ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – நவீன ஆராய்ச்சியாளரிடமே ஒரு மாற்றுக் கருத்து : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

கி.பி. 788 என்பது ஸரியாயிருக்காது என்று நவீன கால ரிஸர்ச்காரர்களிலேயே சில பேர் சொல்லி அதற்கு ஒரு காரணம் காட்டுகிறார்கள்:

ஸூத்ர பாஷ்யத்தில் இரண்டு இடங்களில் ஆசார்யாள் சில ஊர்களின் பெயர்களை உதாரணமாகக் குறிப்பிடும்போது பாடலிபுத்ரத்தைச் சொல்லியிருக்கிறார்.

குப்தர்கள் செல்வாக்கிழந்து, அப்புறம் தானேச்வரம், கன்னௌசி ஆகிய தலைநகரங்களிலிருந்து கொண்டு ஆட்சி செய்த ப்ரபாகர வர்தனர், ஹர்ஷ வர்தனர் ஆகியவர்களின் நாளிலேயே பாடலிபுத்ரம் பெருமை இழந்துவிட்டது. ஹர்ஷனின் காலம் 600-650 (சுமாராக). அப்போது இங்கே வந்த ஹுவான்-த்ஸாங் பாடலிபுத்ரம் ஒரே Ruins-ஆக (இடிபாடுகளாக) இருப்பதாக எழுதியிருக்கிறார். அப்புறம் கி.பி. 750-வாக்கில் வெள்ளம் வந்து அந்த ஊரை நன்றாக அழித்து விட்டிருக்கிறது. நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடுதான் மறுபடி அது ஒரு மாதிரி எழும்பி, அப்புறம் பெரிசாகி, இப்போது ‘பாட்னா’வாக இருக்கிறது. ஆசார்யாள் காலம் என்னும் 788-820-ல் அந்த ஊரே இல்லை. தம்முடைய காலத்துக்கு 150-200 வருஷத்துக்கு முன்னாலிருந்தே பெருமைக் குன்றிப்போய், நாற்பது-ஐம்பது வருஷம் முந்திதான் வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்ட ஒரு ஊரையா, அது தற்காலத்திலும் இருந்த மாதிரி உதாரணம் காட்டியிருப்பார்? – என்று கேட்கிறார்கள்.

இதைவிட இன்னொரு முக்யமான பெரிய காரணமும் காட்டுகிறார்கள். எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்த தேசம் முழுதிலும் ஆசார்யாளின் பெரிய ஸாதனையாகச் சொல்வது அவர் பௌத்த மதத்தை நிராகரணம் செய்ததைத்தான். அவருக்குக் கொஞ்சம் முந்தி குமாரிலபட்டரும் கொஞ்சம் பிந்தி உதயனரும் நிறைய பௌத்த கண்டனம் பண்ணினார்களென்றாலும் ஆசார்யாளும் அந்தப் பணியை சக்திகரமாகச் செய்துதானிருக்கிறார். பாஷ்ய புஸ்தகங்களில் அதிகம் எழுதாவிட்டலும் ஊர் ஊராக வாதம் செய்யப்போனதும், ஊர் ஊராக நம்முடைய ஆலய வழிபாட்டுக்குப் புத்துயிர் கொடுத்தபோதும் அவர் பௌத்தத்தை வன்மையாக எதிர்த்தே அகற்றி இருக்கிறார். அவர் காலத்தில் பௌத்தம் ஜன ஸமூஹத்தைக் கலக்கும் அளவுக்கு வீர்யத்துடனிருந்த அவரே ஸூத்ர பாஷ்யத்தில் தெரிவித்திருக்கிறார்: வைநாசிகை : ஸர்வோ லோக ஆகுலீக்ரியதே1 -என்று வைநாசிகர்கள் என்பது பௌத்தகளுக்கேதான் இன்னொரு பேர். அவர்கள் ஸர்வ லோகத்தையும் ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதனால் அவருடைய காலத்தில் பௌத்தம் இங்கே ஒரு active force-ஆக இருந்தது என்று நிச்சயமாகிறது.

