ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – “அபிநவ சங்கரர்” : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அவர்களுடைய ஆர்க்யுமென்டில் இன்னும் இரண்டு பாக்கி இருக்கின்றன. கம்போடியக் கல்வெட்டில் ஒரு ‘பகவத் சங்கர’ரின் காலில் அறிஞருலகம் முழுதும் தாமரையை வண்டுகள் மொய்ப்பதுபோலத் தங்களுடைய சிரஸுகளைத் தாழ்த்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறதே, அது நம்முடைய ஆதி சங்கர பகவத்பாதாளைத் தவிர யாராயிருக்க முடியும்? “கல்வெட்டிலிருந்து அந்தக் காலம், கி.பி. எட்டாம் நூற்றாண்டின் முடிவு பாகத்திலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப பாகவம் வரை ஆசார்யாளின் காலம்’ என்பதற்கும் ஒத்துப்போகிறதே! என்ன சொல்கிறீர்கள்?” என்பது ஒரு ஆர்க்யுமென்ட். இன்னொன்று நம் ஊரிலேயே வழங்கும் ஸங்கேதக் கணக்கு ச்லோகம் – கலியில் 3889-ம் வருஷமான கி.பி. 788-ஐச் சொல்லும் “நிதிநாகேபவஹ்ந்யப்தே” ச்லோகம்.

இந்த இரண்டும் ஒன்றையே, ஒருவரையே குறித்ததாகத் தெரிவதால் இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலாகச் சொல்லி விடலாம்.

ஆசார்ய பீடங்களில் ஆதி பகவத்பாதாளுக்கு அப்புறமும் மஹாபெரியவர்களாக லோக ப்ரஸித்தயுடனிருந்த சில ஸ்வாமிகள் வந்திருக்கிறார்கள். இப்போது ஆசார்யாளின் க்ரந்தங்களாக, ஸ்தோத்ரங்களாக வழங்கி வருகிறவற்றில் சில இப்படிப்பட்டவர்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்றேன் அல்லவா? நமக்கு நல்ல சரித்ர ஆதாரங்களுடன் தெரிபவராக வித்யாரண்ய ஸ்வாமிகள் இருக்கிறார். பதிநாலாம் நூற்றாண்டில் அவதாரம் பண்ணிய அவர்தான் விஜயநகர ஸாம்ராஜ்யம் ஏற்படுவதற்கே காரணமாயிருந்தவர். அவர் அவதாரம் செய்திருக்காவிட்டால் தக்ஷிணதேசம் முழுவதையும் துருஷ்க மதம் கபளீகரம் பண்ணியிருக்கும். துருஷ்கர்களை அடக்கி ஹிந்து ஸாம்ராஜ்யம் ஏற்பட வழி வகுத்தார். ஹிந்து மதத்திலேயே அப்போது கர்நாடகம், அதையொட்டிய ஆந்த்ர ஸீமைப் பகுதிகள் ஆகியவற்றில் மத்வ மதமும் வீரசைவமும் அத்வைதத்தைக் கபளீகரம் பண்ணாமலும், அவர்தான் ரக்ஷித்துக் கொடுத்தார். ச்ருங்கேரி மடத்துக்கு ஒரு புது சோபையை உண்டாக்கித் தந்து இன்னும் அநேக மடங்களையும் அந்தப் பிரதேசத்தில் ஸ்தாபித்து நம் ஆசார்யாளின் ஸம்ப்ரதாயம் தழைத்தோங்கும்படிச் செய்தார். ‘பஞ்சதசீ’, ‘ஜீவன் முக்தி விவேகம்’, ‘வையாஸிக ந்யாயமாலை’ முதலான அநுபவ க்ரந்தங்களான உசந்த அத்வைத நூல்களை உபகரித்த அவரேதான் பூர்வாச்ரம ஸஹோதரருடன்கூட நாலு வேதங்களுக்கும் பாஷ்யம் ஏற்படவும் காரணமாயிருந்தவர். ஸாயண பாஷ்யம் என்று அதற்குப் பேர். அவரை ஆசார்யாளுக்குள்ளது போலவே ஸ்தோத்ரங்களும் பிருதாவளிகளும் சொல்லி அந்த மடங்களில் கொண்டாடுகிறார்கள்.

