஜன்மாவை மேற்கொண்டு துஷ்டாசாரங்களை அழித்து, தர்ம ஸம்ஸ்தாபனம் செய்கிறேன்.”முக்யமாக ப்ரஹ்மஸ¨த்ரத்துக்கு பாஷ்யம் பண்ணி அதன் மூலம் வேதத்தின் பரம தாத்பர்யத்தை நிச்சயப்படுத்தி தர்ம ஸம்ஸ்தாபனதைப் பண்ணப் போகிறேன்.

“எல்லாம் ஒரே ப்ரம்மம்தான் என்ற ஸத்யம் மறந்து போய், ஜீவர்களை ப்ரம்மத்திலிருந்து பேதப்படுத்துவதுதான் அத்தனை அனர்த்தத்துக்கும் அஞ்ஞானத்துக்கும் மூலமாயிருப்பது. மாயையின் மோஹன சக்தியாலேயே ஜீவர்கள் ஆக்ரமிக்கப்பட்டு இந்த பேதம் என்கிற – த்வைதம் என்கிற – இருட்டிலே முழுகியிருக்கிறார்கள். நான் சங்கரர் என்ற பெயரோடு யதீந்திரராக பூலோகத்தில் அவதாரம் செய்து ஆத்ம ஞானம் என்ற ஸுர்ய ப்ரகாசத்தால் அந்த இருட்டை அகற்றுவேன்.”

“நாலு சிஷ்யர்களோடுகூடி இந்தக் காரியத்தை நிறைவேற்றுவேன். இதுவரை அவதாரங்கள் செய்த மஹா விஷ்ணுவுக்கு அவருடைய சதுர்புஜங்கள் எப்படி அங்கமோ, அதுபோல எனக்கு இந்த நான்கு சிஷ்யர்களும்”

— என்று சம்புமூர்த்தி கடகடவென்று ஒரே வரமாக வர்ஷித்துவிட்டார்.

“இத்யுக்த்வோபரதாந் தேவாந் உவாச கிரிஜாப்ரிய:”

“தேவர்கள் தாங்கள் சொல்லவேண்டியதைச் சொல்லி முடித்ததும் கிரிஜா ப்ரியர் அவர்களிடம் பேசலானார்” என்று இந்த வரப்ரதானத்தை ஆரம்பித்திருக்கிறது. “கிரிஜா ப்ரிய:” – அதாவது ‘அம்பாளின் காந்தனாக இருப்பவர்’ – என்று ஸ்வாமியைக் குறிப்பிட்டதால், ‘அவளுடைய கருணை, அல்லது அவளாகிய கருணை தூண்டியே அவர் வரம் தந்தது. பார்த்தால் ஏகாங்கியான தக்ஷிணாமூர்த்தியாயிருந்தாலும், அப்போதும் அம்பாள் அவருக்குள் இருந்துகொண்டு தான் இருந்தாள். இரண்டு பேரும் சேர்ந்தே ஆசார்யாளாக அவதாரம்பண்ணியது’ என்று இத்தனை உள்ளர்த்தங்களையும் வைத்துச் சொன்னதாக ஏற்படுகிறது!

ஸ்வாமி சொன்னது :

“மநோதரம் பூரயிஷ்யே மாநுஷம்-அவலம்ப்ய வ: |

துஷ்டாசார விநாசாய தர்ம-ஸம்ஸ்தாபநாய ச ||

பாஷ்யம் குர்வந் ப்ரஹ்மஸுத்ர-தாத்பர்யார்த்த-விநிர்ணயம் |

மோஹன-ப்ரக்ருதி-த்வைத-த்வாந்தம்-அத்யாத்ம-பாநுபி: ||

சதுர்பி: ஸஹித: சிஷ்யை: சதுரைர்-ஹரிவத்-புஜை: |

யதீந்த்ர: சங்கரோ நாம்நா பவிஷ்யாமி மஹீதலே || “

தேவர்கள் வருவதற்கு முந்தியே அவதார detail எல்லாம் ஸ்வாமியே ஜாடா plan பண்ணிவிட்டாரென்று தெரிகிறது! ‘சங்கரர்’ என்று பெயர் வைத்துக்கொள்வதுகூட ஸ்வாமியே பண்ணிவிட்ட ஸங்கல்பம்தான். அந்த நாம மஹிமையை ஜாஸ்தியாக்க இதுவும் ஒன்று! இது ஸந்நியாஸாவதாரமாக இருக்கவேண்டுமென்றும் அவரே தீர்மானித்துவிட்டதை “யதீந்த்ர” என்பது காட்டுகிறது. ‘யதீந்தரர்’ என்றால் ‘யதிச்ரேஷ்டர்’. யதி என்றால் ஸந்நியாஸி.

‘யம’, ‘யத’ என்று ஒரே தாதுவின் அடியாகப் பிறந்த இரண்டு வார்த்தைகள் உண்டு. இரண்டும் அடக்கி வைப்பதையே குறிப்பதாகும். கொட்டம் அடிக்கிற ஜீவனை அடக்கிப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய் தண்டிப்பதாலேயே ‘யமன்’ என்று பேர் ஏற்பட்டிருக்கிறது. ஜீவன் கொட்டமடிப்பதற்குக் காரணம் இந்த்ரியங்களும், மனஸும். இவற்றை அடக்கியவன்தான் ஸந்நியாஸி. அதனால் அவனும் யமன்தான்! ஆனாலும் வெளியில் இன்னொரு ஆஸாமியாக இருந்துகொண்டு தாற்காலிகமாக மட்டும் கொடூரமான முறையில் அடக்கி வைப்பவனை ‘யமன்’ என்று சொல்வதால், தன்னைத்தானே ஸாத்விகமான முறையில் ஞானாநுபவத்தால் நிரந்தரமாக அடக்கிக் கொண்டிருப்பவனையும் அப்படிச் சொல்லக்கூடாது என்று, முதலில் ‘ஸம்’ போட்டு ‘நைஸ்’ பண்ணி ‘ஸம்யமி’ என்றே ஸந்நியாஸிகளைச் சொல்வது வழக்கம். அல்லது, இதே இந்த்ரிய நிக்ரஹ, மனோ நிக்ரஹங்களைத் தெரிவிக்கும் ‘யதி’ என்ற வார்த்தையால் குறிப்பிடுவது.

யதிகளில் ச்ரேஷ்டரான யதீந்த்ரராக சங்கராவதாரம் பண்ணுவதென்று தீர்மானித்தபோதே ஈச்வரன் அந்த அவதாரத்தினுடைய தலைசிறந்த பணியாக, Magnum Opus -ஆக ஸுத்ர பாஷ்யம் எழுதுவதென்றுகூட முடிவுபண்ணியிருக்கிறான்! “பாஷ்யம் குர்வன் ப்ரஹ்மஸுத்ர” என்று இதைத்தான் தெரிவித்தது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அதிகார புருஷர் வரிசையே ஆசார்ய பரம்பரை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  தேவர்களின் அவதாரம்
Next