இதைக் கொண்டுதான் நவீன ஆராய்ச்சிக்காரர்களிலேயே ஒரு சிலர் கி.பி. 788 என்பது ஸரியில்லை என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அதற்கு முந்தியே இந்தியாவில் பௌத்தம் நன்றாகப் படுத்துப் போய்விட்டது. ஹர்ஷரின் காலத்தில்-788க்கு 150 வருஷம் முன் – வந்த ஹுவான்-த்ஸாங்கே பௌத்தம் க்ஷீணித்துப் போயிருப்பதைத் தெரிவித்திருக்கிறார். ஹர்ஷர் கொஞ்சம் புத்துயிரூட்டிப் பார்த்தார். ஆனால் அது ஜனஸமூஹம் முழுதையும் கவரவில்லை; பிக்ஷுக்கள், ஸமயவாதிகளை மட்டுமே கவர்ந்தது – சற்று முன்பே (இவ்விஷயம்) சொன்னேன். ஆசார்யாள் அவதாரம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு முடிவு என்றால், அப்போது வங்காளத்திலிருந்து வட இந்தியாவின் கணிசமான பகுதி அடங்கலாக ஆண்டு வந்த பால வம்ச ராஜாக்கள் பௌத்த மத அபிமான முள்ளவர்கள்தான். ஆனாலும் அவர்களும் தங்களளவில் அபிமானத்தார்களே ஒழிய, ‘லோகமெல்லாம் கலக்கப்படுகிறது’ என்று சொல்லும்படி இல்லை என்று நவீன ஹிஸ்டரிக்காரர்களே சொல்கிறார்கள். பௌத்தத்தில் அப்போது ரஹஸ்யமான தாந்த்ரிக உபாஸனைகளே ஜாஸ்தியாகிக் கொண்டு வந்து, அது இங்கே வேர் பிடிக்க முடியாமல் திபேத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

[சிரித்து] ‘சங்கர மடத்து சாமியார் என்னவோ ஸ்வபக்ஷமாக (தன் கட்சிக்கு ஆதரவாக)ப் பேசுகிறார்’ என்று நினைக்காமல் ஹிஸ்டரியில் ஸ்டான்டர்ட் புஸ்தகம் எதுவானாலும் எடுத்துப் பார்த்தால் தெரியும், ஆசார்யாளின் காலம் என்று அந்தப் புஸ்தகங்களில் சொல்லப்படும் காலத்துக்கு முந்தியே இந்தியாவில் பௌத்த மதம் “லோகத்தை கலக்குகிறது” எனத் தக்க force-ஆக (சக்தி வாய்ந்த அமைப்பாக) இல்லாமற்போய்விட்டதென்று.

நாலந்தா ஸர்வகலாசாலை போன்ற இடங்களிலும் சில பௌத்த மடாலயங்களிலும் மட்டுமே பிக்ஷுக்களிடமும், சில படிப்பாளிகளிடையிலும் அந்த மதம் இருந்து வந்தது. முஸ்லீம் படையெடுப்புவரைகூட அப்படித் தொடர்ந்து இருந்து வந்தது. ஜனஸமூஹத்தைப் போட்டுக் கலக்குவதாகவோ, ஆசார்யாள் போன்ற ஒருவர் அதை நிராகரணம் பண்ணியதுதான் அவருடைய மஹா பெரிய வெற்றிச் சாதனை கொண்டாடும் அளவுக்கோ அது நிச்சயமாக அந்தக் காலத்தில் சக்தியோடில்லை. ஆகையால் ஆசார்யாள் பௌத்தத்தோடு பெரிசாக யுத்தம் பண்ணினாரென்றால் அது shadow fight (நிழலுடன் சண்டை செய்வது) மாதிரிதானாகும்!

இந்தக் காரணம் சொல்லியே நவீன ஆராய்ச்சிக்காரர்களிலும் சில பேர் கி.பி. 788-829 என்பதை ஆக்ஷேபிக்கிறார்கள். அவர்களுடைய ஹிஸ்டரிப்படி, கி.பி. நாலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குப்த ஸாம்ராஜ்யம் தோன்றியபோதே நம் தேசத்தில் ஹிந்து மதம் பெரிய மறுமலர்ச்சி கண்டு பௌத்தம் க்ஷீணதசை அடைந்திருந்தது. ‘இதற்கு ஆசார்யாளே காரணமாயிருந்திருக்கலாம். அதனால் அவரை கி.பி. 800-லிருந்து ஐநூறு வருஷம் முற்காலத்திற்குக் கொண்டுபோக இடமிருப்பதாகத் தோன்றுகிறது என்று இவர்கள் சொல்கிறார்கள்.

“நாம் சொல்கிறபடி ஆசார்யாள் 2500 வருஷம் முந்தி என்றால் அவருக்குப் பிற்பாடும், ‘குப்தா ஏஜு’க்குப் பிறகுங்கூட அநேக பீரியட்களில் பௌத்தம் இந்த தேசத்தில் இருந்துதானே இருக்கிறது? எத்தனையோ விஹாரங்களும் சைத்யங்களும் கிறிஸ்து சகாப்தத்திலும் சில நூற்றாண்டுகள் வரையில் தோன்றியதாக அழுத்தமான சான்றுகள் இருக்கின்றனவே? அவர் பௌத்தத்தை அப்படியே 2500 வருஷம் முந்தியே வெளியேற்றிவிட்டாரென்றால் எப்படி?”

அப்போது அவர் அனுப்பியது வாஸ்தவம்தான். அவருடைய காலத்தில் 72 மாற்று மதங்களையும் அவர் இல்லாமல் பண்ணி ஜகதாசார்யாளாக விளங்கியது வாஸ்தவந்தான்.