இம்மாதிரி இங்கே “அபிநவ சங்கரர்” என்றே ப்ரஸித்தி பெற்ற ஒருவர் இருந்திருக்கிறார்1. ‘அபிநவ’ என்றால் ‘மறு அவதாரம்’ என்று அர்த்தம். ஆதி ஆசார்யாளே இவராக மறுபடி வந்திருக்கிறார் என்று அவரை உலகம் கொண்டாடியிருக்கிறது. அதனால்தான் “தீர சங்கரேந்த்ர ஸரஸ்வதி” என்ற அவருடைய பெயர் மறைந்துபோய் “அபிநவ சங்கரர்” என்றே வழங்கலாயிற்று. ‘சங்கரேந்த்ர விலாஸம்’ என்பதும் ‘ஸத்குரு ஸந்தான பரிமாளம்’ என்பதும் அவருடைய சரித்ரத்தைச் சொல்லும் இரண்டு புஸ்தகங்கள்.

ஆசார்யாளுக்கு அப்புறம் சில நூற்றாண்டுகள் வைதிக மதம் மட்டும் கொடி கட்டிப் பறந்தாலும் அப்புறம் மறுபடி பௌத்தம் முதலிய மதங்களும், காபாலிகம் முதலான வாமசார மதங்களும் கிளம்பின. முன்மாதிரி இவை ஜன ஸமூஹத்தில் பெரிய செல்வாக்குப் பெறமுடியாதபடி ஆசார்யாள் போட்டுக் கொடுத்த அஸ்திவாரமே உறுதியாயிருந்தது. ஆனாலும் ராஜாக்களிலும், தத்வ வாதத்தில் ப்ரியமுள்ளவர்களிலும் சிலர் பௌத்தத்துக்கு ஆதரவு தந்ததால் அது கணிசமான following பெற்ற மாதிரித் தெரிந்தது. நாகரிகம் போதாதவர்களும், ‘ரஹஸ்ய அநுஷ்டானம்’ என்று பெத்தப் பெயர் கொடுக்கும் சில பேரும் வாமாசார மதங்களில் போனார்கள். ஆசார்யாளுக்கு 1300 வருஷத்துக்கப்புறம் அபிநவ சங்கரர் தோன்றி ஆசார்யாளை போலவே தேசம் பூராவும் ஸஞ்சாரம் பண்ணி, அந்த மற்ற மதங்களை நிராகரணம் செய்து ஸர்வஜ்ஞ பீடமும் ஏறியிருப்பதாக அவருடைய சரித்ரங்களிலிருந்து தெரிகிறது. அவர் அந்நிய தேசங்களுக்கும் போய் தர்மோத்தரணம் செய்தாரென்றும் சொல்லியிருக்கிறது. சைனாக்காரர்கள், துருஷ்கர்கள், பாஹ்லீகர்கள் (Balkh என்று ஆப்கானிஸ்தானில் உள்ள இடம்) முதலியவர்கள்கூட அவரைத் தங்கள் ஆசார்யராகப் பூஜித்தார்கள் – சீன – துருஷ்க – பாஹ்லிகாத்யைஸ் – ஸ்வபராசார்யதயா ஸ்துதம் என்று “குரு ரத்ந மாலா” சொல்கிறது. (ச்லோகம்-66)

இவரையும் ஆதிசங்கர பகவத் பாதரையும் ஒன்றாகவே நினைத்துத்தான் சில சங்கரவிஜய புஸ்தகங்களிலேயே மாறுபாடான விஷயங்களைச் சொல்லியிருக்கக்கூடும்.

ஆதி ஆசார்யாளின் அவதார காலத்தைச் சொல்வதாக நினைக்கப்படும் “நிதிநாக”ச்லோகமும் வாஸ்தவத்தில் இந்த அபிநவ சங்கரரின் அவதாரத்தைச் சொல்வதுதான் என்று பண்டிதர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்…

“ஸுஷமா” வ்யாக்யானத்தில்2 சங்கரேந்த்ர விலாஸத்திலிருந்து இவருடைய அவதார காலத்தை quote செய்திருக்கிறது. அதுவும் ஸங்கேத ஸங்கியையில்தான் இருக்கிறது.

“சேவதி-த்விப-திசா- (அ)நல வர்ஷே திஷ்ய” என்பது இங்கே கொடுத்துள்ள காலக் கணக்கு3. ‘சேவதி’ என்றால் நிதி. ‘நவநிதிகள்’ என்பதால் அது 9-ஐக் குறிக்கும். ‘த்லிபம்’-யானை. ‘அஷ்ட கஜங்கள்’ என்பதால் அது 8. ‘திசா’ என்றால் திசைதான். திசைகளும் 8 தானே? ‘அநல’-அக்னி. அது 3. அதனால் இந்த எண் 9883 என்றாகும். திருப்பிப் போட்டால் 3889. ‘திஷ்ய’ என்பது கலி. கலியில் 3889-ம் வருஷம். கி.பி. 787-788.

