குமாரில பட்டருக்கு ஸஹாயம் செய்வதற்கே இந்த்ரன் ஸுதன்வா என்ற பெயரில் ஒரு ராஜாவாக பூலோகத்தில் பிறந்தானென்று சில புஸ்தகங்களில் இருக்கிறது. யஜ்ஞ கர்மாநுஷ்டானம் தேவர்களின் ப்ரீதிக்கானது என்றால், தேவராஜனான இந்த்ரன் அதைப் புத்துயிரூட்டுபவருக்கு ஸஹாயம் செய்யப்போவது இயற்கைதானே?
இன்னொரு விஷயமும் சொல்லிவிட வேண்டும். குமாரில பட்டர் ஏதோ ஓரளவுக்கு ராஜ ஸஹாயத்தினால் பௌத்தர்களை ஜயித்திருப்பாராயிருந்தாலும், நம்முடைய ஆசார்யாள் அரச பலம் என்பதே கொஞ்சங்கூட இல்லாமல், தம்முடைய அறிவு பலத்தாலும், அநுபவ பலத்தாலும் மட்டுமேதான் வேதாந்தத்துக்கு ஜயம் பெற்றுக் கொடுத்தார். பௌத்த – ஜைன மதங்கள் பெரும்பாலும் ராஜபலத்தில் பரவினவை தான். அப்புறம் மறுபடி வைதிகத்துக்குத் திருப்பும்போதும் அப்பர், ஞான ஸம்பந்தர் ஆகியோர் அப்போதிருந்த பல்லவ, பாண்டிய ராஜாக்களை முதலில் மாற்றியதிலேயே ராஜ்யம் பூராவும் மாறிற்று என்று பார்க்கிறோம். ஆசார்யாள் சரித்ரத்தில் அப்படி எதுவுமில்லை. அவர் நாளில் பெரிய பெரிய ராஜாக்களே இல்லை. அக்காலத்தில் சக்ரவர்த்தியாக எவனும் இருந்து வர்ணாச்ரம தர்மங்களைப் பரிபாலனம் பண்ணாததாலேயே ஸமூஹ ஒழுங்கு முறைகள் கெட்டுப்போயிருந்ததற்கு ஸூத்ர பாஷ்யத்திலேயே ‘ரெஃப்ரன்ஸ்’ இருக்கிறது.1
மற்ற தேவர்கள் ஈச்வராவதாரத்துக்கு ஸஹாயம் பண்ணவும் ஸேவை பண்ணவும் மநுஷ லோகத்துக்கு வரும் போது தேவராஜா வராமலிருக்கலாமா? அதற்காக அவனுக்கும் ஒரு சின்ன ‘பார்ட்’ கொடுத்தாற்போலிருக்கிறது! ஆசார்யாளுக்குப் பெரிய ஸஹாயம் பண்ணிய குமாரில பட்டருக்கு அவன் கொஞ்சம் ஸஹாயம் பண்ணினான்.2
பிறருடைய பெரிய ஸஹாயம் கிடைத்தே கார்யம் முடிக்க முடிகிறது என்றால் அது அவதாரத்துக்குக் குறைவு தானே? அதனால்தான் போலிருக்கிறது, ஆசார்யாளுக்கு பௌத்த நிராகரணத்தில் ரொம்ப ஸஹாயம் செய்த குமாரில பட்டரும் மண்டனமிச்ரருமே வேதாந்தத்தையும் ஒரே கண்டனமாகப் பண்ணி, இதற்கு எதிர்க் கண்டனம் ஆசார்யாள் ஒருத்தரே எவர் ஸஹாயமுமில்லாமல் முழுக்கப் பண்ணி அவர்களை ஜயித்து அவதாரத்தின் பெரிய சக்தியைக் காட்டும்படி ஏற்பட்டிருக்கிறது!
இந்த இரண்டு பேரிலுங்கூட ஆசார்யாள் குமாரில பட்டரிடம் அதிகம் வாதப்போர் செய்யவேண்டியிருக்கவில்லை. அவருடைய தேஹ வியோக ஸமயத்தில்தான் ஆசார்யாள் அவரை ஸந்தித்ததே. மண்டன மிச்ரருடன் தான் 21 நாள் விடாமல் வாதப் போர் நடத்தி ஜயித்தார்.
குமாரில பட்டர் பெரிய க்ரந்த கர்த்தாவாகவும், மண்டன மிச்ரர் பெரிய அநுஷ்டான கர்த்தாவாகவும் இருந்தார்கள். கர்மாநுஷ்டானம் நிறையப் பண்ணவேண்டுமென்றால் க்ருஹஸ்தராகத்தான் இருக்கவேண்டும். அப்போது பத்னி இருந்துதானே ஆகணும்? அதனால்தான் ப்ரம்மா மண்டன மிச்ரராக வந்தபோது ஸரஸ்வதியும் ஸரஸவாணி என்ற பெயரில் அவதரித்து அவருக்குப் பத்னியானாள்.
இன்னொரு காரணமும் உண்டு. அறிவுக் கடலாக, ஸர்வஜ்ஞராக ஆசார்யாள் இருந்து காட்டவேண்டியிருந்தது. அவரைப் பரீக்ஷித்துப் பார்த்து அவர் ஸர்வஜ்ஞர் என்று தீர்ப்புக் கொடுக்க ஒருத்தர் இருக்கவேண்டுமல்லவா? யார் அப்படி இருக்கமுடியும்? அறிவுத் தெய்வமான, வித்யாதி தேவதையான ஸரஸ்வதிதானே? அதனாலும் அவள் அவதரிக்க வேண்டியிருந்தது.
குமாரில — மண்டனர்கள் பிறந்து பெருமளவு பௌத்த நிராகரணம் செய்த பின்னரே ஆசார்யாள் அவதரித்தது.
அதாவது தேவர்கள் வந்து ப்ரார்த்தித்துக்கொண்ட பிறகும் ஸுமார் ஐம்பது வருஷம் தள்ளியே ஸ்வாமி அவதரித்திருக்க வேண்டும். நன்றாகப் பசித்துச் சாதம் போட்டால்தான் முழு ஸத்தும் உடம்பில் ஒட்டும் என்கிற மாதிரி நன்றாகக் காக்க வைத்து அவதாரம் பண்ணினார் போலிருக்கிறது!
தேவர்கள் கொடுக்க வேண்டிய ‘பெடிஷன்’ வந்தாகிவிட்டது! யோக்யதாம்சமுள்ள ஒரு தம்பதி அவதார புத்ரனைப் பெறுவதற்குக் கொடுக்க வேண்டிய பெடிஷனும் அப்புறம் வந்தது.
‘அவதார புத்ரனுக்கு அப்பா அம்மாவான அந்தப் புண்யசாலிகள் யார்? பரம புண்யமான அவதாரம் எப்படி ஏற்பட்டது? எந்தப் புண்யகாலத்தில், எந்த தேசத்தில் எந்த ஊரில் நடந்தது?’ — பார்ப்போம்.
1 I.3.3.33
2 க்ரகசன் என்ற காபாலிகள் பெரிய கோஷ்டி சேர்த்துக்கொண்டு ஆசார்யாளைப் பரிவாரத்தோடு அழிப்பதற்கு வந்தான்; அப்போது எதிர்த்தாக்குதல் நடத்த மன்னன் ஸுதன்வன் வந்தான்; ஆயினும் ஆச்சார்யாள் ஒரு ஹூங்காரம்செய்தே அக்காபாலிகர்களை விரட்டிவிட்டார் என்று ஒரு நிகழ்ச்சி மாதவீய சங்கர விஜயத்தில் காண்கிறது.