ஆனாலும் இந்த தேசத்தில் எப்போதும் ரிலிஜன், ஃபிலாஸஃபி ஆகியவற்றில் ஸ்வதந்த்ரமாகச் சிந்தனை பண்ணுவதற்கும், அநுஷ்டானம் பண்ணுவதற்கும் தாராளமாக இடம் கொடுத்தே வந்திருக்கிறது. அதனால் ஆசார்யாளுக்கு அப்புறமும் அவ்வப்போது பௌத்தம், ஜைனம் முதலியவற்றில் சிந்தனையைச் செலுத்திப் புஸ்தகம் எழுதியவர்கள் தோன்றியிருக்கிறார்கள். அந்த மதங்கள் மறுபடி தலைகாட்டியிருக்கின்றன. பல ராஜாக்கள் அந்த மதங்களைத் தழுவியிருக்கிறார்கள். பெரிய பெரிய விஹாரங்களும் பள்ளிகளும் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனாலுங்கூடப் பொது ஜனங்கள் எல்லாருடைய மதமாக பௌத்தமோ சமணமோ பிற்காலங்களில் இல்லவே இல்லை. அந்த மதங்களைச் சேர்ந்த பிக்ஷுக்கள், அபிமானித்த ராஜாக்கள், ‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்று பயந்துகொண்டு ராஜாக்களைப் போலவே பண்ணியே கொஞ்சம் ப்ரஜைகள், நிஜமான கன்விக்ஷனிலேயே அந்த மதங்களை ஏற்றுக்கொண்ட இன்னும் கொஞ்சம் பேர் — என்றெல்லாம் கூட்டிப் பார்த்தாலும்கூட மொத்த ஸமுதாயத்தில் ஒரு சின்னப் பங்குதான் ஆசார்யாளுக்குப் பிற்காலங்களில் அம்மதங்களை அநுஸரித்தது. இது நான் இட்டுக் கட்டிச் சொல்வதில்லை. முன்ஷி போன்றவர்கள் இப்போது ஹிஸ்டாரிகலாக ரிஸர்ச் செய்தே இப்படிச் சொல்வதுடன் வெள்ளைக்காரர்களிலேயே சில சரித்ராசிரியர்கள் ஸமீப காலமாக இதை ஒப்புக்கொண்டு எழுதி வருகிறார்கள்2.

ஆக, 2500 வருஷத்துக்கு உட்பட்ட பௌத்த சின்னங்கள் நம் தேசத்தில் இருந்திருப்பதால் ஆசார்யாளும் அதற்குள்தான் வந்திருக்க வேண்டுமென்பதில்லை. அவர் நாளில் அவர் நிராகரணம் பண்ணி, அப்புறம் சில நூற்றாண்டுகள் வைதிக ஹிந்து மதம் மாத்திரமே இங்கே இருந்துவிட்டு, அதற்கும் அப்புறம் அவ்வப்போது தலைதூக்கிய பௌத்தத்துக்கு அடையாளங்கள்தான் நாம் பார்ப்பது. பிற்காலங்களிலும் நம்முடைய மதபுருஷர்கள் பலர் பெரியவர்களாகத் தோன்றி அவைதிக மதங்களைக் களைந்திருக்கிறார்கள். க்ருஷ்ணர் தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணியும் அப்புறம் மறுபடி அதர்மம் ஓங்கியபோது ஆசார்யாள் அவதரித்து ஸரிப்பண்ணவேண்டி வரவில்லையா? அப்படியே ஆசார்யாளுக்குச் சில நூற்றாண்டுகள் பிற்காலத்திலிருந்தும் ஏற்பட்டது. முடிவாக ஒரு மாதிரி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பௌத்தம் நன்றாக க்ஷீணித்து, பிக்ஷு ஸங்கம், ஸர்வ கலாசாலைகள் ஆகியவற்றில் மட்டும் இருந்து வரும்படி ஆயிற்று. இதற்கும் நூற்றாண்டு தள்ளியே ஆசார்யாள் அவதாரம் செய்ததாக வெள்ளைக்காரர்கள் சொல்லி அவர்தான் ப்ரமாதமாக பௌத்தத்துடன் மோதி ஜயித்தாரென்றால் அது ஒன்றுக்கொன்று ஒவ்வவில்லை என்பதுதான் பாயின்ட்.

கி.பி. எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டில் ஏதோ கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த பௌத்தத்தையும் களைந்து, அதோடு ஹிந்து மதம் என்று சொல்லிக்கொண்டே மறுபடிக் கிளைந்திருந்த பல அவைதிக வழிகளையும் அகற்றியவர்தான் அபிநவ சங்கரர்; அதோடு தூரக் கிழக்கு நாடுகள் முதலியவற்றிலும் நம் மதம் பரவச் செய்தவர் என்று தெரிந்துகொள்ள முடிகிறது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 19. 'அபிநவ சங்கரர்'
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  21. கி.மு. முதல் நூற்றாண்டு என்னும் கருத்து
Next