இப்போது ஹிஸ்டரி புஸ்தகங்களில் சொல்லும் கி.பி. 788 அபிநவ சங்கரரின் அவதார வருஷமே என்று ஏற்படுகிறது! இதே வருஷத்தைத்தான் “நிதிநாக”ச்லோகத்திலும் சொல்லியிருக்கிறது! அது ஆதி ஆசார்யாளின் அவதார காலமாக்கும் என்று நம்மிலேயே பலபேர் பல காலமாக நினைத்து வந்திருக்கிறார்கள்!

இதை அடிப்படையாக்ககொண்டே ஓரியன்டலிஸ்ட்கள் தங்களுடைய theory-ஐ build பண்ணியிருக்கிறார்கள்.

பக்கபலமான இன்னொரு பாயிண்டும் இருக்கிறது. “நிதிநாக”ச்லோகம், அபிநவ சங்கர சரித்ர ச்லோகம் இரண்டிலும் கல்யப்தம் (கலியில் இத்தனாம் வருஷம் என்று) சொல்லியிருப்பதோடு ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரத்தில் (ப்ரபவ முதலான அறுபது வருஷங்களில்) இன்ன வருஷம், மாஸம், திதி என்றும் சொல்லியிருக்கிறது. அதுவும் முழுக்க ஒன்றாகவே இருக்கிறது! விபவ வருஷம், வைசாக மாஸம், சுக்ல பக்ஷ தசமி என்றே இரண்டிலும் இருக்கிறது!

ஆதி ஆசார்யாள் ஜனனம் நந்தன வருஷம் என்று மற்ற ஆதாரங்களிலிருந்து தெரிகிறது. இங்கேயோ விபவ வருஷம் என்று இருக்கிறது. நாம் சொல்கிற கி.மு. 509 ஒரு நந்தன வருஷமாகவும், அவர்கள் சொல்லும் கி.பி. 788 ஒரு விபவ வருஷமாகவுமே இருக்கின்றனவென்றும் கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள்.

அதைவிட இன்னொன்று : தெய்விக புருஷர்கள் எந்த ப்ரபவாதி வருஷத்தில் பிறந்தார்கள் என்று பெருமாபாலும் தெரியவில்லை. ராமர் எந்த வருஷம்? க்ருஷ்ணர் எந்த வருஷம்? பண்டிதர்கள் வேணுமானால் மண்டையை உடைத்துக்கொண்டு கண்டு பிடிக்கலாமே தவிர லோகத்தில் ஜயந்தி என்று கொண்டாடும்போது வருஷத்தை யாரும் நினைப்பதில்லை. மாஸம், பக்ஷம், திதி ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு வருஷமும் ஜயந்தி கொண்டாட வேண்டியிருப்பதால் இவைதான் முக்யமாகத் தெரிகின்றன. ராமர் சைத்ர மாஸ சுக்ல பக்ஷநவமி, க்ருஷ்ணர் ச்ராவண மாஸ க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி-என்றிப்படி. அதிலும் திதிக்குத்தான் ரொம்ப முக்யம், ரொம்ப ப்ரஸித்தி-ராம நவமி, கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி, ஸ்கந்த ஷஷ்டி என்பதாக ஜயந்தியின் பேரிலேயே திதிதான் இருக்கிறது.

ஆசார்யாள் விஷயமாக, இன்றைக்கும் தேசம் பூராவிலும் அவருடைய ஜயந்தி வைசாக மாஸத்தில் சுக்ல பக்ஷ பஞ்சமியில்தான் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு ச்லோகத்திலுமோ பஞ்சமியைச் சொல்லாமல் தசமியைச் சொல்லியிருக்கிறது. அதனால் அந்த தசமியை அவதார தினமாகக் கொண்டவரும் பஞ்சமியை அவதார தினமாகக் கொண்டவரும் வெவ்வேறான இரண்டு பேர் என்று வைத்துக்கொள்ள இடமேற்படுகிறது.

நடைமுறையில் திதிதான் ஒரு ஜயந்திக்கு முக்யமாயிருந்தது, ப்ரபவாதி வருஷத்தையோ, கலியில் எந்த வருஷம் என்றோ எவரும் நினைத்துப் பார்க்காமலிருக்க, இங்கேயோ திதியை விட்டு விட்டு கலியில் இன்ன வருஷம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு 788-தான் என்று நிர்ணயம் பண்ணியிருப்பது கொஞ்சம் ஆச்சர்யமாயிருக்கிறது! திதி tally-யாவது அவச்யம்.

இந்தக் காரணங்களைக்கொண்டு கி.பி. 788 என்று ஓரியண்டலிஸ்ட்கள் நிர்ணயித்திருப்பது அபிநவ சங்கரரை ஆதி சங்கரராக நினைத்ததால்தான் என்று கி.மு. 509 என்று நம்புகிறவர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.

பாதுகாஸித்தி பெற்று அந்நிய தேசங்களிலும் திக்விஜயம் செய்த அபிநவ சங்கரரையே கம்போடியாக் கல்வெட்டில் இந்த்ரவர்மன் தன்னுடைய குருவான சிவஸோமரின் குரு என்று சொல்கிறானென்றும் கருதுகிறார்கள்.

ஆசார்யாளின் ப்ரதான சிஷ்யர்களாக இருந்த நாலு பேரோடு ப்ருத்வீதவர், சித்ஸுகர், சித்விலாஸர், ஞானகந்தர், விஷ்ணுகுப்தர், அனந்தானந்தர், உதங்கர் (இவரேதான் தோடகர் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு), ஷண் மதங்களைப் ப்ரசாரம் பண்ணிய ஆறுபேர் என்றெல்லாமும் அநேகம் சிஷ்யர்களின் பேர்கள் ‘சங்கரவிஜய’ங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. சிவஸோமன் என்ற பெயர் எங்கேயும் காணோம். அந்நிய தேச ராஜாவின் குருவாயிருந்த ஒருத்தரின் பெயர் இப்படி விட்டுபோயிருக்குமா?

ஆராய்ச்சி என்று போகாமல் அநுக்ரஹம் என்று போகும்போது ‘ஆதி’ என்றும் ‘அபிநவம்’ என்றும் வித்யாஸப்படுத்தவே கூடாதுதான். ‘ஆதி’யினுடைய புது அவதாரமே இவர் என்பதால்தானே ‘அபிநவ’ என்பது? அதனால் இவருக்கு உண்டான ப்ரக்யாதி எல்லாம் அவரைச் சேர்ந்ததாகவே சொல்லிவிடலாம்4. ஈச்வராவதாரமாக முதலில் வந்த ஆதி ஆசார்யாளிடமே அனன்ய பக்தியாகப் பண்ணும்போது அவருக்கும் அபராவதாரமான (அவரே எடுத்த பிற்கால அவதாரமான) இன்னொருவரை அஸலே அவராக வைத்துவிடலாம். எல்லா ஸ்துதியும் அந்த ஆதி புருஷருக்கே என்று வைத்துப் பார்க்கும்போது சிவஸோமன் அவருடைய சிஷ்யரே என்றால் நேர் சிஷ்யரென்று அர்த்தம் பண்ணாமல் சிஷ்ய பரம்பரையில் வந்தவர் என்று வைத்து விடலாம். இப்போது நாம்கூட, ‘நாங்கள் ஆசார்யாள் சிஷ்யர்கள்’ என்று சொல்லிக்கொள்ளவில்லையா? அது மாதிரி நமக்கு 1200 முன்னாலிருந்த கம்போடிய ராஜகுருவை ஏன் சொல்லக் கூடாது? இதெல்லாம் பக்தி பாவத்தில். இப்போது நாம் பக்தியை மூட்டை கட்டி வைத்துவிட்டு கால நிர்ணயம் என்றல்லவா ஆராய்ச்சிச் சர்ச்சையில் இறங்கியிருக்கிறோம்? அதனால் அவர்-இவர் என்று வித்யாஸப்படுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது!


1 ஸ்ரீகாஞ்சி மடத்தின் முப்பத்தெட்டாவது பீடாதிபதிகளாக விளங்கியவர்.

2 61-வது ச்லோகம்.

3 முழு ச்லோகம் வருமாறு:
ஹாயநே(அ)த விபவே வ்ருஷமாஸே சுக்லபக்ஷ தசமீ திந மத்யே |
சேவதி த்விப திசாநலவர்ஷேதிஷ்ய ஏ நமதஸோஷ்ட விசிஷ்டா ||

4 இந்த ரீதியில்தான் போலும், ஆதி அச்சார்யாளைப் பற்றி ஸ்ரீசரணர்கள் குறிப்பிட்டுள்ள ஸந்தர்பங்கள் பலவற்றில் கம்போடியக் கல்வெட்டு ச்லோகத்தை அவருக்கான துதிபோலவே மொழிந்திருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 18. பூர்ணவர்மன் விஷயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  20. நவீன ஆராய்ச்சியாளரிடமே ஒரு மாற்றுக் கருத்து
Next